Shadow

பிக் பாஸ் 3 – நாள் 23

Bigg Boss Day 23

‘ஜிங்குனமணி’ பாடலுடன் விடிந்தது பொழுது.

பஞ்சாயத்து 1

மோகன் தன் வரவழைக்கப்பட்ட ட்ரேட்மார்க் சோகத்தோட சாக்‌ஷியிடம் பேசிக் கொண்டிருந்தார். நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அதாவது பாத்ரூம் க்ளீனிங் டீம்ல இருக்கின்ற மோகனுக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘ஏதோ அலர்ஜியாக இருக்கு. அதனால் என்னை குக்கிங் டீம்ல போட்ருங்க’ என சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கேப்டன் சாக்‌ஷி, ‘நான் பார்த்துக்கறேன்’ எனச் சொல்லி, அவரை வெசல் வாஷிங் டீம்ல போடுகிறார். சரவணன் ஏற்கனவே குக்கிங் டீமில் இருக்கிறார். அங்க மோகன் போனால் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு. அதனால வெசல் வாஷிங்ல இருக்கட்டுமெனச் சொல்லி அதற்கு நியாயமான காரணமும் சொன்னார்.

ஆயிற்றா, இந்த விஷயம் ரேஷ்மாக்குத் தெரிய வருகின்றது. ‘ஏம்பா, ஏற்கனவே ஒரு தடவை இந்த டீம்ல இருக்கும் போது, இனிமே என்னை இந்த டீம்ல மட்டும் போடாதீங்க எனச் சொன்னார், இப்ப மறுபடியும் இங்கேயே வர்றேன்னு சொல்றாரே!’ என ரேஷ்மா கேட்க, அதையே மோகனையும் அழைத்துக் கேட்கிறார். சேரனும் அங்கேயே இருந்தார். ‘என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் இல்ல’ எனக் கேட்கிறார். ‘நீங்க மட்டுமே வேலை செய்யறதை என்னால பார்க்க முடில சார்’ என நெஞ்சை நக்கினார். ‘நான் குக்கிங் டீம் தான் கேட்டேன்’ எனச் சொல்லவும், அங்கே வந்த சாக்‌ஷி, ‘அங்க வேணாம், இதையே செய்ங்க’ என முடித்துவிட்டார்.

‘என்னடா இது டார்கெட் அச்சீவ் ஆகலையே!’ என நினைத்த மோகன், பாத்ரூம் போய் சன்னமான குரலில் சாக்‌ஷியிடம் மறுபடியும் பேசிக் கொண்டிருந்தார். ரேஷ்மா மேல் கூட கம்ப்ளெயின்ட். திரை மறைவில் இவங்க பேசிக் கொண்டிருக்கும் போதே, லியா அங்கே வந்துவிட்டார். இவர் வெளியே வரும்போதே லியாவைப் பார்த்து விட்டார். உடனே சுதாரித்து, ‘லியா நல்ல பொண்ணு சமத்து பொண்ணு’ எனப் பேசிவிட்டு, ‘ஓ நீ இங்க தான் இருக்கியா?’ என லியாவை பார்த்து, ஏதோ அப்பத்தான் பார்த்த மாதிரியும், அவரைப் பற்றி நல்லவிதமாகப் பேசிக் கொண்டிருந்த மாதிரியும் கேட்ட போது, அவர் மேல் இருந்த மொத்த மரியாதையும் போய்விட்டது. இந்த மனிதனிடம் கள்ளத்தனம் இருக்கு. அதை இந்த பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும். கடைசியில் எப்பவும் போல கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து கடமையைச் செய்து முடித்தார். ‘இதை முதல்லயே செஞ்சுருந்தா, நான் இவ்வளவு பெர்ஃபாமன்ஸ் பண்ண வேண்டி இருந்திருக்காது இல்ல!?’ என மைண்ட் வாய்ஸில் நினைத்திருப்பாரோ என்னமோ!

சாக்‌ஷியிடம் தண்ணீர் அலர்ஜி எனச் சொன்னவர், சேரனிடம், ‘நீங்களே எல்லா வேலையும் செய்யும்போது கஷ்டமா இருக்கு’ என ஒரு பிட்டைப் போட்டார். எதுக்கு இந்த பெர்ஃபாமன்ஸ்னு தான் தெரில.

