Shadow

“தண்டேல் | கடலும் காதலும் சாய்பல்லவியும்” – தேவி ஸ்ரீ பிரசாத்

நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு , நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல்’ திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இசையமைப்பாளர் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத், ”தண்டேல் பிடத்தை பற்ற தயாரிப்பாளர் பன்னி வாஸ் மற்றும் இயக்குநர் சந்து ஆகியோர் என்னைச் சந்தித்துப் படத்தைப் பற்றி ஒரு வரி கதையாகச் சொன்னார்கள். அதுவே சுவராசியமாக இருந்தது. அந்த சுவாரசியம் படம் முழுவதும் இருந்தது. அதனால் பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருந்தது.

கடல் என்று வந்து விட்டால், அந்தப் படத்திற்கும் சென்னைக்கும் தொடர்பு எளிதாக அமைந்து விடும். இந்த படத்திலும் கடல்,கடற்கரை, மீனவர்கள், காதல் என அனைத்தும் இருக்கிறது. அதனால் இந்தத் திரைப்படம் தமிழக ரசிகர்களுக்கும் நெருக்கமானதாக இருக்கும்.

அல்லு அரவிந்த் அவர்களுக்கு என்னை சிறிய வயதில் இருந்தே தெரியும். அவரும் சிறந்த இசை ரசிகர். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்ததற்காகவும், எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாக சைதன்யா என் நண்பர். என் சகோதரர். திறமையானவர். தண்டேல் படத்தின் போஸ்டரைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காகத் தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி அமைத்து இருந்தார். ‘இது நம்முடைய வழக்கமான நாக சைதன்யா இல்லையே!’ என்ற எண்ணம் வந்தது. படத்திற்காக கடும் உழைப்பை வழங்கிய அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சாய் பல்லவி இந்தப் பெயரை உச்சரித்தாலே போதும். அனைவருக்கும் பிடித்து விடும். இந்தியாவின் சிறந்த இயக்குநரான மணிரத்தினமே சாய் பல்லவியின் ரசிகர் தான். இந்தத் திரைப்படத்தில் அவரும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல. நன்றாக நடனம் ஆடக்கூடிய கலைஞர். அவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் அவர் நடனமாடி இருக்கிறாரா என்பதை நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ, அதனை அந்தப் பாடலுக்குள்ளேயே சின்ன சின்ன நடன அசைவுகள் மூலம் அழகூட்டுபவர்.

இந்தப் படத்தின் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவும், பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருக்கும் கார்த்தி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகள்.

நான் பாடலாசிரியர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவேன். ஏனெனில் நான் பிரபல கதாசிரியர் சத்தியமூர்த்தியின் மகன். அவர் கதாசிரியர் மட்டுமல்ல. பாடலாசிரியரும் கூட. ஒரு பாடலுக்கு அழகாக டியூன் அமைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது பாடல் வரிகள் தான். இந்த வகையில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை சாய் பல்லவி பேசுகையில், ”தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாகச் சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் பயணம் மறக்க முடியாதது.

சக நடிகரான நாக சைதன்யா ஒன்றரை ஆண்டு காலத்தை இந்தக் கதாபாத்திரத்திற்காக வழங்கிக் கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் அவர் தயாராக இருக்கிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதற்காகப் பணியாற்றிய ராக் ஸ்டார் டிஎஸ்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தெலுங்குத் திரையுலகத்திற்கு அறிமுகமாகும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரைத் தெலுங்குத் திரையுலகம் சார்பாக வரவேற்கிறேன். படப்பிடிப்பில் மொழி தெரியாவிட்டாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.