Shadow

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ ஒன்றைத் தருவிப்பதையோ, வரவைப்பதையோ கான்ஜுரிங் எனச் சொல்வார்கள். அப்படி மந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்கின்றான் கண்ணப்பன். அவனுடன் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கும், சைக்காட்ரிஸ்ட் ஜானியும், கண்ணப்பனின் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித் தவறித் தூங்கினால், அந்த அமானுஷ்ய கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதில் இருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கான நேரத்தை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, நேராகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். சதீஷ் தனியாகச் சிக்கிக் கொண்ட காட்சிகளில், தொழில்நுட்பத்தின் உதவியால் அச்சுறுத்த முயற்சி செய்துள்ளனர். ஹாலிவுட்டின் கான்ஜுரிங் சீரிஸ் படங்களே பார்வையாளர்களை அச்சுறுத்தத் திணறி வரும் சூழலில், கோலிவுட் படங்கள் தஞ்சம் அடைவது நகைச்சுவையில். இப்படம் அதற்கான கதைக்களத்தையும் நடிகர்களையும் கொண்டுள்ளது. ஆனந்த்ராஜ், விடிவி கணேஷ், ஆதித்யா கதிர், ரெடின் கிங்ஸ்லி, சரண்யா பொன்வண்ணன், சதீஷ், நமோ நாராயண் என யாரேனும் ஒருவராவது எல்லாக் காட்சியிலும் தங்களது ஒன்-லைனர்களால் கலகலப்பிற்கு உத்திரவாதம் அளிக்கின்றனர்.

எக்சார்சிஸ்ட் ஏழுமலை, டார்க் டேவ்ஸ் எனும் பேய் ஓட்டும் கதாபாத்திரங்களில் நாசரும், ரெஜினா கசாண்ட்ராவும் நடித்துள்ளனர். படம், முழு நீள நகைச்சுவையாக மாறிவிடாமல், இடையிடையே சீரியஸ் மோடிற்குக் கொண்டு வர இவ்விருவரும் உதவியுள்ளனர். உறங்காமல் இருக்க ஆனந்த்ராஜ் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. படத்தின் கணினி வரையியல் (CG) துருத்திக் கொண்டு தனித்துத் தெரியாமல், கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளது. ட்ரீம் கேட்ச்சர் கருவி, நாசர் பயன்படுத்தும் புத்தகங்கள், குரங்கின் கை (Monkey Paw) என கலை இயக்குநர் மோகன மகேந்திரனின் பணி சிறப்பாக உள்ளது. படம் முடிந்த பிறகு, போஸ்ட் க்ளைமேக்ஸில் வரும் பென்சில் ஸ்கெட்ச்களைக் கூட நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் மோகன மகேந்திரன். அமானுஷ்யத்தன்மையைக் கடைசி வரைக்கும் தக்க வைக்க உதவியுள்ளது ஒளிப்பதிவாளர் S. யுவாவின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் ஒலிப்பதிவும்.

ஒரே மாளிகைக்குள் நடக்கும் கதை என்பதாலும், உள்ளங்கை நெல்லிக்கனி போல் படத்தின் முடிவைப் பற்றிப் பார்வையாளர்களுக்குத் தெரியும் என்பதாலும், இன்னும் கடுமையாக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியருடன் சண்டையிட்டுப் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ். ஏஜிஎஸ் தயாரிப்பின் முந்தைய தயாரிப்பான ‘லவ் டுடேலவ் டுடே‘வின் மேஜிக்கிற்கு பிரதீப் E. ராகவ் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேய்களுக்கென்று தனித்த குணமில்லை, இறந்த பொழுது அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்தனவோ, அப்படியே பேயாகியும் தொடர்கின்றனர் என்கிறார் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர். ‘லவ் டுடே’வில் எப்படி பாடி ஷேமிங்கைத் தவறென அழுத்தமாகச் சொல்லியிருந்தனரோ, அப்படி இப்படத்தின் முடிவிலும், சோர்ந்திருக்கும் சதீஷிடம் சரண்யா பொன்வண்ணன், ‘எது வெற்றி?’ என ஆதுரமாகப் பேசிப் புரிய வைக்கிறார்.