Shadow

டைனோசர்ஸ் விமர்சனம்

படத்தின் பெயரைப் போலவே படக்கதையும் மிகப் பெரியது. ஒரு வரிக்குள் இதன் கதையை அடக்கவே முடியாது. டைனோசர்ஸ் எப்படி ஒரு புரியாத புதிரோ அப்படித்தான் டைனோசர்ஸ் (Die No Sirs) படத்தின் கதையும். நாயகன் மண்ணு-விற்கு ஒரு கதை, துரைக்கு ஒரு கதை, சாலயார்-க்கு ஒரு கதை, கிளியப்பனுக்கு ஒரு கதை, நாயகன் மண்ணுவின் அண்ணனுக்கு ஒரு கதை, நாயகி தீபாவுக்கு ஒரு கதை, மத்தியச் சிறையில் இருந்து வெளியான கைதிக்கு ஒரு கதை, இது போதாதென்று மண்ணு-வின் அப்பா, அம்மா, சாலயார், கிளியப்பன் இவர்களுக்கு ஒரு கதை. இந்தக் கதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டவே இல்லை என்பது தனிக்கதை.

கிளியப்பன், சாலயார் என இரண்டு குழுவிற்கும் பகை. இதிலெல்லாம் தலையிடாமல் நாயகன் மண்ணு, அவன் அண்ணன் பழனி, அவர்களின் அம்மா மூவரும் வாழ்கிறார்கள். பழனியின் நெருக்கமான நண்பன் துரை சாலயாரின் கையாள். கல்யாணம் ஆகி பத்தே நாளில் கொலை வழக்கில் ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய சூழல் வர, நண்பனுக்காகப் பழனி அந்தப் பழியை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குச் செல்கிறான். இந்த முடிவு அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போட்டது என்பது தமிழ் சினிமா பார்க்காத புதிய பாணி கதை.

மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வரும் கைதியின் அதகள அறிமுகத்துடன் படம் அமர்க்களமாகத் துவங்குகிறது. அதற்குப் பின்னர் அந்தக் கதாபாத்திரம் காணாமல் போகி, கடைசிக் காட்சியில் தான் தலை காட்டுகிறது. அந்தக் கதாபாத்திரம் படத்தில் எதற்கு என்றும் தெரியவில்லை, அந்த ஆரம்பக் காட்சி படத்தில் ஏன் வந்தது என்றும் புரியவில்லை. டைனோசர்ஸ் திரைப்படத்தின் மிகப் பெரிய பிரச்சனையே இதுதான். இப்படி பல காட்சிகள் மிகச் சிறப்பான நடிப்போடும், கலைநயத்தோடும் அற்புதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை ஏன் கதையில் சம்பந்தமே இல்லாமல் கதைக்குத் தொடர்பே இன்றி வருகிறது என்பது தான் புரியவில்லை.

அது போல் நாயகன் மண்ணு, இன்ஜினியர் வேலையில் இருந்து தியேட்டரில் டிக்கெட் கிழிப்பது வரை பல வேலைகளைச் செய்பவன் என்று ஒரு காட்சித் தொகுப்பு வரும். ஆனால் நாயகன் என்ன வேலைதான் செய்கிறான் என்று கேள்வி கேட்டால் படம் பார்த்த யாருக்குமே பதில் தெரியாது. துரை மரணத்திற்குப் பின்னர் மண்ணுவும் அவனின் நண்பர்களும் ஏன் கிணற்றுக்குள் போதையில் விழுந்து கிடக்கிறார்கள் என்றும் தெரியவில்லை, அதிலிருந்து வெளியே வரும் மண்ணு எதற்காக அந்தக் காட்சியில் வெளியில் வருகிறான் என்றும் புரியவில்லை. வந்து குடி போதையில் ரகளை செய்து, செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவன் என்று கலாய்த்து, அப்பத்தாக்களுக்கு முத்தமும் கொடுத்து, முத்தத்தில் உப்பு சப்பில்லை என்ற பொன்மொழியையும் உதிர்த்து, அஞ்சலி செலுத்த வந்த சாலயாரை வெறுப்பேற்றுகிறாராம். காட்சி பார்ப்பதற்கு கலகலப்பாகவும் மண்ணுவாக வரும் உதய் கார்த்திக்கின் சிறப்பான நடிப்பால் ரசிக்கும்படியும் இருக்கிறது தான். ஆனால் கதை? அக்காட்சியால் கதை ஏதேனும் முன்னகர்கிறதா என்றால் இல்லை. அந்தக் காட்சியை அப்படியே கத்தரித்துத் தூக்கிவிட்டால் கதையை அது பாதிக்குமா என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை என்பது தான்.

