Shadow

விட்னெஸ் விமர்சனம்

பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக்.

கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் இறந்துவிட, அக்கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைகின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகளும், கான்ட்ராக்டரும். தொழிற்சங்கத் தலைவரான பெத்துராஜின் தூண்டுதலில், பார்த்திபனின் அம்மா இந்திராணி, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென நீதிமன்றத்தை அணுகுகிறார். என்ன தீர்ப்பு வருகிறது என்பதே படத்தின் முடிவு.

தோழர் பெத்துராஜாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் G. செல்வா அவர்கள் நடித்துள்ளார். அதிகாரத்தின் குரலாய் மிரட்டும் காவல்துறையினை அவர் எதிர்கொள்ளும் விதம் ரசிக்க வைக்கிறது. ரோகிணியைச் சமாதானம் செய்து வழக்கை நடத்தும்படி தூண்டுகிறார். மகனுக்காக என்றாலும், இனியொரு ஒரு முறை, தன் மகனைப் போல் யாரும் கொல்லப்படக்கூடாது என்ற கோபமும் வைராக்கியமுமே அவரைச் செலுத்துகிறது.

அதிகாரம், மூன்று விதமாக சமானியனை முடக்கப் பார்க்கிறது. ஒரு கொலை நிகழ்வை, குடியால் ஏற்பட்ட நிகழ்வாக மாற்றி வழக்கே பதியாமல் காவல்துறையின் மூலம் அதிகாரம் செலுத்துவது. வழக்கு பதிந்த பின், மிரட்டலாலும் அச்சுறுத்தலாலும் வழக்கைத் திரும்பப் பெற வைப்பது. கூடவே, அன்றாட வாழ்க்கைக்கான ஆதாரத்தைச் சீர்குலைப்பது. இவ்விரண்டிலும் தப்பிப் பிழைத்து சட்டரீதியாகக் கடைசி வரை போராடினாலும், நீதி தரும் இடத்திலும் அவர்களின் ஆதிக்கமே கோலேச்சும்.

நீதி கிடைக்காவிட்டாலும், குற்றமிழைத்தவர்களை நீதிமன்றப் படிகளில் ஏற்றினால் கூடப் போதும் என்கிறார் ரோகிணி. அந்தக் குறைந்தபட்சமான எதிர்ப்பிற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாக உள்ளது குரலற்றவர்களுக்கு.

பார்த்திபனின் வழக்கிற்கு உதவும் பல்லடுக்குமாடிவாசியாக (apartment) ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். வாழ்க்கையை தன் விருப்பத்தின்பேரில் வாழும் ஒரு சுதந்திரமானவளாக இருக்கும் கதாபாத்திரம். அதனால் அவருக்கு நேரிடும் சமூக நெருக்கடிகளுக்குக் காரணமென வேறொன்றைச் சொல்லி முடித்துள்ளார் தீபக்.

படத்தின் ஓட்டத்தில் ஓர் ஆவணத்தன்மையை உணர்ந்தாலும், படம் ஏற்படுத்தும் தாக்கம் மிக ஆழமாய் உள்ளது. நாகரீகமாக வாழுகிறோம் எனப் பெருவாரியான மக்களை ஏமாற்றிவிட்டாலே, அவர்களைச் சுற்றி நடக்கும் தவறுகள் அம்மக்களுக்குத் தெரியாமல் போய்விடுகின்றன. அம்மக்கள், அந்தப் பொய்மையை நம்பிவிட்டால் நடக்கும் அவலங்களுக்கெல்லாம் மெளனச்சாட்சியாக மட்டுமே இருப்பர்.