Shadow

ஹோலி ஜாலி சென்னை | வண்ணங்களால் என்னை நிரப்பு

வட இந்தியாவின் வசந்த காலக் கொண்டாட்டங்களில் மிக முக்கியமான திருவிழா ‘ஹோலி பண்டிகை’ ஆகும். மக்களிடையே மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும், இணக்கத்தையும் ஏற்படுத்தி, புது நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்ட விழா ஹோலி. வண்ணங்களாலும், இசையாலும், நடனத்தாலும், இனிப்புகளாலும், மகிழ்ச்சியான குதூகலமான நீர் விளையாட்டுகளாலும் நிரம்பியது ஹோலி. தமிழ்நாட்டில், ‘காமன் பண்டிகை’ என காதலை முன்னிறுத்தும்விதமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகக் கொண்டாட்டம், சற்று மாறுபட்டு, கோயிலுக்குச் சென்று புதிய தொடக்கத்திற்கான மக்களின் வழிபாடாக உள்ளது.

Mohey Rang De (வண்ணங்களால் என்னை நிரப்பு) என்ற பெயரில், இந்த ஆண்டு ஹோலி பண்டிகையைச் சென்னையில் கோலாகலமாகக் கொண்டாட India Festive Book ஓர் அறிவிப்பை ஃபிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிட்டது. அதில் பங்கு கொண்டு தேர்வானவர்களுக்கான இறுதிப் போட்டி, இன்று சென்னை நாவலூரின் அருகே தாழம்பூரிலுள்ள Coastal Grand Hostels and Resorts-இல் நடைபெற்றது. போட்டி என அந்தக் கொண்டாட்டத்தைச் சுருக்க இயலாது. மகிழ்ச்சி, ஒற்றுமை, இணக்கம், இசை, நடனம், விளையாட்டு என மக்களை ஒன்றிணைக்கும் அழகான பண்டிகை அங்கே கொண்டாடப்பட்டது. வெயிலைப் பொருட்படுத்தாமல் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் Thandai பானம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கு கொண்டவர்கள் அனைவருக்குமே பரிசுகள் வழங்கப்பட்டு, மகிழ்ச்சியானதொரு ஹோலி பண்டிகையைத் திட்டமிட்டபடி வண்ணமயமான கொண்டாட்டமாக மாற்றியிருந்தது இந்தியா ஃபெஸ்டிவ் புக்.