பஞ்சாயத்து 2

லியா ஒரு சாக்லேட் எடுத்து சாப்பிடுகின்றார். அங்கே வந்த சாக்‌ஷி, ‘ஏது இது?’ என யதார்த்தமாகக் கேட்க, லியாவும் பதார்த்தமாக, ‘இது கவின் கொடுத்தது’ எனச் சொல்ல, முடிந்தது கதை.

சாக்‌ஷி தன்னோட சாக்லேட்டைக் கவினுக்கு ஆசையாகக் கொடுத்திருக்கார். அதை தான் கவின் லியாவுக்குக் கொடுத்துட்டான் என முடிவுக்கு வந்துவிட்டார். கவினுக்குனு தான் கொடுத்த சாக்லேட்டை தான் லியாவுக்குக் கவினுக்குக் கொடுத்துவிட்டாரெனச் சொல்லி கவினோடு சண்டை. இதைப் பார்த்த லியா, மூட் அவுட் ஆகி, கவினிடம் சாக்லேட்டைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். இரண்டு பேரும் இரண்டு பக்கம் பிய்த்துக் கொள்ள, வழக்கம் போல பாத்ரூம் ஏரியாவில் உட்காந்து ஃபீலிங்கில் இருந்தார். இங்கே இருந்த சாண்டியிடம் விஷயத்தைச் சொல்ல, ‘இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தாடா? சின்னப்புள்ளத்தனமா இருக்கே!’ எனச் சொல்லிட்டு, ‘ஆனது ஆயிப்போச்சு. அந்த சாக்லேட்டை எடு சாப்பிடலாம்’ எனச் சொல்ல, ஒரு செகண்ட் பார்த்த கவின், ‘ரெண்டு பேரையும் சமாதானபடுத்தப் பார்க்கறேன். இல்லேன்னா நாம சாப்பிடலாம்’ எனச் சூழலை இலகுவாக்கினார் கவின்.

சேரன் மீது சாய்ந்து அழுதார் லியா. ‘என் பொண்ணை அழ வச்சிட்டாங்களேன்!’ என சேரன், ரட்சகன் நாகார்ஜுனா மாதிரி மாறிக் கொண்டிருந்தார்.

இந்த வாரத்தர்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் வந்தது. மொத்தம் நாலு பார்ட்டாக நடக்கின்ற இந்த டாஸ்கில் முதல் பார்டில், சாண்டி, மீரா மற்றும் சேரன் 3 பேர் சென்றனர். ஆக்டிவிட்டி ஏரியா முழுவதும் கடிகாரங்களாக இருக்கும். அதில்ல இரண்டு கடிகாரம் மட்டும் அலாரம் அடித்துக் கொண்டிருக்கும். அதை 10 நொடிக்குள் கண்டுபிடித்து, ஆஃப் பண்ணிவிட்டால் 700 பாயிட்ஸ். அதைத் தாண்டும் ஒவ்வொரு 10 நொடிக்கும் 100 பாயின்ட்ஸ் குறைந்து கொண்டே இருக்கும்.

பஞ்சாயத்து 3 பார்ட் 1

சாண்டியும், மீராவும் 18 நொடியில் முடித்து 600 பாயின்ட்ஸ் ஜெயித்தனர். நேற்று கவினுக்கு வடக்குல சூலம். சும்மா இருக்காமல், மீராவிடம், ‘நீ உள்ளே போய் என்ன பண்ணின? எல்லாத்தையும் சாண்டி தான் செஞ்சான். நீ போனதே வேஸ்ட்’ என மீராவைக் கலாய்க்க, அந்த வார்த்தைகள் தஞ்சாவூர் கல்வெட்டு மாதிரி மீரா மனதில் பதிந்துவிட்டது.

அப்படியே கொஞ்ச நேரம் உரு போட்டு, சாண்டியிடம் பஞ்சாயத்து ஆரம்பித்தது. இதைக் கேள்விபட்ட கவின், நேரா மீராவிடம் வந்து, ‘நான் உன்னைக் கலாய்க்கறதுக்குத்தான் சொன்னேன், ஹர்ட் ஆயிருந்தா மன்னிச்சு’ எனச் சொல்லிவிட்டுப் போய்ட்டார்.

