ஒரு வசீகரமான திருடன் எட்கினும், அவனது சகாக்களும், தொலைந்து போன நினைவுச்சின்னத்தை மீட்டெடுக்க ஒரு திருட்டை மேற்கொள்கின்றனர். நண்பரகளாக இருந்தவரின் துரோகத்தால், அந்தத் திருட்டின் பொழுது சிக்கிக் கொள்கின்றனர் எட்கினும், அவனது பலசாலியான தோழியான கோல்காவும். மேசையில் விளையாடப்படும் ‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் உள்ளரங்க விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதை.
பகடை உருட்டி விளையாடப்படும் விளையாட்டுகளின் அப்பாடக்கர் என ‘டன்ஜன்ஸ் & ட்ராகன்ஸ்’ விளையாட்டைச் சொல்லலாம். இந்த விளையாட்டைத் திரைக்குக் கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான விஷயம். சாகசமும் ஆக்ஷனும் நகைச்சுவையும் பின்னிப் பிணைந்த திரைக்கதையாக அமைக்க வேண்டுமென்பது தயாரிப்பாளர் ஜெரெமி லாட்சம் அவர்களின் விருப்பம். ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட மரபுக்கதைகளைச் சாகசம் குறையாமல் திரைக்கதையாக்க, இரட்டை இயக்குநர்களான ஜோனாதன் கோல்ட்ஸ்டீனையும், ஜான் ஃப்ரான்சிஸ் டாலேவையும் தேர்ந்தெடுத்தது தயாரிப்புக் குழு. இரட்டை இயக்குநர்களை, டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் விளையாட்டைத் தீவிரமாக விளையாடி, அதிலேயே மூழ்கி முத்தெடுத்தவர்கள் எனச் சொல்லலாம். வெற்றிப்படமான ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’ படத்திற்கு, இவ்விரட்டை இயக்குநர்கள் திரைக்கதை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘கேம் நைட் (2018)’ எனும் காமெடிப் படத்தையும் இயக்கித் தங்களை நிரூபித்துள்ளார்கள் ஜோனாதனும், ஜானும்.
தயாரிப்பாளர் ஜெரெமி லாட்சம் தான், இரட்டை இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற ஸ்பைடர்-மேனுக்குத் திரைக்கதை எழுதும் வாய்ப்பை அளித்தார். அவரது நம்பிக்கையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு டன்ஜன்ஸ் & டிராகன்ஸ் படத்தை இயக்கும் வாய்ப்பினை வழங்கினார். “முதல் முறை படத்தின் திரைக்கதையைப் படித்ததுமே, நான் மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன். எல்லாக் கதாபாத்திரங்களும் ஒன்று கூடி, ஒரு குடும்பமாக இணைவதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. ஜோனாதனும், ஜானும் எதிர்பார்த்தது போலவே ஆக்ஷன் கலந்த ரசிக்கும்படியான காமெடிக்கு உத்திரவாதமளித்துள்ளனர்” என்றார் ஜெரெமி லாட்சம்.
டன்ஜன்ஸ் & டிராகன்ஸ் படத்தின் நாயகனான க்றிஸ் பைன், “80’ஸ் கிட்டான எனக்கு, இந்தப் படம், தலைசிறந்த பண்புகளைத் தாங்கி வந்த 80களின் தரமான படங்களை ஞாபகப்படுத்தின. கொஞ்சம் ‘தி பிரின்சஸ் ப்ரைட் (The Princess Pride, 1987)’, கொஞ்சம் ‘தி கூனிஸ் (The Goonies, 1985)’, கொஞ்சம் ‘தி மோன்ட்டி அண்ட் தி ஹோலி க்ரெயில் (The Monty and the Holy Grail, 1975)’, கொஞ்சம் ‘தி கேம் ஆஃப் த்ரோன்ஸ் (The Game of Thrones, 2011 – 2019)’ என இப்படத்தில் பல அம்சங்கள் ஒருங்கிணைந்துள்ளன. ஒரு காவிய நாயகன், சில அரைகுறைகளுடன் இணைந்து, தான் மேற்கொண்ட பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் பயணமே இப்படத்தின் கதை” என்றார்.
‘தி கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் எடுக்கப்பட்ட பெல்ஃபாஸ்ட் (வடக்கு அயர்லாந்தின் தலைநகரம்) பகுதிகளைச் சுற்றிப் படமாக்கப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்தின் இயற்கை எழில்மிகு அழகான இடங்களும், விசித்திரமான வெளிகளும், ஒரு ஃபேன்டசி நாவலைக் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற பிரதேசமாகும். படக்குழு, படத்திற்குத் தனித்துவமான அழகைத் தருவதற்காக ஐஸ்லாந்திலும் படமாக்கியுள்ளனர். படக்குழுவினரின் உழைப்பு, திரையில் விரியும் அழகான விஷுவல்ஸில் காணலாம்.