Shadow

பிக் பாஸ் 3 – நாள் 14

Bigg-boss-day-14

முதலில் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். அது கமலின் உற்சாகம். கலக்கலான ட்ரெஸ்ஸொட செம்ம எனர்ஜியோடு இருந்தார். நேரடியாக நேற்றைய நிகழ்வுகளோட தொடர்ச்சி நடந்தது. அபிராமி மாற்றி ஓட்டு போட்டது தான் ஹாட் டாபிக். வெளியே சாக்‌ஷியோட பேசிக் கொண்டிருந்த அபி, ‘இது என்னோட சொந்த முடிவு, அந்த டைம்ல எனக்கு அந்த முடிவு சரியா இருந்தது. மீரா கூட தான் எனக்கு பிரச்சினை’ எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வனிதா அங்கே வந்தார். அப்பொழுது ஆரம்பித்து அடுத்த 15 நிமிஷத்துக்கு அபிராமியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் எப்பவும் போல். ‘நான் என்ன சொல்ல வர்றேன்’ என அபி ஆரம்பித்தால், அடுத்த 5 நிமிஷத்துக்கு வனிதா தான் பேசுகிறார். அபியால் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியவில்லை.

வெளியே பேசிக் கொண்டிருந்த போது, ‘உன் உரிமைடா’ எனப் பேசிக் கொண்டிருந்த சாக்‌ஷி, உள்ளே போனவுடனே வனிதாவுக்கு ஜால்ரா போடுகிறார். கூடவே ஷெரின் வேற.

‘நீ செஞ்சது தப்பு,
நீ செஞ்சது சரியில்லை.
நீ செஞ்சது குற்றம்.
நீ செஞ்சது துரோகம்.
நீ செஞ்சது முதுகுல குத்தறது.
நீ செஞ்சது அதுக்கும் மேல!’

என நொடிக்கு நொடி அபியோட க்ரைம் ரேட் ஏறிக் கொண்டிருந்தது. டிபிகல் ரசிக மென்டாலிட்டியில், ‘நல்லா வேணும் உனக்கு’ எனத் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் அபியைப் பார்க்கிறதுக்கே பாவமாகத் தான் இருந்தது. வழக்கம் போல் பாத்ரூம் ஏரியாவில் போய் அழுதார். ‘நான் வீட்டுக்கே போறேன். என்னை விட்டுடுங்க’ எனக் கெஞ்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த மதுமிதா ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசினார். அதுக்கும் மது பயந்து, தயங்கி தான் பேசினார். அபிக்கும் அந்தத் தயக்கம் இருந்தது. அதுக்கப்புறம் ஷெரின், சாக்‌ஷியிடம் பேசும் போது, ‘)மது என்ன பேசினாங்க என அபி முழுவதும் சொன்னார். ஹவுஸ்மேட் ஒருத்தர் கிட்ட பேசுவதற்குக் கூடத் தனக்குச் சுதந்திரம் இல்லை என அபிக்கு புரியவே இல்லை.

அபி, மீராவை இல்லாமல் மதுவைத் தேர்வு செய்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. இப்பொழுது மது சேஃப். ‘இது ஏன்? எப்படி நடந்திருக்கும்?’ என யோசிக்கவேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு இல்லாத ஒரு பிரச்சினைக்கு இவ்வளவு நேரம் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக் கொண்டிதுக்கின்றனர். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வனிதா & கோ, பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்.

கமல், அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்ஸுக்கு ஹாய் சொன்னார். வீட்டுக்குள்ளே பெண்கள் போடும் சண்டையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவர் குரலில் தெரிநத எள்ளல் செம்ம! “காலர் ஆப் தி வீக்” என ஒரு புது கான்சப்ட். வெளியே இருந்து ஒருத்தர் ஃபோன் பண்ணி உள்ள இருக்கற ஒரு ஹவுஸ்மேட் கிட்ட ஒரு கேள்வி கேட்கலாம். அதில் கிருத்திகா என ஒரு பெண் கவின் கிட்ட பேசினார். ‘இந்த வீட்டில் யாரை உண்மையா லவ் பண்றீங்க?’ எனக் கேட்க, ‘இந்தக் கேள்வியை கேட்கத்தான் வந்தீங்களா?’ என்றெழுந்த மைண்ட்-வாய்ஸைக் கவினும் கேட்ச் பண்ணிட்டார். அவர் பதிலும் வழவழா கொழகொழா.

இந்த வீட்டில் யார் இருக்கவேண்டுமென நினைக்கறீங்க எனக் கொக்கியைப் போட்டார் கமல். வனிதா அணி சாக்‌ஷி பேரைச் சொல்ல, சேரனுக்குச் சிலர் சப்போர்ட் செய்ய, மீரா, கவின் பேரை யாருமே சொல்லவில்லை. யார் சேவ் ஆகி இருப்பாங்க எனக் கேட்டதற்குக் கவின் பேரைச் சொன்னார் சாண்டி. கடைசில அவர் பேரே வந்தது. அந்த மொமெண்ட்ல சாக்‌ஷி உச்சபச்ச டென்ஷன் ஆனா. அபி அழ ஆரம்பித்தார்.

