

தனது மகன் பட்டா மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் செல்லய்யா. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் செல்லய்யா. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பட்டா, உண்டியல் பணத்தைப் பட்டுவாடா செய்யும் தொழிலில் ஈடுபட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். தனது மகனை அப்பிரச்சனையில் இருந்து செல்லய்யா மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
செல்லய்யாவாக பிரபு நடித்துள்ளார். ஒரு மகிழ்ச்சியான தந்தையாக மிகப் பூரிப்பாகப் படம் முழுவதும் வருகிறார். முக்கால்வாசி படம் ஓடிய பிறகு, ஒரு காட்சியில் இமான் அண்ணாச்சியிடம், “நான் வேலைக்குப் போலாம் என இருக்கேன்” என்கிறார் பிரபு. மகனை வேலைக்குப் போக விடாமல் தடுப்பதால், இவர் உழைத்து மகனைச் செல்லம் கெஞ்சுகிறார் என்ற யூகத்திற்கு வேட்டு வைத்து விடுகிறார் அறிமுக இயக்குநர் மகா கந்தன். ‘சின்ன தம்பி காலத்து பிரபுவைக் காணலாம்’ என இயக்குநர் சொல்லியிருந்தது கவனம் வந்ததும் சற்றே சமாதானம் ஆனது மனம். ‘ஒரு உம்மா தர்றேன். அம்மா ஆவுறியா?’ எனும் ரகளையான பாடலுக்குச் சிரித்தால் கன்னத்தில் குழி விழும் பிரபுவையும் ஆட வைத்துள்ளனர்.
பட்டமுத்தாக வெற்றி நடித்துள்ளார். ஜாலியாக ஊர் சுற்றுவது, கதாநாயகியைக் காதலிப்பது என படம் நெடுகேவும் பருத்தி வீரன் கார்த்தி போல் வலம் வருகிறார். தந்தையின் நம்பிக்கையைக் காப்பாத்த, நண்பனின் சம்பளப் பணத்தை உபயோகிக்கும் பாசக்கார மகன். நண்பனுக்குக் குடும்பம் இருக்கும், தேவையிருக்கும் என்றெல்லாம் யோசிக்காத நாயகன். அப்பா – மகன் பாசத்தை மையப்படுத்திய படமென்பதால் நாயகன் POV-ஐ மூக்கணாங்கயிறு கட்டி தந்தையை நோக்கி மட்டும் திருப்பிவிட்டுள்ளார் இயக்குநர். நல்லவேளையாகக் கதை 1991 இல் நடப்பதாகக் காட்டுகின்றனர். பழைய ஜோக் தங்கதுரையின் நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை.
பூச்செண்டாகக் கிருஷ்ண பிரியா நடித்துள்ளார். படம் இவரிடம் இருந்து தொடங்கி, இவரிடமே முடிகிறது. தொடங்கிய விதத்திலேயே கதையின் முடிவை யூகித்துவிட முடிகிறது. வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையே ஏற்படும் புரிதலின்மையை இன்னும் சுவாரசியப்படுத்தி இருக்கலாம். ‘நேரமாச்சு சண்டை போட்டுக்கோங்கப்பா’ என தர்மத்திற்குக் கட்டுப்பட்டது போல், திடீரென வில்லன் மேல் ஆவேசம் கொள்கிறார் வெற்றி. ‘ரைட்ரா! உன்ன கொன்னுட வேண்டியதுதான்’ என கோமல் குமாரும் படத்தை முடித்து வைக்கத் தயாராகிவிடுகிறார்.
தந்தை – மகன் பாசத்தைக் கொண்டு பருத்தி வீரனைப் போல் ஒரு படம் எடுத்து விடுவேண்டுமென்ற இயக்குநரின் ஆசையைப் படத்தில் உணர முடிகிறது. அதற்குத் துணை புரியும் விதமாகச் சாயல்குடி நெய்தல் நிலம் அமைந்துள்ளது. அதை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஆலிவர் டெனி. AIS நவ்ஃபல் ராஜாவின் கைவண்ணத்தில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
‘உங்களுக்கு உங்க மகன் தான் முக்கியம் இல்ல?’ என பிரபுவின் மகள் கேட்கும் காட்சியில் மட்டும் யதார்த்தத்தின் வீச்சு தெறிக்கிறது. ராஜபுத்திரனுக்கோ அப்படியொரு உணர்ச்சிமயமான தருணம் தந்தையிடம் நிகழவே இல்லை என்பதுதான் திரைக்கதையின் பலவீனம். பொறுப்பற்ற தந்தைக்கும், அவரது மகனுக்குமிடையேயான காட்சிகள் அழுத்தமாக இல்லாமல் விரல் நடுவே கசியும் நீர் போல் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சலனமற்று கடந்துவிடுகிறது.