இப்படித்தான் பல காட்சிகள் வருகின்றன. சாலயார் துரைக்குச் செய்த துரோகத்திற்குப் பழி வாங்க மண்ணு ஏதாவது செய்துவிடுவான் என்று பயந்து சாலயார் கூட்டம் மண்னுவையும், ஒரு அடியாளாக மாற்றி ஜெயிலுக்கு அனுப்ப முயல்கிறது, அவனைக் கொல்ல துரத்துகிறது. ஆனால் அந்த மண்ணு சாலயாரை மிரட்டும் அளவிற்கு பயமுறுத்தும் அளவிற்கு என்ன செய்தான் என்று கேட்டால் அதற்குப் படத்தில் பதில் இல்லை. ஒரு பிள்ளையார் சிலையைக் கொண்டு வந்து சாலயார் தலைமையில் நிறுவுகிறார்கள். அதை மண்ணு திருடிவிடுகிறான். இதனால் பிரச்சனை கிளம்புகிறது என்று சொல்லுகிறார்கள், ஆனால் என்ன பிரச்சனை, எதனால் பிரச்சனை என்பது சொல்லப்படவே இல்லை. இறுதியில் சாலயாருக்கு என்ன நடந்தது என்பதும் எல்லாப் பார்வையாளருக்கும் புரியுமா என்று கேட்டால் அதுவும் இல்லை.

படத்தில் காதலைக் கையாண்ட விதம், நட்பைக் கொண்டாடிய விதம், பேருந்துகளில் மாணவர்கள் என்ற பெயரில் அட்டூழியம் செய்பவர்களைக் கண்டித்தவிதம், வன்முறையைக் கையில் எடுக்காமல் அதிலிருந்து ஒதுங்கி இருந்தே எல்லாவற்றையும் சாதிப்பவனாக நாயகன் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம், தமிழ் சினிமா இதுவரைப் பார்த்திராத புதுவிதமான க்ளைமேக்ஸ், உதய் கார்த்திக், அட்டு புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, D. மானேக்ஷா, ஸ்ரீனி, TN அருள் பாலாஜி, கவின் ஜெய்பாபு என்று எல்லாக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களுமே சிறப்பாக நடித்திருப்பது, ஸ்டன்னர் சாம் உருவாக்கத்தில் வெளியாகியிருக்கும் மிக நேர்த்தியான இயல்பான சண்டைக் காட்சிகள் எனப் பாராட்ட பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

‘இளமையில 25 காலண்டர், முதுமையில 35 காலண்டர் அவ்ளோதான் சார் வாழ்க்கை’, ‘இந்தக் கத்திரிக்கோலை நேர்த்தியாகப் பிடிச்சி துணி வெட்ட டைம் எடுக்கும், காசு கம்மியாத்தான் வரும், அதையே கத்தி மாதிரி பிடிச்சி இஷ்டத்துக்குக் குத்துனேன்னு வை உசுரு போயி சுளுவா வேலை முடிஞ்சிரும், காசும் அதிகம், ஆனா ஜெயிலுக்குப் போகணும்’, ‘தீபா காஃபி கொண்டு வாம்மான்னு சொன்னா என் புள்ள காஃபி கொண்டு வரும், அந்த அளவுக்காது ஒன்ன என் லைஃப்ல வச்சிக்குவேன்’, ‘செஞ்சா செம்மையா செய்ங்க… இல்ல வூட்ல போயி சமையல் செய்ங்கடா’, ‘நா சாமி கும்பிடக் கோயிலுக்குப் போனதும் கெடையாது சம்பவம் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனதும் கெடையாது’, ‘ஓ இவரு பரம்பரை ஹெல்பரா?’ என பல இடங்களில் வசனம் கைத்தட்டல் வாங்குகிறது.

இப்படிப் பாராட்ட பல அம்சங்கள் இருந்தாலும் தெளிவான கதை, புத்திசாலித்தனமான திரைக்கதை இல்லாததால் ஒரு முழுமையான திரை அனுபவத்தைக் கொடுக்கத் தவறுகிறது. மொத்தத்தில் டைனோசர்ஸ் தலைப்பைப் போலவே சற்று விசித்திரமாகத் தான் இருக்கிறது.

– இன்பராஜா ராஜலிங்கம்