Shadow

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம்,

நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி?

ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன்.

சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது.

~~ கேள்வி 1: கிராமம் சார்ந்த, வட்டார அழகியல் மிக்க உங்கள் படைப்புகளில் கிராமத்தின் சாதிய முரண்களைப் பார்க்க முடியவில்லையே? அதைப் பதிவுசெய்வது குறித்து உங்கள் மனநிலை என்ன?

உங்கள் பதில்: “எனது இலக்கியத்திற்குச் சத்தியம்தான் மூலம் என்று நினைக்கிறேன். நான் பாராத வாழ்க்கையை எழுத முடியுமா?, நான் கேளாத மொழியைப் பதிவு செய்ய முடியுமா? நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் பட்ட வலி, பெற்ற பாடம், சந்தித்த மனிதர்கள், அவர்களின் கண்ணீர், துயரம், காதல், காமம், இழப்பு, இறப்பு இவையெல்லாம் நான் பார்த்தது. நிஜ முகங்களைப் பதிவு செய்வதாக இருந்தால், நான் சின்ன வயதில் இருந்து பார்த்த என் சமூகம் சார்ந்த விஷயங்களைத்தான் பதிவு செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் அது இன்னொரு சமூகத்துக்கு விரோதமாகவோ, அந்தச் சமூகத்தை மட்டும் தூக்கி பிடிப்பதாகவோ இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.” ~~

இப்படியாக நீள்கிறது அந்தக் கேள்விக்கான உங்கள் பதில். வைரமுத்து என்கிற மனிதன் வாழ்ந்த காலகட்டம் எது? இந்தியாவில் தமிழகத்தில் சாதியின் பெயரால் பிரச்சினைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் பலிகளும் இல்லாத காலகட்டமா? கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு என்பது உங்கள் மூதாதையர் காலத்தில் நடந்த நிகழ்வா? நான் பார்த்தது, நான் கேட்டது, நான் வாழ்ந்தது என்று நீங்கள் அடுக்குகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவையோடு நீங்கள் வாழ்ந்த பின் தான் அதை எழுதினீர்களா? செர்ரிப் பூக்களைத் திருடும் காற்றை உங்கள் பால்ய காலத்தில் நீங்கள் பார்த்து அனுபவித்த பின் தான் எழுதினீர்களா? இன்னும் இந்தப் பட்டியல், எவ்வளவு நீள முடியும், நீட்ட முடியும் என்பது என்னைவிட உங்களுக்கு விவரமாகத் தெரியும்.

சைப்ரஸ் மரம்

அதே கேள்விக்கான பதிலில்,

~~ ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படித்துவிட்டு ஒருவர் மேடையில் பேசினார், ‘பேயத் தேவர் என்கிற பெயரை எடுத்துவிட்டுப் பெரியசாமிக் கவுண்டர் என்று போட்டால் அதுதான் எங்கள் குடும்பத்தின் கதை’ என்றார். இந்தப் பொதுமை தான் முக்கியமானது. ஒரு சாதியையோ சமூகத்தையோ அடையாளப்படுத்துவது எனது நோக்கமல்ல. ~~

என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அற்புதம். பேயத்தேவர் இடத்தில் பெரியசாமிக் கவுண்டர் வருவார், பெரியசாமிப் பறையர் வருவாரா, பெரியசாமிப் பள்ளர் வருவரா? ஏன் வரமுடியாது அல்லது ஏன் இந்தப் பேட்டியில் தேவரும், கவுண்டரும் வந்த இடத்தில் பறையரும் பள்ளரும் வரவில்லை என்பதன் ஆணிவேர், சல்லி வேர் எல்லாம் நீங்கள் அறியாத ஒன்றா பேரரசே?

