Shadow

எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

ஜூன் 26 அன்று, ட்ரைமெடும் வித்யாசாகர் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் இணைந்து, AUTISM – Through the lens of Multiple Intelligence என்ற கவர்ந்திழுக்கும் அற்புதமான தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்கள் (ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு இது).

ஹாவெர்ட் கார்ட்னர் எனும் அமெரிக்க உளவியலாளர், 1983 இல் ‘பல்திற அறிவாற்றல் (Multiple Intelligence)’ எனும் தியரியை உருவாக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்துள்ளது என்ற பொதுவான கருத்தாக்கம் தான் இந்தத் தியரி எனினும், குழந்தைகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களது திறனை வளர்க்க இத்தியரியைப் பயன்படுத்தலாம்.

பல்திற அறிவாற்றலை (MI) எட்டாகப் பிரிக்கிறார் ஹாவெர்ட் கார்ட்னர். அவற்றைக் கொண்டு, குழந்தைகளது தனித் திறமையை அடையாளம் கண்டு எப்படி அவர்களது செயல்திறனை ஊக்குவிப்பது எனவும், அப்படி அடையாளம் கண்ட திறமையின் ஊடாக எப்படி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உலகை அணுகுவது என்றும் வித்யாசாகரினைச் சேர்ந்த மருத்துவர் உஷா கிருஷ்ணன் விளக்கினார்.

பல்திற அறிவாற்றல் எவை?

1. மொழியியல் (Linguistic)
2. இசையறிவு (Musical)
3. காரண காரியத் தொடர்பு/ கணித அறிவு (Logical/Mathematical)
4. இடம் சார்ந்த அறிவு (Spatial)
5. உடல் மற்றும் தசை இயக்க அறிவு (Bodiley kinesthetic)
6. இயற்கை சார்ந்த அறிவு (Naturalistic)
7. தனி மனித உறவுகள் (Interpersonal)
8. தன்னைப் பற்றிய அறிவு (Intrapersonal)

Multiple Intelligence

புதையலுள்ள ஒரு வீட்டிற்கு எட்டுக் கதவுகள் உள்ளன. அதில் இரண்டு மூடப்பட்டுள்ளது. அழுத்தம் கொடுத்துப் பிடிவாதமாகத் திறப்பதற்கு முயல முயல, அவை மேலும் வலுவாக இறுக்கம் பெறுகின்றன. பின் புதையல் எடுக்க என்னத்தான் வழி?

‘மிகச் சுலபம். மற்ற ஆறு கதவுகளில் ஒன்றைத் திறக்கப் பயன்படுத்துவது தானே!? அப்படித்தான், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் interpersonal and linguistic intelligence எனும் இரண்டு அறிவாற்றலின் குறைப்பாட்டைத் தவிர்த்து, மற்ற 6 அறிவாற்றல்கள் ஏதேனும் ஒன்றின் மூலம் அவர்களை அணுகி இணக்கமாக வேண்டும்” என்கிறார் உஷா கிருஷ்ணன்.

வித்யாசாகரின் கேஸ் ஸ்டடிகள் சிலதை எடுத்து இயம்பினார் மருத்துவர் ஷிரின். அதிலொன்றில், ஒரு அம்மா தன் மகனிடம், “பாலத்தைக் கடக்கும் பொழுதெல்லாம் நீ அதில் ஆர்வம் காட்டுவது போலுள்ளதே?” எனக் கேட்கிறார். அதை ஆமோதிக்கும் ஆட்டிசத் தன்மையுள்ள சின்னு, அதற்கு அளித்துள்ள அட்டகாசமான பதில் கீழ் வருமாறு:

ஒரு பாலத்தைக் கடக்கும் போது
வளர்ந்தவனைப் போல் நான் உணர்கிறேன்
பாலத்தின் கீழ் ஒரு நதியோ ஓடையோ
அல்லது வழிமாறிச் செல்லும் எதுவோ
இருக்கக் கூடும்
இத்தடைகளுக்கு மேல்
பாலம் அனைவருடைய
பிரச்சனைகளையும்
நம்மைக் காக்கும் கடவுளைப் போல்
நமக்கு மேலுள்ள சக்தியைப் போல்
நேர் செய்கிறது.
பாலத்தின் மேல் நீ செல்கையில்
உன் தடைகள் தானாகவே தகர்ந்து விடுகின்றன
கடவுளால் ஆசீர்வதிக்கப்படும் போது
நம் அனைத்து பிரச்சனைகளுக்கும்
எதோ ஒரு விதத்தில்
நம்மால் தீர்வு காண முடிவது போல்
இல்லையா அம்மா?

