பாராசூட் என்பது டிவிஎஸ் XL இன் பெயர். தந்தையின் அடிக்கு மிகவும் பயப்படும் பதினொரு வயதாகும் சிறுவன் வருண், தன் ஏழு வயது தங்கை ருத்ராவை மகிழ்விக்க பாராசூட்டில் அவளை அழைத்துச் செல்கிறான். வண்டி காணாமல் போய்விடுகிறது. தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள அஞ்சி, பாராசூட்டை மீட்கும் முயற்சியில் இறங்கும் சிறுவர்கள் ஒரு பக்கம், பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள் மறுபக்கம் என தொடர் நல்லதொரு எமோஷ்னல் ஜர்னிக்கு உத்திரவாதம் அளித்துள்ளது.
இயக்குநரும் நடிகருமான மூர்த்தி, பிலிப்ஸ் எனும் குடிகார கதாபாத்திரத்தில் வருகிறார். குறைவான திரை நேரத்திற்கே வந்தாலும் நிறைவாகத் தன் பங்கைச் செய்து கலகலப்புக்கு உதவியுள்ளார். மறுபடியும், சக மனிதர்கள் மீது அக்கறையுள்ள ஒரு டெம்ப்ளேட் கதாபாத்திரத்தில் பவா செல்லதுரை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் விறைப்பாக வந்து செல்கிறார்.
காளி வெங்கட்டிற்கு மீண்டுமொரு அட்டகாசமான குணசித்திர வேடம். சிறுவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் சார்லஸாக வரும் காளி வெங்கட்டின் கதாபாத்திர அறிமுகத்தின் பொழுதே புன்னகைக்க வைக்கிறார். அவரது மகனாக வரும் சிறுவனும் ரசிக்க வைக்கிறான். சட்ட ஒழுங்கு ஆய்வாளராக இருந்து போக்குவரத்துத் துறைக்குப் பதவி இறக்கப்படும் பாத்திரத்தில் கிருஷ்ணா வருகிறார். சிறுவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென அவரது ஆர்வத்தை மெச்ச முடிந்தாலும், gps-இல் track செய்யப்படும் வாகனத்தின் நகர்விடத்தைக் கண்டுபிடித்த பின், அவரது நடவடிக்கையில் ஏற்படும் அசமந்தத்தனம் ஸ்க்ரிப்ட்டின் போதாமையைச் சுட்டுகிறது. வேலூர் தாண்டிச் செல்லும் வண்டியைத் தடுத்து நிறுத்த சென்னையில் இருந்து ஆடி அசைந்து புறப்படுகிறார். லாஜிக்கில் சொதப்பினால் எமோஷ்னல் கிராஃபில் அதைச் சரிப்படுத்தி விடுகின்றனர். கிருஷ்ணா, இந்தத் தொடரின் தயாரிப்பாளருமாவார். ஷாம், தெலுங்குப் படத்திற்காகத் தாடி வளர்த்துவிட்டதாலும், விதார்த்தின் தேதி கிடைக்காததாலும், கிருஷ்ணாவே முதல்முறையாகப் போலீஸ் வேடமேற்று நடித்துள்ளார்.
தீதும் நன்றும் படத்தை இயக்கிய ராசு ரஞ்சித் இத்தொடரை இயக்கியதோடு, கோலா எனும் பாத்திரத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். ஸ்ரீதர் என்பவர் இத்தொடரை எழுத்துயிர் கொடுத்துள்ளார். ‘போலீஸ்க்கு நல்லது கெட்டது தெரியுதா? ஏழை, பணக்காரன் தான் தெரியுது’ என வசனங்கள் மூலமாகவும் சிற்சில இடத்தில் கவனிக்க வைத்துள்ளார் ஸ்ரீதர். கோலாவின் நண்பராக வரும் இன்பா ரவிகுமார் ரசிக்க வைக்கிறார்.
அடித்தால் தான் குழந்தைகள் ஒழுங்காக வளர்வார்கள் என தீவிரமாக நம்பும் ஷண்முகமாகக் கிஷோர் நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வென நிரூபித்துள்ளார். தொடரின் கருவை ஆத்மார்த்தமாக உள்வாங்கி, இது சமூகத்துக்குச் சொல்லப்பட வேண்டியதென்ற தீர்க்கமான நம்பிக்கையில் கமிட்டாகியுள்ளார். தொடரின் இறுதியில், காவிரி நீரைத் தர மறுத்து கன்னடர்கள், தமிழரின் வாகனத்தை எரிக்கும் காட்சி வருகிறது. கன்னடரான கிஷோரிடம், இந்தக் கதாபாத்திரத்தை எப்படி ஏற்றுக் கொண்டு நடித்தாரென்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ‘இது உண்மையில் நடந்த வரலாறுதான். அதை மாற்ற முடியாது. இனி அது போல் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், அந்தச் சம்பவத்தை கதையில் அழகாகப் பொருத்தியுள்ளனர். அதனால் நடித்தேன்’ என்றார் கிஷோர். மையக்கதையில் இருந்து விலகினாலும், முடிவை சுபமாக ஒரு கன்னடச் சிறுமியின் மூலம் நிறைவாகவே முடித்துள்ளனர். வருண், ருத்ராவின் தாய் லக்ஷ்மியாக, இயக்குநர் அகத்தியனின் மகள் கனி திரு நடித்துள்ளார். கிஷோர் போன்று அனுபவம் மிக்க நடிகருக்கு ஈடு கொடுக்கும் வகையில் நன்றாகத் தன் பங்கினைச் செய்துள்ளார்.
முடிவு சுபமாக இருக்கும் என்பதை முன் கூட்டியே ஊகிக்க முடிந்தாலும், சிறுவர்களின் பரிதவிப்பு கலங்க வைக்கிறது. வருணாக சக்தி ரித்விக்கும், ருத்ராவாக இயலும் நடித்துள்ளனர். இயல், லியோ படத்தில் விஜயின் மகளாக நடித்தவர். சக்தி ரித்விக்கும் சுமார் 18 படங்களில் நடித்துள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டார் பிளஸில் வெளியாகியுள்ள, 22+ நிமிடங்களலான 5 அத்தியாயங்கள் கொண்ட பாராசூட் தன் இலக்கை நோக்கி அழகாக மிதக்க அண்ணன் – தங்கையாக நடித்துள்ள சக்தி ரித்விக்கும், இயலுமே காரணமாக உள்ளனர்.
[…] தோழர் கேகே-வாக வரும் கிஷோர்தான். பாராசூட்டில் ஒரு கண்டிப்பான தந்தையாகப் […]