பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது ‘தி இன்விசிபிள் மேன்’ எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது.
மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர்.
தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன்.
கண்ணுக்குத் தெரியாத ஒருவனின் தொந்தரவிலிருந்து செசிலியா எப்படித் தப்பிக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை.
செசிலியா காஸாக எலிசபெத் மாஸ் மிக நன்றாக நடித்துள்ளார். தான் சொல்வதை யாரும் நம்பாததால் ஏற்படும் பதிதவிப்பை அழகாகத் தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு அடைக்கலம் தரும் தந்தை – மகள் ஜோடியாக ஆல்டிஸ் ஹாட்ஜும், ஸ்டார்ம் ரெய்டும் நடித்துள்ளனர்.
2 மணி நேரம் 4 நிமிடப் படம். இயக்குநர் லீ வானல் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுள்ளார். இது அவரது மூன்றாவது படம். திரைக்கதை ஆசிரியராக இது அவருக்கு 14வது படம். ஹாரர் படங்களான சா (Saw), சா ll, சா III, இன்சிடியஸ் (Insidious) மூன்று பாகங்கள் முதலிய படங்கள் மூலம் அவர் ஒரு பிரசித்தி பெற்ற திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர். இப்படம் அவருக்குத் திறமையான இயக்குநர் என்ற பெயரையும் ஈட்டித் தரும்.