பஞ்சாயத்து 3 பார்ட் 2

கேப்டன் காதுக்கு விஷயம் போகிறது. அதுவரைக்கும் இந்த விஷயம் சாண்டி, மீரா, கவின், சரவணன் இந்த நாலு பேருக்கு மட்டும் தான் தெரியும். மறுபடியும் முதலில் இருந்து சொன்ன மீரா, ‘நானு விளையாடிருக்கேன். ஆனா சாண்டி மட்டும் நல்ல பேர் வாங்கிட்டு போறான்’ என ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் சேர்த்துப் போடுகிறார். ‘அப்படியெல்லாம் கிடையாது, சாண்டி கிட்ட பேசலாம் வா’ எனக் கூப்பிட, ‘ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் நான் ஒன்னுமே பன்னலனு நினைக்கறாங்க’ என மீரா சொன்னார். ‘சரி எல்லாரையும் கூப்ட்டு உக்கார வச்சுப் பேசிடலாம்’ என முடிவு செய்யும் சாக்‌ஷி, ஒரு மீட்டிங் போட்டார்.

வழக்கம் போல் மீரா நான் ஸ்டாப்பாகப் பேசி முடிக்க, பாதி பேருக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ஏம்மா இப்பத்தானே உங்கிட்ட சாரி கேட்டுட்டுக் குளிக்க போனேன்! அதுக்குள்ள எதுக்கு இந்த பிரச்சனை?’ என கவின் நியாயமாகக் கேட்க, ‘ஹர்ட் பண்ணிட்டு, சாரி கேட்டா சரியா போய்டுமா?’ என மீரா விதண்டாவாதம் பேச ஆரம்பித்தார். ‘நான் ஒன்னுமே செய்யலைனு போர்ட்ரெயிட் ஆகுது, அதை க்ளாரிஃபை செய்யத்தான் இந்த மீட்டிங்’ எனச் சொன்னார் மீரா.

பஞ்சாயத்து 3 பார்ட் 3

இதுல தன் பேரும் சம்பந்த பட்டதால சாண்டி மீரா கிட்ட எதுக்கு இப்படி செஞ்சனு கேட்ட உடனே இந்த மீட்டிங்கை அரேஞ்ச் பண்ணினதே சாக்‌ஷி தான்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க. கவினும் அங்க வந்து அப்படியான்னு கேட்டுடு போய்ட்டான். அதோட விட்ருக்கலாம் மீரா. ஆனா விதி யாரை விட்டது.

பஞ்சாயத்து 3 பார்ட் 4

நேராக சாக்‌ஷியிடம் போய், ‘இந்த மீட்டிங் அரேஞ்ச் பண்ணினது யாரு?’ என மீரா கேட்க, ‘நீ கேட்ட நான் பண்ணினேன்’ என சாக்‌ஷி பதில் சொன்னார். ‘அதாவது நான் பிரச்சினையைச் சொன்னேன், நீ அதுக்கு மீட்டிங் போட்ட, ஆனா நானா வந்து மீட்டிங் வேணும்னு கேக்கல, சரிதானே?’ என மீரா குழப்ப, அப்போதைக்குப் புரியாத சாக்‌ஷி ஆமாம் எனச் சொல்லிவிட்டார்.

ஆனால் ரேஷ்மாக்கு பல்பு எரிந்திருக்கும் போல, ‘வா போய் கவினிடம் பேசி க்ளாரிஃபை பண்ணிக்கலாம்’ என அழைத்துக் கொண்டு போனார். மறுபடியும் அதே குழப்பம். மீராவைக் கூப்பிட்டு கேட்க, ‘இந்த மீட்டிங் வேணும்னு நான் கேக்கவே இல்லை’ என மீரா சொல்லவும், சாக்‌ஷி கடுப்பாகிவிட்டார். ‘நீ உண்மையிலேயே லூசா? இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா?’ எனப் பார்வையாளர்கள் மனதிலிருந்த கேள்வியைக் கேட்டார்.

கவின் கலாய்ச்சதை சீரீஸாக எடுத்துக்கொண்டது முதல் தப்பு; கவின் சாரி கேட்டதுக்கு அப்புறமும் அதை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது இரண்டாவது தப்பு;
4 பேருக்கு மட்டும் தெரிந்த ஒரு விஷயத்தை ஊருக்கே டேரா போட்டுச் சொன்னது மூன்றாவது தப்பு. அந்த இடத்தில் இருந்து தப்பிக்க வாய்க்கு வந்ததைப் பேசுவது தப்போ தப்பு.

இது ஒரு எபிசோட்னு இதைப் பார்த்த எனக்கு குட்டு;

இவ்வளவு நேரம் இதைப் பொறுமையாகப் படித்ததற்கு உங்களுக்கு ஷொட்டு.

– மகாதேவன் CM