சாதியக் கொடுமைகள் பற்றி நீங்கள் எழுதுங்கள், எழுதாமல் இருங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால், அதை எழுதாததற்கு நீங்கள் சொல்கிற காரணங்களை உங்கள் ரசிகனாக ரசிக்கலாம். வாசகனாக ரசிக்க முடியாது. ஒரு சாதியையோ சமூகத்தையோ அடையாளப்படுத்துவது என் நோக்கம் கிடையாது என்று சொல்கிற நீங்கள், தேவர் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்காக நீங்கள் எழுதிய பாடல்களை ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள். வேண்டாம். வாசிக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. அத்தனையும் உங்கள் நினைவறையில் இருக்கும். ஒரு விரல் சொடுக்கில் வந்து குதிக்கும் என்பதை நானறிவேன். அது உங்களை தீவிரமாக ரசிப்பதன் வழியாகக் கவனிப்பதன் வழியாக நான் தெரிந்து கொண்டது. உதாரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்றே உணர்கிறேன். உங்களின் காவியமும் இதிகாசமும் எதையும் அடையாளப்படுத்தவே இல்லையா?

தாஜ்மஹால் படத்தில் நீங்கள் எழுதியுள்ள, “திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வா” பாடலின் வரிகள் பொதுமைத்தன்மை கொண்டதா? அனைத்துச் சமூத்திற்குமானதா? அதில் எந்த அடையாளமும் இல்லையா?

சரி, உங்களுக்கு இந்தியாவின், தமிழகத்தின் சாதியக் கொடுமைகள், பிரிவினைகள், பிரச்சினைகள், வன்முறைகள் எல்லாம் தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். அதே பேட்டியில் அடுத்த கேள்விக்கான உங்கள் பதிலுக்கு வருவோம்.

~~ கேள்வி 2: சில குறிப்பிட்ட சாதிகளை, அதன் பண்பாட்டு அடையாளங்களைப் பெருமிதமாக அடையாளப்படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பல காலமாக வந்தபடி இருக்கின்றன. சாதியை விமர்சித்து வரும் சினிமாக்களும் அவ்வப்போது வருவதுண்டு. இப்போது தலித் அரசியலை நேரடியாகப் பேசும் சினிமாக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உங்கள் பதில்: “தலித்துகள் ஏன் சினிமா எடுக்கக் கூடாது? அவர்களின் வாழ்க்கையை யார் சொல்வது? அவர்களின் வாழ்க்கை, துண்டு வாழ்க்கையாகச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த வாழ்க்கையாகச் சொல்லப்படவில்லை. தலித் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு கலைஞன் தான் அதை முழுமையாகச் சொல்லமுடியும். அதே சமயம், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலைத்துறைக்கு வந்தாலும், தங்கள் சமூகம் தான் பெருமிதமான சமுதாயம் என்று உயர்த்திப்பிடிப்பது சாதியச் சண்டைகளுக்கு வித்திட்டு விடும். தங்கள் சமூகத்தின் பெருமைகளைச் சொல்லுங்கள், தங்கள் சமூகத்தின் சிறப்புகளைச் சொல்லுங்கள். கடைசி வரைக்கும் போராடுகிற போராட்டத்தைச் சொல்லுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், தலித்துகளைப் பற்றி தேவர்கள் படமெடுக்க வேண்டும், தேவர்களைப் பற்றி தலித்துகள் படமெடுக்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்.” ~~

ஒரு கேள்விக்கான பதிலின் தொடக்கத்தில், “தலித் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு கலைஞன் தான் அதை முழுமையாகச் சொல்லமுடியும்”என்கிறீர்கள். பதிலை முடிக்கும்போது, “தலித்துகளைப் பற்றி தேவர்கள் படமெடுக்க வேண்டும், தேவர்களைப் பற்றி தலித்துகள் படமெடுக்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்” என்று குறிப்பீடுகிறீர்கள். உங்கள் கருத்தின்படியே பார்த்தால் பாராதா வாழ்க்கையை, வாழாத வாழ்க்கையை இவர்கள் மாற்றி மாற்றி படம் எடுத்துக் கொள்வார்களா?

