32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 21/12/2024 2 நிமிட வாசிப்பு Updated: 22/12/2024 அயல் சினிமா
எழுத்து அளவு:

நிலம் சார்ந்த போராட்டத்தை மையப்படுத்திய படமாக முஃபாசா அமைந்துள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பெரு வெள்ளத்தில் தன் தாய் தந்தையரைப் பிரிந்த, முஃபாசா என்ற குட்டிச் சிங்கம், இன்னொரு நிலம் வந்தடைகிறது. ஆறு, மலை கடந்து தான் வாழ ஒரு நிலமும், அங்கு தன் இனமும் இருப்பதாக முஃபாசாவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நிலம் மாறி வந்த முஃபாசாவிற்கு டேக்கா எனும் குட்டிச் சிங்கம் தன் தாய் தந்தையிடம் பேசி, தங்கள் நிலத்தில் தங்குவதற்கு அனுமதி வாங்குகிறது. இரு சிங்கங்களும் நண்பர்களாக வளர்கின்றனர். இவர்கள் வாழும் நிலத்தை அபகரிக்க வெண்சிங்கப்படை ஒன்று வருகிறது. அந்தப் படையை எதிர்கொள்ள இயலாமல் டேக்கா, முஃபாசா இருவரும் வெளியேறுகிறார்கள். வெளியேறும் போது நடக்கும் சண்டை ஒன்றில், வெண்சிங்கப் படையின் இளவரச சிங்கத்தை, முஃபாசா கொன்றுவிடுகிறது. இதனால் வெண்சிங்க ராஜா முஃபாசாவை பலி வாங்கத் துரத்துகிறது. துரத்தலை ஒரு கட்டத்தில் நேர்கொள்ளும் முஃபாசா எப்படி வெண்சிங்கப்படையை வீழ்த்துகிறது என்பதே படத்தின் பரபர க்ளைமாக்ஸ்.

எப்படித்தான் ஹாலிவுட் படங்களில், இயல்பான ஒரு கதைக்குள் இவ்வளவு பெரிய எமோஷ்னலைக் கொண்டு வருகிறார்களோ தெரியவில்லை. மிகச்சிறந்த கதாபாத்திர உருவாக்கங்கள் படத்தைப் பெரிதும் தாங்கிப் பிடிக்கிறது.

வரைகலை துணையோடு விலங்குகள் எல்லாம் அட்டகாசமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முஃபாசா, டேக்கா ஆகிய சிங்கங்களின் முகபாவங்கள் சிறப்பு. அர்ஜுன் தாஸ் குரல் முஃபாசாவிற்குப் பெருந்துணை புரிந்துள்ளது. இழப்பைத் தன்னுள்ளே வைத்திருக்கும் அந்தக் குரல் படத்திற்குப் பெரும்பலம்.

குரங்கு ஒன்று தன்வகைப் பட்ட சிறு விலங்குகளுக்கு கதை சொல்வது போல்தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த விலங்குகளுக்கு டப்பிங் கொடுத்துள்ள சிங்கம்புலி, ரோபோ சங்கர் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.

தனக்கான தனி நிலத்தைத் தேடி முஃபாசா டேக்காவோடு, ஒரு பறவை, ஒரு குரங்கு, ஒரு பெண் சிங்கமும் பயணிக்கின்றன. அந்தப் பெண் சிங்கத்திற்கும் முஃபாசாவிற்கும் ஏற்படும் காதல் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

நிறைய நல் அனுபவங்கள் படத்தில் கிடைத்தாலும், க்ளைமாக்ஸ் பெரிதாக நம்மை ஏமாற்றவே செய்கிறது. சில காட்சிகளைப் பார்க்கும் போது, சீக்வெல் படம் பண்ணணுமே என்பதற்காகத் திணித்தது போலிருந்தது. அதிகாரத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்ற கருத்தை வலிமையாகச் சொன்னவிதத்தில் ‘முஃபாசா: தி லயன் கிங்’ பெரிதும் ஈர்க்கிறது.

– M. ஜெகன் கவிராஜ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.