பழி வாங்கும் வெறியில், இறுதி ரத்தத்தைத் தாராளமாகச் சிந்த விட்டுள்ளார் ரேம்போ. அதீத வன்முறைக் காட்சிகள் உள்ளதால், A சான்றிததழ் அளித்துள்ளனர்.
ரேம்போவின் தோழி மரியாவின் பேத்தியான கேப்ரியல், பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மெக்சிகோ கடத்தல் குழுவினரிடம் சிக்கிக் கொள்கிறார். கேப்ரியலைக் காப்பாற்ற மெக்சிகோ செல்கிறார் ரேம்போ. அந்தக் குழுவிடம் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு வருகையில், ஓவர்-டோஸாக போதை மருந்து செலுத்தப்பட்டதால் வழியிலேயே கேப்ரியல் இறந்துவிடுகிறார். பழி வாங்கும் வெறியில் சிவக்கும் ரேம்போ, மெக்சிகோ கடத்தல் குழுவை, அரிசோனாவில் இருக்கும் தன் வீட்டிற்கு வர வைத்து, கொலைவெறித் தாக்குதல் தொடுத்து, அக்குழுவை நிர்மூலம் செய்வதுதான் படத்தின் கதை.
சோர்வான, வயோதிக சில்வஸ்டர் ஸ்டலோன். குதிரை சவாரி செய்து காலத்தைக் கழிக்கும் அந்த முதியவரின் ஒரே நம்பிக்கையான கேப்ரியலை இழந்ததும், சீற்றமடையும் ரேம்போ செமயாக ஸ்கெட்ச் போடுகிறார். பொறியில் வந்து லட்டாய்ச் சிக்கிக் கொள்ளும் மெக்சிகோ கடத்தல்காரர்களை வெறி தீரச் சீவித் தள்ளுகிறார். எதிர்பார்க்கவ் முடியாத கொடுமையான மரனத்தை அவர்களுக்குத் தருகிறார். பிரதான வில்லன் சட்டென இறந்து விடக் கூடாதென அவரது மரணத்தைக் கொடுமையான வகையில் டிசைன் செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்த்தால், மிகக் கொடூரமான பழி வாங்கும் கதையாகப் படம் பயணிக்கிறது. 103 நிமிடங்கள் தான் படத்தின் கால அளவு. நேர்க்க்கோட்டில் பயணிக்கும் மிகச் சிம்பிளான கதை.
படம் முடிந்ததும், பழைய ரேம்போ படங்களில் இருந்து போடப்படும் கிளிப்பிங்க்ஸ் நாஸ்டாலஜியாவைக் கிளறி விடுகிறது. காலம் எத்தனை கொடூரமானது? அபிமான நாயகர்களை இப்படி மாற்றிவிடுகிறது.
ரேம்போ சீரிஸ்க்கு ஓர் ஆத்மார்த்தமான ட்ரிப்யூட் என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். லோகன் படத்தில் வுல்வெரினுக்கு அட்டகாசமான செண்ட்-ஆஃப் கொடுத்திருப்பார்கள். அப்படியொரு மரியாதைக்கு உரியது ரேம்போ கதாபாத்திரம். போரை மட்டுமே பார்த்த ஒரு மனிதனின் தத்துவ விசாரமாகமாவது படத்தைக் கொண்டு போயிருக்கலாம். ஓர் அவசர கதையை உருவாக்கி, ரேம்போவின் வீரத்திற்கும், பழம்பெருமைக்கும் கட்டியம் கூறுவதாகப் படத்தை முடித்துவிட்டனர்.