தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை.
தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார்.
ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை ஏற்படுத்த முயல்கிறார் ஜார்ஜ். ஆனால், திரைக்கதை ஓட்டத்தில் அதற்கான தேவை இல்லாததால், ஜார்ஜ் மரியானின் பாத்திரம் ஒட்டவே இல்லை.
ரவி மரியா போலீஸ் ஜீப் டிரைவராகவும், மனோபாலா ஏட்டாகவும் வருகிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்களது உரையாடலைப் பொறுத்துக் கொள்ளப் படாதபாடுப்பட வேண்டியுள்ளது. படம் சுபமாய் முடிந்த பிறகும், க்ரெடிட்ஸ் ஓடும்போது மறுபடியும் வந்து படுத்துகிறார்கள். நான் கடவுள் ராஜேந்திரனையும், மனோபாலாவையும் கொண்டு செய்யப்பட்டுள்ள உருவக்கேலிகளை எல்லாம் இயக்குநர் கே.பி.தனசேகரன் நகைச்சுவைக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதைச் சீரணிக்கவே முடியவில்லை.
மூன்று இளைஞர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவன், ரவி மரியாவின் கையாள், ஒரு விபச்சாரி, விபச்சாரியின் தோழி என கதையில் நிறைய கதாபாத்திரங்கள். அத்தனை பேரும் பணப்பெட்டியைக் கைப்பற்ற நினைக்கின்றனர். பணம் மனிதனைப் படுத்தும்பாடும், குடும்பத்தின் மகிமையையும் எடுத்துச் சொல்வதே படத்தின் முக்கியமான கருதுகோள் எனப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், அதற்கான மெனக்கெடல் திரைக்கதையில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!
அதிரடியாய் அறிமுகமாகிப் படபடவெனப் பேசி, சாய் தீனாவை அடித்துத் துவைக்கிறார் குருமூர்த்தியாக நடித்துள்ள நட்டி எனும் நடராஜ். ‘இன்று முக்கியமான வேலை ஒன்றிருக்கு. அதன் பின் 15 நாள் விடுமுறைதான்’ என கர்ப்பிணியான மனைவியிடம் சொல்கிறார். ஆனால் ஜீப்பில் செல்லும்போதுதான், ராம்கியின் பணப்பெட்டி வழக்கு அவருக்குக் கிடைக்கிறது. மிகுந்த நெருக்கத்தைக் காட்டும் குருமூர்த்தியின் மனைவி தமிழாகப் பூனம் பஜ்வா நடித்துள்ளார். அவர், ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து எவ்வளவு அரற்றியும், கடமைதான் முக்கியமென அங்குமிங்கும் சென்றவாறும் யோசித்தவாறுமே படம் முழுவதும் உள்ளார். அவரது பாத்திரத்தைப் போலவே படம் பார்ப்பவர்களையும் ரெஸ்ட்லெஸாக (restless) வைக்கிறது படம்.