ஏன் தலித்துகளைப் பற்றி தேவர்கள் படம் எடுக்க வேண்டும், ஏன் தேவர்களைப் பற்றி தலித்துகள் படம் எடுக்க வேண்டும்? எந்தப் புரிதலின் அடிப்படையில் நீங்கள் இதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்? அந்த இரண்டு சமூகத்திற்கும் இடையில் அப்படி என்ன பெரிய உறவு இருக்கிறது, அல்லது அப்படி என்ன பெரிய நெருக்கம் இருக்கிறது? அது உங்கள் வாழ்க்கைக்கு வெளியில் இருந்து நீங்கள் கேள்விப்பட்டதால் சொல்கிற விசயமா? பார்த்ததால் சொல்கிற கருத்தா? அல்லது அந்த வாழ்வின் அங்கமாக இருந்ததன் வெளிப்பாடா? சரி, இருக்கட்டும். தேவர்களைப் பற்றி தலித்துகள் படம் எடுக்க முடியுமா? அதில் கொஞ்சமே கொஞ்சமே உண்மை பேச முடியுமா? அது வெளி வருமா? தேவர்களைப் பற்றி தலித்துகள் படம் எடுத்து அதைத் தேவர்களும் தலித்துகளும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் காலம் கனிந்துவிட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ? ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படம் வெளியான காலத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அதோடு சமகாலத்தைப் பற்றிய உங்கள் புரிதலுக்கு அதை விட்டுவிடுகிறேன்.

மலையாளத்தில் “தோட்டி மக” என்றொரு நாவல், அது தமிழில் “தோட்டி மகன்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நாவல் எழுப்பிய, எழுப்பும் அதிர்வலைகள் பற்றி ஊரறியும். மூலத்தை எழுதிய தகழி சிவசங்கர பிள்ளையும், மொழிபெயர்த்த சுந்தர ராமசாமியும், ஆகிய இருவருமே தோட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இப்படி வரலாற்றில் இன்னும் பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஆக, எந்த வாழ்க்கையையும் வாழ்ந்தவன் படைப்பது நல்ல விசயம் தான். ஆனால், வாழ்ந்தவன் மட்டுமே படைக்க வேண்டும், படைக்க முடியும் என்பது சரியான கருத்தல்லவே!

மீண்டுமாக, இந்தியச் சாதியம், அதனால் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிற பிரச்சினைகள், பிரிவினைகள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், மனிதம் குழி தோண்டிப் புதைக்கப்படும் “திண்ணிய”க் கொடூரங்கள், “நந்தினிகள் பற்றி நீங்கள் எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் உங்கள் விருப்பம், உங்கள் பேனாவின் விருப்பம். ஆனால், அது நான் அறியாதது, எனக்குத் தெரியாதது என்று மட்டும் கூறாதீர்கள். ஏன் என்றால் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அறிவு பெருக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் படைத்தவர் நீங்கள். “நிலவில் பொருள்கள் எடை இழக்கும்” என்று வேறு கோள்களைப் பற்றியும் எழுதக் கூடிய விஞ்ஞான விசாலமும், “மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை” என்று இயற்கையின் நியாயமும் எழுதத் தெரிந்த புலவர் நீங்கள்.

Dalits-in-India

ஏனெனில், சாதியம் பற்றி எனக்குத் தெரியாது என்பது போல நீங்கள் குறிப்பிடுகையில், கவிப்பேரரசுவை கர்வம் கொண்ட கவிஞனாக ரசிப்பதற்கும், அசாத்தியமான பாடலாசிரியராகக் கொண்டாடுவதற்கும், அது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.

கூடவே, “எனது இலக்கியத்திற்குச் சத்தியம்தான் மூலம் என்று நினைக்கிறேன்” என்றும், “இலக்கியத்தை விட எனக்கு மனசாட்சி முக்கியம்” என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் கவிப்பேரரசு அவர்களே!

Murugan-manthiramநன்றி.

அன்புடன்,
சக சினிமாக்காரன்,
முருகன் மந்திரம்