Shadow

சொர்க்கவாசல் விமர்சனம்

‘இந்தப்  படத்தின் வகைமை சர்வைவல் த்ரில்லர். இதைப் புரிந்து கொண்டு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும்’ என ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார் எழுத்தாளர் தமிழ் பிரபா.

செய்யாத கொலைக்காகச் சிறைக்குச் செல்கிறான் பார்த்திபன். சிறையைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சிகாமணியை ஒடுக்க நினைக்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார். எதிர்பாராத விதமாக சிகாமணி இறந்து விட, சிறைக்குள் கலவரம் மூள்கிறது. அந்தக் கலவரத்தை யார் யார் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

சிறைக்குள் நடக்கும் கலவரத்தை விசாரிக்க வருகிறார் இஸ்மாயில். அவரது விசாரணையில் இருந்தே கதை விரியத் தொடங்குகிறது. வேகமாகப் பேசும் நட்டிக்கு நிதானமாக விசாரிக்கும் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார்.

சிறைச்சாலையையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சிகா எனும் சிகாமணியாக செல்வராகவன் நடித்துள்ளார். அவரது தலைமையை ஏற்றுக் கொள்ளும் டைகர் மணியாக ஹக்கிம் ஷா நடித்துள்ளார். அவசர புத்திக்காரராகக் கோபம் நிறைந்தவராக, சிகாமணி மீது அபிமானம் கொண்டவராக நல்லதொரு நடிப்பை வழங்கியுள்ளார். ஹக்கிம் ஷாவைப் போலவே, கண்காணிப்பாளர் சுனில் குமாராகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ள ஷரஃபூதீனும் மலையாள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்மாயில் தன் விசாரணையைச் சிறையில் 30 வருடங்களாகப் பணிபுரியும் கட்டபொம்மனிடம் இருந்து தொடங்குகிறார். கட்டபொம்மனாக கருணாஸ் நடித்துள்ளார். போகுமிடம் வெகுதூரமில்லை போல், இப்படமும் அவர் கேரியரில் குறிப்பிடும்படியான ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மையில் சொர்க்கத்தின் வாசலுக்கான சாவி இவருக்கே கிடைக்கிறது படத்தில்.

பார்த்திபனாக ஆர்ஜே பாலாஜியை அதிகம் பேசாத ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது, ‘தேன் வந்து பாய்கிறது காதினிலே!’ எனும் உணர்வினை அளிக்கிறது. அவர் வாயைத் திறக்காமல், முகத்தில் எந்த உணர்ச்சியுமற்று நோக்குவது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவது போன்ற தோற்றமயக்கத்தைத் தருகிறது. ஆனால், அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சில காட்சிகளில் பேசித் தொலைத்துவிடுகிறார்.

செய்யாத குற்றத்துக்காகச் சிறை செல்பவனின் மனநிலையை அவர் முகம் ஒரே ஒரு ஃப்ரேமில் கூடப் பிரதிபலிக்கவில்லை. ‘யார்றா இங்க சிகாமணி?’ என சிறைக்குள் சென்றதுமே வம்படியாக வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக் கொள்கிறார். சிகாமணியைப் பார்த்ததும், ‘என்னடா மயிறு! என்ன கொல்லப் போறியா? கொல்லுடா’ எனக் கத்திவிட்டு, ‘வலிக்குதுடா’ என அழுது புரண்டு அழுகிறார். இந்த சிறுபிள்ளைத்தனம், மகாநதி கிருஷ்ணசுவாமியின் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது.  பெரிய பெரிய ரெளடிகளையும் அரசியல்வாதிகளையும் சிறைக்குள் இருந்து அசால்ட்டாக டீல் செய்ததாகச் ‘சொல்லப்படும்’ சிகாமணி, “இவனைப் போய் ஏன்டா நோண்டுறீங்க?” என காண்டாகிவிடுகிறார். முதல் பாதியில், இந்த இரு கதாபாத்திர வடிவாக்க (characterization) சொதப்பல்களைக் கண்டுக்கொள்ளாமல் விட்டால், இரண்டாம் பாதியில் அற்புதமான திரைக்கதை காத்துள்ளது. மனித மனங்களின் கணக்குகளைப் பிரதிபலிக்கும் நேர்த்தியான திரைக்கதையை அளித்துள்ளார் கிருஷ்ணகுமார். மேக்கிங் அடிப்படையிலும், இரண்டாம் பாதியின் திரைக்கதை நேர்த்தியாலும், இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக இது இருக்கும்.

கலவரத்தில் இருந்து உயிர்தப்ப நினைப்பது (Survival) மூன்று எதிர்க்கட்சி சமஉ-க்கள்தான். தங்களைக் காப்பாற்றினால், பார்த்திக்கு உதவுகிறேன் என பேரம் பேசுகின்றனர் சமஉ-க்கள். “தப்பே பண்ணாம நான் இத்தனை நாள் சிறையில் இருந்ததுக்கு யார் பொறுப்பு?” எனக் கொதிக்கிறார் பார்த்திபன். கலவரத்துக்கு இடையில் ஓர் அறக் கிளுகிளுப்பு தேவைப்படுகிறது அவருக்கு. படம் முழுவதுமே ஆர்ஜே பாலாஜியின் வாயைக் கட்டியிருந்தால் படம் தரும் அனுபவம் கூடுதல் உவப்பாக இருந்திருக்கும். அவர் பேசிய பேச்சைப் பார்த்து, ‘நடிச்சா ரொம்ப நியாயக்காரராகத்தான் நடிப்பேன்’ என ஆர்ஜே பாலாஜி அடம்பிடிச்சிருப்பாரோ என ஐயம் எட்டிப் பார்த்தது. நல்லவேளையாக இயக்குநர் சித்தார்த் விஷ்வநாத் அத்தகைய ஏமாற்றத்தை அளிக்காமல் படத்தை எதார்த்தமாக நம்பகத்தன்மையுடன் முடித்துள்ளார்.