ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவை, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிளிக்ஸ் டேக் ஆன் சீஸர் (1999)’, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: மிஷன் க்ளியோபட்ரா (2002)’, ‘ஆஸ்டெரிக்ஸ் அட் தி ஓலிம்பிக் கேம்ஸ் (2008)’ & ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: காட் சேவ் பிரட்டானியா (2012)’ ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம்’ எனும் ஐந்தாவது படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடிப் படமாக முதல்முறையாக இயற்றப்பட்டுள்ளது.
தனது அம்மாவையும், தாய் நாட்டையும் காப்பாற்றித் தரும்படி, நீண்ட நெடிய பயணம் செய்து, ரோமப் பேரரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் ‘கெளல்’க்கு வருகிறார் சீன இளவரசி. கெளலின் தலைவர், ஆஸ்டெரிக்ஸையும் ஓபிலிக்ஸையும் சீனாவிற்கு அனுப்பி வைக்கிறார். சீனப் பேரரசியையும், சீனப் பேரரசையும் ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ் எப்படிக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
இப்படம் முழு நீள ஆக்ஷன் – காமெடியாக இல்லாமல், ஆங்காங்கே தான் சிரிக்க வைக்கின்றன. ஒப்பற்ற வீரரான ஆஸ்டெரிக்ஸை, அப்படிச் சித்தரிக்காமல் ஒருதலைக் காதலில் ஏங்குபவராகவும், சண்டைக்கு முந்தாதவராகவும் சித்தரித்துள்ளனர். ஆனால், ஓபிலிக்ஸின் உடல்பலத்தையும், அப்பாவித்தனத்தையும் அழகாகக் கொண்டு வந்துள்ளனர். அவருக்கும், இளவரசியின் மெய்க்காப்பாளினி தட் ஹானுக்குமான காதல் நன்றாக உள்ளது. தற்காப்புக் கலை நிபுணரான தட் ஹானால், தனியாகவே பேரரசியை மீட்டிருக்கமுடியும் என்றளவுக்கு ஆக்ரோஷமாகச் சண்டையிடுகிறார். அவருடன் ஒப்பிடுகையில், ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸின் ஆக்ஷன் கம்மியாகவே உள்ளது. ஆஸ்டெரிக்ஸ் & ஓபிளிக்ஸ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும்.
மையக்கதையை விட, ஜூலியஸ் சீசருக்கும், கிளியோபட்ராவுக்கும் இடையிலான ஊடல், காதல் அத்தியாயங்கள், மிகக் குறைவான காட்சிகளிலே வந்தாலும் ரசிக்கும்படி பகடி செய்துள்ளனர். பாவம், ஜூலியஸ் சீசர், கிளியோபட்ராவையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறார், கெளல்வாசிகளான ஆஸ்டெரிக்ஸ் & ஓபிளிக்ஸையும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றார். வலுவான வில்லன் பாத்திரத்தைக் கட்டமைக்காதது படத்தின் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது.
ஓபிளிக்ஸின் வளர்ப்பு நாய் டாக்மேட்டிக்ஸ் மிக க்யூட்டாக உள்ளது. குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் தமிழ் டப்பிங் படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் சுவையாக்குகிறது. குழந்தைகளுடன் பார்த்து மகிழ ஏற்றதொரு படம்.