
திருவண்ணாமலையைச் சேர்ந்த அகத்தியன், ஒரு படத்தில், முதல்முறையாகக் கலை இயக்குநராகப் பணிபுரிய ஒப்பந்தமாகிறார். அதற்காகப் பாண்டியில் ஒரு வீட்டில், சொந்த செலவில் கடன் வாங்கி செட் போட்டுவிடுகிறார். ஆனால், படப்பிடிப்பே நடக்காமல் அப்படம் நின்றுவிடுகிறது. வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக அவ்வீட்டை ‘பேய் பங்களா’வாக மாற்றுகிறார். அமானுஷ்யமான முறையில் அதுவும் தடைப்படுகிறது. அந்தப் பங்களாவில் நிகழும் அமானுஷ்யத்திற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை உணர்கிறான் அகத்தியா. மேலும், இரத்தப் புற்றுநோயில் பாதிக்கப்பட்ட தன் தாயின் உடல்நலக் குறைவுக்கும், அப்பங்களாவில்தான் எங்கோ 80 வருட மருந்து மறைந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அகத்தியனுக்கும் அந்த பங்களாவுக்கும் என்ன சம்பந்தம், அந்த மருந்து அகத்தியனுக்குக் கிடைத்ததா, அம்மருந்து அப்பங்களாவிற்குள் எப்படி வந்தது என்பதுதான் படத்தின் முடிவு.
சித்த மருத்துவத்தின் மேன்மையை மிக உயர்வாகச் சொல்லி முயற்சித்துள்ளார் பா.விஜய். ஃப்ளாஷ்-பேக்கில் வரும் சித்தார்த்தன் கதாபாத்திரம் மூலமாக அதை அழகாகச் சொல்லியும் உள்ளார். சித்தார்த்தனாக அர்ஜூன் நடித்துள்ளார். நாயகன் ஜீவா தான் என்றாலும், அர்ஜுனின் அட்டகாசமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் காரணமாக அவரே நாயகனாக மனதில் பதிகிறார். ஆனால் உண்மையில் படத்தின் நாயகன் என்று கலை இயக்குநர் P. ஷண்முகத்தைத்தான் சொல்ல வேண்டும். காட்சிக்குக் காட்சி அவரது உழைப்பு பளீச்செனத் தெரிகிறது. மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
ஒளிப்பதிவாளர் தீப் குமார் உபயோகித்து உள்ள வண்ணக்கலவை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, ஃப்ளாஷ்-பேக் காட்சிகளை மிகப் பிரமாதமாகக் காட்டியுள்ளார். அதைச் சாத்தியமாக்கிய, டிஐ செய்த ஐஜீன்க்கும் (iGene), உடை வடிவமைப்பாளர்களான பல்லவி சிங்கிற்கும், டினா ரொசாரியோவுக்கும் வாழ்த்துகள்.
தொழில்நுட்ப ரீதியான படக்குழுவின் மெனக்கெடல் படத்தை ரசிக்க வைக்க உதவினாலும், கதையாகப் பார்வையாளர்களை உள்ளிழுக்கச் சிரமப்படுகிறது. சித்தார்த்தன் கண்டுபிடித்தது எலும்புருக்கி நோயுக்கான மருந்து, அகத்தியனுக்குத் தேவைப்படுவதோ இரத்தப் புற்றுநோயுக்கான மருந்து. இரண்டும் ஒன்றுதான் என இயக்குநர் நம்பி, அதைத் தொடர்ச்சியாகப் பலமுறை வசனத்தில் கொண்டு வந்துள்ளார். ஜீவா பிறந்தது கிரகமாலிகா தினத்தன்று என சார்லி சொல்கிறார். ஜீவா வாலிபனாகி விட்ட பின், தொலைக்காட்சி செய்திகளில் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிரகமாலிகா தோன்றுகிறது எனச் சொல்கின்றனர் (நாசா விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 28 ஆம் தேதி ஏழு கிரகங்கள் நேர் கோட்டில் சந்திக்கும் அதிசய நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளது. ஜோதிட ரீதியாக, நவகிரகங்களும் அடுத்தடுத்த ராசி கட்டங்களில் ஒன்றன் பின் ஒன்றாக மாலை போல் அமைந்திருந்தால், அது கிரகமாலிகா என்றழைக்கப்படும். அதே தேதியில் அகத்தியாவும் வெளியாகியுள்ளது. இந்தத் தற்செயல் நிகழ்வை இயற்கையின் ஆசியாகக் கருதுகிறார் பா.விஜய்).
ஷா ரா, ரெடின் கிங்ஸ்லி போன்றோர் இருந்தாலும் படத்தில் நகைச்சுவை கிஞ்சித்தும் இல்லை. வழக்கமான வில்லனாகச் சுருங்கி விடுகிறார் எட்வின் டூப்ளெக்ஸாக நடித்துள்ள எட்வெர்ட். சண்டைக்காட்சிகளைச் சுவாரசியமாக்குவது, ஏன் எந்த சமயத்தில் அச்சண்டை நிகழ்கிறது எனும் காரணத்தினாலே! திரைக்கதை அதற்கான இடமளிக்காததால் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி மனதில் பதியாமல் போய்விடுகிறது. மண் சார்ந்த மரபு வழி அறிவைத் திரைப்படமாக்கத் துணிந்தது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், அதைச் சுவராசியமாகச் சொல்வது அதனினும் அவசியம்.