அடுத்ததாக பிக்பாஸ் லோகோவோடு, அரை கண்ணை கையில வைத்துக் கொண்டு வந்தார் கமல். நாமினேஷன்ல இருக்கறவங்களுக்கும் தனித்தனியா அதே மாதிரி ஒரு அரை கண் கொடுத்தார். யார் இரண்டு பேருக்கு மேட்ச் ஆகுதோ அவங்க ரெண்டு பேரும் சேஃப். மீராவுக்கு சரவணன் கூட மேட்ச் ஆக, மீரா பயங்கர சந்தோஷபட்டார். சரவணனோ, ‘அங்கன தள்ளிப் போம்மா. சார் ஏதோ சொல்றார்’ என ஹாண்டில் பண்ணினார். சேரனுக்கு சாக்‌ஷியோடுதும் மேட்ச் ஆக, பாத்திமா வெளிய கிளம்பினார். ரொம்ப ட்ராமாலாம் போடாம சட்டு என வெளியே வந்தார்.

கமல் கூட நின்று, பாத்திமா ஒவ்வொரு வார்த்தையும் பேசப்பேச பிரமிப்பு தான் வந்தது. இவ்வளவு தெளிவான, பாசாங்கு இல்லாத ஒரு போட்டியாளரை வேற சீசனிலும் இருந்ததில்லை. அவ்வளவு தரமாகப் பேசினார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோர் பற்றியும் அவங்க சொன்ன பாயின்ட்ஸ் எல்லாமே அட்டகாசம். அவங்க தேர்ந்தெடுத்த வார்த்தைகளும் அவ்வளவு அழகு.

ஆனால் இவ்வளவு தெளிவாகப் பேசக்கூடிய ஒரு நபர் ரெண்டு வாரமா ஏன் ப்ரொஜக்டே ஆகவில்லை என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இரண்டாவது நாள் மீரா வந்ததில் இருந்து மொத்த போகஸும் வனிதா & கோ, மீரா, மது மேல் மட்டுமே இருந்தது. அதனாலேயே பாத்திமா எதுவுமே செய்யாத மாதிரி தான் வெளியே தெரிந்திருக்கு. அப்படி இல்லையென்றால் பாத்திமா மற்றும் இன்ன பிற ஹவுஸ்மேட்ஸ் செய்வது / நடந்து கொள்வது எல்லாம் வெளியே வராமலேயே இருக்கவேண்டும். எப்படி இருந்தாலும் இதை விஜய் டிவி சரி செய்யவேண்டும். வெறும் நெகட்டிவ் விஷயங்களை மட்டும் தான் ப்ரொஜக்ட் பண்ணுவோம் என்றிருப்பது மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும். இதைப் பார்த்துக் கொண்டிருப்பவர் மனங்களிலும் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும்.

இதையே அளவுகோலா வைத்துப் பார்த்தோம் என்றால், வனிதா அணி, மது, மீரா வெளிப்பட்ட அளவுக்கு, சேரன், தர்ஷன், லியா, முகின் இவர்களெல்லாம் வெளிப்படவே இல்லை. வாய்ப்புகள் சமமாக இல்லை என்பதே இப்போது நாம் வைக்கும் குற்றச்சாட்டு.

அடுத்த வார தலைவராக வரக்கூடிய மூன்று பேரை நாமினேட் பண்ணக்கூடிய பவரைப் பாத்திமாவொற்குக் கொடுத்தார் கமல். தர்ஷன், அபிராமி, சாண்டி ஆகிய மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, ஏன் இந்த மூன்று பேருமென அவர் கொடுத்த விளக்கங்களும் கிளாஸ் ரகம். எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் உங்களை அழைத்துக் கேட்டுக் கொள்கிறேன் என கமலே சொல்லும் அளவுக்கு அவ்வளவு கன்வின்சிங்காக இருந்தது பாத்திமாவுடைய பேச்சும், கணிப்பும். மற்றவர்களை விட வயதில் இளையவர்களான தர்ஷன், லியா, முகின் ஆகியோருக்கு பாத்திமா வெளியே போனது பெரிய இழப்பே!

கமல் தன் வேலையை முடித்துவிட்டு கிளம்பிய பின், மீண்டும் ஹவுஸுக்குள் நுழைந்தோம். மீரா ஒரு புறம் அழுது கொண்டிருந்தார். ‘நீ தான் காரணம்’ என தர்ஷனைக் கலாய்த்துக் கொண்டிருந்தார் சாண்டி. முகின் அங்கே வந்ததும், ‘நீங்க ரெண்டு பேரும் தான் காரணம். போய் சமாதானப்படுத்துங்க’ எனச் சொன்னார். இவர்களும் போய்க் கேட்டனர். ஆனா மீரா என்ன சொன்னார் என்று தான் புரியவே இல்லை.

இப்போதைக்கு வனிதாவோட டார்கெட் மது தான். அதனால தான் மீராவைச் சேர்த்துக் கொண்டார். இந்த வாரம் மது போயிருந்தால், அடுத்தது மீரா தானென சேரன் அபியிடம் சொல்லிக் கொண்டிருந்தாரு. சேரனும் எல்லாவற்றையும் உன்னிப்பாகல் கவனித்துக் கொண்டிருகிறாரென நன்றாகத் தெரிகிறது.

தெளிவான சிந்தனை, முதிர்ச்சியான பேச்சு என்று அசத்திய பாத்திமாக்கு ஒரு ஷொட்டு;

வனிதாவுக்கு ஒரு குட்டு;

சாண்டி தான் போன வாரத்தோட ஹிட்டு.

– மகாதேவன் CM