என்ன? அதை நியாயமாக எதிர்கொண்டு
உள்வாங்கி அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்
பிரச்சனையே அங்கு தான் உள்ளது

அத்தகைய அரிதான
பிடிவாதமான
ஆனால் மாற்றக்கூடிய மனத்தடையை
உடைய நான்
சமூகத்தில் நிராகரிப்பைச் சந்திக்கும் போது
நம் குடும்பத்தாரை, நலம்நாடுபவர்களை
ஒரு பாலமென நினைத்தால்
என் பிரச்சனைகள் யாவும்
பாலத்தடி நீர் போல் ஓடிவிடுகின்றன

இறைவன் மேலானவன்
அவன் அமைப்பும் மேலானது

நான் சரியாகத்தானே ஒப்பிடுகிறேன்
அருமைத் தாயே?

– சின்னு (மொழிபெயர்ப்பு உதவி: பத்மஜா நாராயணன்)

(சின்னுவின் பதிலை, ஆங்கில மூலத்திலேயே படிக்க இங்கே சொடுக்கவும்.)

வித்யாசாகரின் இயக்குநரான ரஜுல் பத்மநாபன் தனக்கு வந்த ஒரு கடிதத்தைப் பற்றிச் சொன்னார். அதில், “நான் நார்மலான பெண்ணாகப் பிறந்திருந்தால் எனக்குக் கல்யாணம் செய்து வைத்திருப்பார்கள். நான் வீல் சேரில் இருப்பதால், எனக்குக் கல்யாணமாகலை. இப்போ வக்கீலாகிட்டேன். எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு” எனத் தன் மகிழ்ச்சியை ஒரு ஆட்டிச மாணவி பகிர்ந்துள்ளார்.

‘ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒருவரைப் போல் மற்றவர் இருக்க மாட்டார்கள். அவர்களைப் புரிந்து கொள்ள ஒரே மாதிரியான அணுகுமுறையை வகுக்க முடியாது. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஆக, அவர்களைப் புரிந்து கொள்ள soul search மிகவும் அவசியம்’ என்கிறார் மருத்துவர் உஷா கிருஷ்ணன் (ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட டோன்னா வில்லியம்ஸின், Autism: An Inside-Out Approach, Nobody Nowhere, Somebody Somewhere போன்ற புத்தகங்களைப் பரிந்துரைத்தார்).

வித்யாசாகரின் மாணவன் ஒருவன் அதன் இயக்குநரிடம், “டியர் ரஜுல் ஆன்ட்டி, என்னால் ஒலிகளுக்கென ஒரு டிக்ஷ்னரியே உருவாக்க இயலும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, என்னால் உங்க மொழியைப் புரிந்து கொள்ள முடிந்தது போல, உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை” எனக் கூறியிருக்கிறான். ட்ரைமெட் நிறுவனரான மருத்துவர் E.S.கிருஷ்ணமூர்த்தி, “நாம் வட்ட வடிவத் துளையில், சதுர வடிவ ஆணியைப் பொருத்த முயற்சி செய்து வருகிறோம். அது தான் நார்மலான விஷயமென நம்புகிறோம். அப்படி முயல்வதால் தான், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், நார்மலென நாம் நம்பும் விஷயத்தைத் திணிக்கப் பார்க்கிறோம். மாறாக, நாம் அவர்களது தனித்தன்மையைப் பேணுவது மிக அவசியம். நல்லவேளையாக, knowledge-ஐ விட்டு மெல்ல skills-ஐ நோக்கி உலகம் நகரத் தொடங்கியுள்ளது” என்றார்.

TriMed-Vidya Sagar

ஆக, குழந்தைகளைப் புரிந்து கொள்ளுதல் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. அவர்களை நாம் வரையறுத்து வைத்திருக்கும் சட்டகங்களுக்குள் திணிக்க முயலாமல், அவர்களது இயல்பான அறிவாற்றல்கள் மலர உதவ வேண்டும். அதற்கு, ஒருவரைப் போல் ஒருவர் இல்லை என்ற எளிய உண்மையைப் பெற்றோர்கள் உணர வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷம். அதை வெளி கொணர, எந்தக் கதவின் வழியாக அணுகுகிறோம் என்பதிலேயே ரகசியச் சூட்சமம் அடங்கியுள்ளது.

– தினேஷ் ராம்