Shadow

பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்

bigg-boss-3-day-90

கமல் வருகை. கீழடி ஆய்வு, தமிழ், கலாச்சாரம் எனக் கொஞ்ச நேரம் அடித்து ஆடினார்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்

சைக்கிள் டாஸ்க் தொடந்து கொண்டிருந்தது. 5 மணி நேரத்திற்குப் பின், லாஸின் சைக்கிளின் சக்கரத்தில் துணி ஒன்று மாட்டிக் கொள்ள, சைக்கிள் ஓட்ட முடியாமல் போனது. கீழே இறங்கியவர், அப்படியே மடங்கி அமர்ந்தார்.

பொது இடத்தில், ஒரு பெண்ணிற்கு உதவி தேவைப்படும் போது, நெருங்கிய உறவாக இருந்தாலும், சற்று விலகி நின்று, இன்னொரு பெண்ணை உதவச் செய்வது தான் சரியான முறை. மனைவியாகவே இருந்தாலும், அதைச் செய்வது தான் சரி. ஆனால் பிக் பாஸ் வீட்டில் எந்த பெண்ணுமே இல்லாத மாதிரி, எல்லா வேலையும் கவினே இழுத்துப் போட்டுச் செய்கிறார். இத்தனை கேமரா இருக்கின்றன, இதைப் பார்க்கிற குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன் அன்பை இப்படி வெளிக்காட்டியே ஆகவேண்டுமென அவசியமே இல்லை. இங்கே ஷெரின் வந்து உதவவில்லை எனச் சொல்லவே முடியாது. கீழே இறங்கும் போது ஷெரின் அங்கே தான் இருக்கிறார். அதுவுமில்லாமல், ஓடிப்போய் உதவுவதில் தான், இங்கே அவருக்கு நல்ல பேரே!

இது கேட்கிறதுக்குப் பத்தாம்பசலித்தனமாக இருக்கலாம். ஆனால் பொது இடத்தில், ஒரு பெண்ணுக்கு இது தர்மசங்கடத்தையே கொடுக்கும். ஒரு ஆக்வேர்டு மொமென்ட். இது என் தனிப்பட்ட புரிதல்.

அடுத்ததாக முகின் வெளியேற, சாண்டியும் தர்ஷனும் விடாமல் போராடிக் கொண்டு இருந்தார்கள். 8 மணி நேரத்தைக் கடந்த பிறகு, சாண்டியோட கால் பெடலில் இருந்து வழுக்கி விட, அவர் நிறுத்த வேண்டியதாகப் போய்விட்டது. ஆக, இந்தப் போட்டியில் தர்ஷன் யாருக்காக சைக்கிள் ஓட்டினாரோ அவர் தான் வின்னர். அவ்வளவு நேரம் சைக்கிளை ஓட்டிவிட்டு, “போராடினால் நாம் வெல்லலாம்” பாட்டுக்கு வடனமும் ஆடினார்கள் சாண்டியும் தர்ஷனும். அட்டகாசம்.

‘டிக்கெட் டூ ஃபைனல்’ டாஸ்க்கில் வெற்றி பெற்ற முகினுக்கு, டிக்கெட் கொடுக்கப் போனார் கமல். வீட்டுக்குள் போவாரென நினைக்க, ஒரு தனி இடத்தில் முகினை மட்டும் வரச்சொல்லி டிக்கெட்டை கொடுத்துவிட்டு வந்தார்.

அகம் டீவி வழியே அகத்திற்குள்

இந்த வார டாஸ்க்கைச் சிறப்பாக விளையாடியதற்கு ஹவுஸ்மேட்ஸ் எல்லோருக்கும் பாராட்டுக் கிடைத்தது.

சாண்டி கண்கலங்கினது தான் கமலின் முதல் டாஸ்க். ஆனால் அதற்கு மழுப்பிக் கொண்டே இருந்த சாண்டி, கடைசி வரைக்கும் நேரடியாகப் பதிலே சொல்லவிலை. கமலும் விடாமல் துருவிக் கொண்டே இருந்தார். இருந்தும் ஒன்றும் வேலைக்காகவில்லை. கடைசியில் கவின் உள்ளே புகுந்து, ஒரு பதிலைச் சொல்லி சமாளித்தார். கமல் சளைக்காமல், இவர்களுக்கு ஒரு குறும்படம் போட்டார். நட்பென்கிற பெயரில் ஏன் நட்பிற்கும் விளையாட்டிற்கும் துரோகம் இழைப்பதாக கமல், லாஸ்லியாவைச் செமயாகக் கலாய்த்துவிட்டார்.

சாண்டியும் கவினும் வெளியில் இருந்தே நண்பர்கள். உள்ளே வரும்போதே திட்டம் போட்டுத்தான் வந்துள்ளனர். ‘அது என்ன?’ என்று நேரடியாகக் கமல் கேட்டும், அதற்கு சரியாகப் பதில் சொல்லவில்லை. ‘நாங்க 5 பேர் ஃபைனல்ஸுக்கு போகனும், அதான் எங்க ப்ளான்’ எனச் சொன்னார் சாண்டி. இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னாடி, தர்ஷன், முகின், லாஸை இவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அப்படியிருக்கும் போது, இந்தப் பதிலே தப்பு. இந்தக் கேள்விக்கு இரண்டு பேரும் குழப்பமான பதில் சொல்லித் தப்பித்துவிட்டனர்.

அடுத்ததாக ஷெரின் கூடையை எட்டி உதைத்த விவகாரம். ‘கேம் ஒரு பிரைமல் மொமன்ட்ல இருக்கும் போது, கவின் அப்படி நடந்துகிட்டது, மொத்த பேரோட ஸ்பிரிட்டையும் குறைக்கிற மாதிரி இருந்தது. அதுக்குத்தான் கோவப்பட்டேன்’ என ஷெரின் சொன்னதில், அந்த ப்ரைமல் மொமன்ட் வார்த்தைப் பிரயோகத்தை ரொம்பவும் பாராட்டினார் கமல். ‘அப்ப கவினுக்கு கேம் ஸ்பிரிட் இல்லேன்னு சொல்றீங்களா?’ எனக் கேக்க, ‘இல்ல சார் அவர் அதை மறைக்கிறாரு’ என ஷெரின் சொன்னார். இந்தக் கேள்வியை நேரடியாக கவினிடம் கேட்டார் கமல். ‘உங்க கேம் ஸ்பிரிட்டை மறைச்சு நடிக்கிறீங்களா?’ எனக் கேட்க, அதற்கும் சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்லி, குழப்பி அடித்தார் கவின்.

ஒரு கேள்வி கேட்டால், அதற்குப் பதில் சொல்கிற மாதிரியே ஆரம்பித்து, எதைஎதையோ பேசி, சொல்லி முடிக்கும் போது நமக்குக் கேள்வியே மறந்து போயிருக்கும். கவின் அதில் எக்ஸ்பெர்ட்டாக இருக்கார்.

மகாதேவன் CM