

குழந்தையைக் கடத்தினான் என அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஜீவாவைக் காவல்துறை கைது செய்கிறது. குழந்தையைத் தான் கடத்தவில்லை ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது, தானென்ன செய்தேன் என்று ஒரு பெரும் பஞ்சாயத்தை இழுத்து விடுகிறான் ஜீவா. ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தினின்று அதிகாரத்திற்கு வருபவர்களை ஜீவா பெருங்கோபம் கொண்டு எப்படிப் பழிவாங்குகிறான் என்பதுதான் படத்தின் கதை.
சாதிவெறி பிடித்த சகோதரர்கள் முத்துப்பாண்டி, ரத்னவேலுவாக முறையே மைம் கோபியும், அருள்தாஸும் நடித்துள்ளார்கள். சகோதர வில்லன்களாக நடிக்க மிகப் பொருத்தமானவர்கள். கேங்கரஸ் படத்திலும் பணத்தாசை பிடித்த சகோதர வில்லன்களாக நடித்திருப்பர். தாடி வைத்திருக்கும்போது இனிகோ பிரபாகரை நினைவுப்படுத்தும் முகச்சாயலில் உள்ளார் விஜித் பச்சன். நாற்பதுகளில் இருப்பது போன்ற தோற்றத்தில், ஒரு சோர்வையும், அனைத்தையும் இழந்து பழிவாங்கும் வெறியை மட்டும் தக்க வைத்திருக்கும் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜித். ஆனால் ஃப்ளாஷ்-பேக்கில் காதல் காட்சிகளில் விஜித்தால் அதே போல் தன்னை நேர்த்தியாகப் பொருத்திக் கொள்ள முடியவில்லை.
சாராவாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். தனது அக்காவின் கணவரிடம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதிரியாரின் வாக்கு பலிதம் ஜீவாவால் ஏற்படும் எனக் கருதியும், காதலில் விழுகிறார். சட்டிக்குத் தப்பி நெருப்பில் சிக்கிய கதையாக மாஹேவில் இருந்து ஓடி வந்து சாதிவெறிக் கிராமத்தில் சிக்கிக் கொள்கிறார் சாரா. அவருக்கு நேரும் கொடுமைக்குத்தான் பழிவாங்க நினைக்கிறார் ஜீவா.
மாஹேவை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் JB தினேஷ்குமார். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டிய உணர்வுபூர்வமான காட்சிகளில், கேமரா கோணங்கள் தேமோ என வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளன. நாயகனின் வலியைப் பார்வையாளர்களின் வலியாக மாற்றும் முனைப்பில்லை ஒளிப்பதிவில். டி.எஸ்.பி. செழியனாக நடித்திருக்கும் சாய் வினோத், விசாரணை எனும் பெயரில் நாயகனின் பின் கதையைப் பார்வையாளர்களுக்குச் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் படத்தில் அதற்காகவே கதைசொல்லியாகப் பவா செல்லதுரையையும் பயன்படுத்தியுள்ளனர். “நாவலை பகவத் கீதையில் இருந்து தொடங்குகிறார் எழுத்தாளர். அதர்மம் நடக்கும்பொழுதெல்லாம் பகவான் தோன்றுவார். அப்ப இந்த நாட்டில் அதர்மமே நடக்கலையா?” என பவா செல்லதுரையின் பின்னணிக் குரல் ஒலிக்கும் பொழுது, ‘படத்தொகுப்பாளர் – ராமர்’ என்ற எழுத்துகள் திரையில் தோன்றுவது நல்ல அவல நகைச்சுவை. எனினும் மையப்படத்தில் இப்படியான தருணங்களை உருவாக்கத் தவறியுள்ளது படக்குழு. இளையராஜாவின் பின்னணி இசையும் தாக்கத்தை ஏற்படுத்துமளவு இல்லை.
நாயகனின் வாயிலாக இயக்குநர் சிவபிரகாஷின் சமூகப் பெருங்கோபம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பேரன்புதான் மிஸ்ஸிங். நாயகன் வில்லன்களை மட்டும் பழிவாங்குவதில்லை, யாரென்று முன் பின் அறியாத மற்றவர்களுக்கும் அதையே செய்கிறார் எனப் படத்தை முடித்துள்ளனர். வில்லன்களையே “அப்படிப்” பழிவாங்கினாலும், கூடவே அதனால் சம்பந்தமே இல்லாத இரு குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. பழிவாங்கப் போதுமான நியாயங்கள் நாயகனுக்கு இருந்தாலும், சமூகப் பரிசோதனை எனும் பெயரில் அவர் செய்யும் எல்லை தாண்டிய அறமற்றச் செயலை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. சமூகக் கோபங்கள் மட்டும் பத்தாது, அன்பு எங்கேனும் ஒரு துளியாவது துளிர்த்தால்தான் ஒரு படைப்பு அதன் முழுமைத்துவத்தை அடையும்.

