த்ரில்லர் கதை போல் துவங்கி, காதல் கதையாகப் பயணித்து டைம்லூப் கதையாக முடிகிறது பனாரஸ்.
ஹீரோ ஜையீத் கான் தன் பணக்காரத்தனத்தை சவால்களிலும் ஜாலி கேளிக்கைகளிலும் காட்டக்கூடியவர். அவர் தன் நண்பர்களின் சவால் ஒன்றை ஏற்று நாயகி சோனல் மான்டிரோவுடன் அவருக்குத் தெரியாமல் ஒரு புகைப்படம் எடுத்து விடுகிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் பரப்பப்படுகிறது. அதனால் மோனலுக்குச் சிக்கல்கள் எழ, அவர் படிப்பு எல்லாவற்றையும் துறந்து தன் உறவினர் வசிக்கும் காசிக்குச் செல்கிறார். குற்றவுணர்ச்சியில் விழும் நாயகன் மன்னிப்பு கேட்பதற்காக நாயகியைத் தேடிச் செல்கிறார். பாதிக்கதையில் டைம்லூப் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்.
முதற்படம் என்ற சுவடு தெரியாமல் நடித்துள்ளார் ஜையீத்கான். எமோஷ்னல் காட்சிகளில் வருங்காலங்களில் நன்றாகத் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையை இப்படத்தில் கொடுத்துள்ளார். நாயகி சோனல் மான்டிரோ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, ரசிப்பதற்கு நன்றாக நடிக்கவும் செய்வது சிறப்பு. நாயகன், நாயகியைத் தவிர்த்து வேறெந்தக் கதாபாத்திரங்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் காட்சி நகர்வுகளைத் தொந்தரவு செய்யவில்லை. அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட விதமும், பாடலும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி, காசியின் நிலப்பரப்பை, நதியை, அகோரிகளின் தரிசனத்தை எல்லாம் ரசித்து ரசித்து மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
முன்பாதியில் திடீர் என சிறிய அதிர்வை ஏற்படுத்தித் துவங்கும் படம் போகப்போக காதல் படமாக மாறி ரசிக்க வைக்கிறது. பின்பாதியில் வரும் டைம்லூப் ஏரியா இன்று அதிகமாகத் திரையரங்கிற்கு வரும் இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. கனகச்சிதமான படத்தின் நீளம் ஆசுவாசமளிக்கிறது. சிறு சிறு லாஜிக் பிழைகள் இருந்தாலும், எல்லைகளைக் கடந்து பனாரஸ் கவரவே செய்கிறது.
– ஜெகன் கவிராஜ்