ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனுஷ் நடித்த ஹிந்தி டப்பிங் படம்.
பீஹார் செல்லும் மருத்துவர் விஸ்வநாத் ஐயருக்கு, ரின்கு எனும் பெண்ணுடன் கலாட்டா ஏதுமின்றிக் கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர் ரின்குவின் உறவினர்கள். அதன் பின் ரின்கு செய்யும் கலாட்டாவால், விஸ்வநாதினுடைய கல்யாணம் நிற்கிறது. விஸ்வநாதிற்கு ரின்கு மீது காதல் ஏற்பட, ரின்குவோ சஜ்ஜத் அலி கான் என்பவரைக் காதலிக்கிறாள். தன் மனைவி மீதான விஸ்வநாதின் காதல் வென்றதா, சஜ்ஜத் அலி கானுடனான ரின்குவின் கலாட்டா காதல் வென்றதா என்பதே படத்தின் கதை.
மிகவும் கலர்ஃபுல்லான படம். எதையுமே சீரியஸாக அணுகாமல் ஓர் இளமைத் துள்ளலுடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. ரின்குவாக நடித்துள்ள சாரா அலி கான், படத்தின் இந்தத் துள்ளலான ஓட்டத்திற்கு உதவியுள்ளார். மணிரத்னம் பட நாயகிகளை ஞாபகப்படுத்துகிறார். மருத்துவர் விஸ்வநாத் ஐயராக தனுஷும், சர்க்கஸில் மேஜிக் செய்யும் சஜ்ஜத் அலி கானாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். யானை மீது ஆர்ப்பாட்டமாக அக்ஷய் குமார் தோன்ற, மனதிற்குள் காதலை வைத்துக் கொண்டு தவிப்பவராக தனுஷ் கலக்கியுள்ளார்.
காதலன் சஜ்ஜத் அலி கான், ரின்குவினுடைய கற்பனைத் தோற்றமெனத் தெரிய வருகிறது மருத்துவர் விஸ்வநாதனுக்கு. படத்தின் துள்ளல் ஓட்டத்தில் அதன் பின் ஒரு சுணக்கம் நேரிடுகிறது. ஒரு நல்ல திரைக்கதையால், ‘ஈ’ பழிவாங்குகிறது என்பதைக் கூட உணர்ச்சிபூர்வமாகப் பார்வையாளர்களோடு ஒன்ற வைக்க இயலும். ரின்குவின் குழந்தைப் பருவ வலியைப் பார்வையாளர்களுக்குக் கடத்த, ஹிமான்ஷு ஷர்மாவின் திரைக்கதையால் முடியவில்லை. கண்டதும் காதலாகவே தனுஷின் காதலும் எந்த எமோஷ்னல் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தும்பாட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பங்கஜ் குமார் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரின்குவின் துள்ளலை வெளிப்படுத்துவதில் ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்து பங்கஜ் குமாரும் அசத்தலான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். ஆனந்த் L. ராய், லாஜிக் இல்ல விஷுவல் மேஜிக்கில் நம்பிக்கை வைத்துப் படத்தை இயக்கியுள்ளார்.
மேஜிக் ஷோவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ அசர வைப்பதாக இருந்தாலும், ஷோ முடிந்ததும் அது மனதில் தங்காமல் நழுவி விடும். கலாட்டா கல்யாணமும் அப்படியொரு மேஜிக்காகக் கடந்து மனதில் நிற்காமல் போகிறது.