Shadow

லைகர் விமர்சனம்

கலப்பு தற்காப்பு கலைகளில் (MMA) சாம்பியன்ஷிப் பெறவேண்டுமென நினைக்கிறான் ராயபுரத்தைச் சேர்ந்த லைகர். நேஷ்னல் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட ஆண் சிங்கமான பலராமிற்கும், அவரது மனைவி பெண் புலியான பாலாமணிக்கும் பிறந்தவன் என்பதால் லைகர் என காரணப் பெயரைச் சூட்டுகின்றனர்.

மும்பையிலுள்ள JKD எனும் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடங்குகிறான். முதலில் அங்கு வேலை செய்பவனாகச் சேர்க்கப்பட்டு, பின் பயிற்சி அளிக்கிறார் அவனது பயிற்சியாளர். இடையில், லைகருக்குத் தானியாவுடன் காதல் வருகிறது. காதலி ஏமாற்ற, அதிலிருந்து மீண்டு தேசிய சாம்பியன்ஷிப்பை வென்று, சர்வதேச போட்டிக்காக அமெரிக்கா செல்கிறான். சர்வதேச சாம்பியன்ஷிப்பை அவனால் பெற முடிந்ததா என்பதே படத்தின் கதை.

‘ஆக்ஷன் ஸ்போர்ட்’ என படத்தினை வகைப்படுத்தியுள்ளனர். முதல் அரை மணி நேரம் மட்டும் அப்படி தீயாக ஆரம்பிக்கும் படம், அதே வேகத்தில் காதல் எனும் குறுக்கு சந்தில் ஒரு டர்ன் அடிக்கிறது. அங்கு ஆட்டம் காண ஆரம்பிக்கும் திரைக்கதை குத்துயிரும் குலையிருமாக, தேசிய சாம்பியன்ஷிப் போட்டி வந்தடைகிறது. ‘இந்தியன்டா’ என நரம்பு புடைக்க ஆவேசமாகும் லைகர், அமெரிக்காவில் சர்வதேசப் போட்டிக்கு வந்தடைகிறார். என்ன தான் வளர்ச்சியடைந்தா அமெரிக்காவில் என்றாலும் அங்கே குறுக்கு சந்துகள் இருக்காதா என்ன? ஃபைனல்ஸ் வரை போய்விடும் நாயகன், நாயகிக்கு ஒரு பிரச்சனை எனத் தெரிய வரும்போது ஓர் அந்தர்பல்டி அடிக்கிறார். காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கவர் போல், கதையை விட்டு அந்தரத்தில் மிதக்கும் தானியா பாத்திரத்தில் அனன்யா பாண்டே, தேவையில்லாத ஆணியாகவே படத்தில் துருத்திக் கொண்டுள்ளார்.

நாயகனுக்குக் காதல் வரக்கூடாதா? ‘இந்தியாடா, இந்தியன்டா’ என்று கோஷமிட்டு விட்டு, ஃபைனலுக்குச் செல்லாமல் நாயகியைக் காப்பாற்ற லைகர் புறப்படும்போது, ‘சரிதான்டா!’ என்றிருக்கிறது.  ஆனால் சண்டைப்படம் என முடிவு செய்யும்பொழுது, அதையொட்டி ஒரு சிறு கிளையாக காதல் அத்தியாயம் பிரியலாம். அதை விட்டுவிட்டு, மக்கள் மீது சகட்டுமேனிக்குத் தாறுமாறாகச் சுமத்தப்படும் வரி போல் அழுத்தம் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. லைகரின் கோச்சாக நடித்துள்ள ரோனித் ராய், “ஃபோகஸ் ரொம்ப முக்கியம்” என்பார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்திற்கோ திரைக்கதை மீது சுத்தமாக ஒரு ஃபோகஸே இல்லை. ‘ஜானர் ஃபோகஸ்’ என்பது இயக்குநர்களுக்கு இல்லாவிட்டால், பார்வையாளர்கள் எப்படி அலைக்கழிக்கப்படுவார்கள் என்பதற்கு இப்படம் நல்ல எடுத்துக்காட்டு. முதற்பாதியில் திடீர் திடீரென முளைக்கும் பாடல்களைப் பொறுத்துக் கொள்ள அசாத்திய பொறுமை தேவைப்படுகிறது. நாயகன் ஜெயிக்கணும் என அவனது அம்மாவாய் மிரட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன் போல் பார்வையாளர்களும் நினைப்பார்கள் என்று பூரி ஜெகன்நாத்திற்குத் தோன்றாமல் போய்விட்டது.

திக்குவாய் லைகராக விஜய் தேவரகொண்டா, MMA ஃபைட்டருக்கான நேர்த்தியான உடற்கட்டுடன் ரசிக்க வைக்கிறார். அவரது கோபமும் திமிரும் ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகள் ரசிக்க வைத்தாலும், முழுத் திருப்தியை அளிப்பவையாக இல்லை. தொடக்கம் முதலே, எத்தனை பேர் வந்தாலும் அடிப்பார் எனக் காட்டப்படுவதால் இருக்கும். MMA-விற்கான முன் தயாரிப்புகள், யுக்திகள் என எதிலும் டீட்டெயிலிங் இல்லை. ‘பொண்ணுங்கன்னா அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்’ என அட்வைஸ் செய்து கொண்டிருக்கும் போதே, Krav Maga பயிற்சி பெற்ற அமெரிக்கப் பெண்களிடம் அடிப்பட்டு மயக்கமுறுகிறார் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டா செய்யும் சம்பவத்தை விட விஜய் தேவரகொண்டாவிற்குச் செய்யப்படும் சம்பவத்தை ரசித்துப் படமாக்கியுள்ளார் பூரி ஜெகன்நாத்.

படத்தின் முதல் அரைமணி நேரத்தினைப் போல், விஜய் தேவரகொண்டாவுக்கும், மைக் டைசனுக்குமான கடைசி 15 நிமிட ஸ்க்ரீன் ஸ்பேஸ் ரசிக்க வைக்கிறது. மைக் டைசனை, விஜய் தேவரகொண்டா வெல்வது போல் காட்ட இயலுமா? அதை ‘நகைச்சுவை’யாகக் கொண்டு போய் ஒப்பேத்திவிடுகிறார் இயக்குநர் பூரி ஜெகன்நாத்.