

தமிழ் சினிமாவில், 30 ஆண்டுகளாகத் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கப் போராடி வருபவர் அருண் விஜய். அவ்வப்போது ஒரு பெரிய பிரேக் கிடைத்தாலும் அதைத் தக்க வைக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து சில படங்கள் அவருக்கு அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட அருண் விஜய்க்குத் தடம் படத்துக்குப் பிறகு ஒரு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.
‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற புத்தரின் போதனையை மையக்கருத்தாக வைத்து உருவாகியிருக்கும் படம். சிறு வயதில் இருந்தே தங்களுக்கெனக் குடும்பம் என எதுவும் இல்லாமல் ஆதரவற்றவர்களாக வளர்கிறார்கள் அருண் விஜயும், சித்தி இத்னானியும். இதில் சித்தி இத்னானி, கிடைத்த இந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விடவேண்டும்ம், பணத்துக்காக எதுவும் செய்யலாம் என நினைப்பவர். ஐந்து ஆண்டுகள் வெளியூரில் இருந்த அருண் விஜய் சித்தியைத் திருமணம் செய்ய அவரைத் தேடிப் பாண்டிச்சேரிக்கு வருகிறார். வந்த இடத்தில் அவரின் காதலை மறுத்து ஃபிரான்ஸ் போக இருப்பதாகச் சொல்லி விடுகிறார் சித்தி. அந்தச் சூழலில் அவரைப் போலவே இருக்கும் கோடீஸ்வர அருண் விஜயைப் பார்க்கிறார். அவரைக் கொன்று விட்டு அவர் சொத்தை நாம் எடுத்துக் கொண்டு வாழலால் எனச் சொல்கிறார் சித்தி. சித்திக்காகக் கொலை செய்யும் அருண் விஜய், அதற்குப் பின் எந்தகைய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார், அந்தக் கோடீஸ்வர அருண் விஜய் பின்னணி என்ன, சித்தி ஆசைப்பட்ட பணக்கார வாழ்க்கை என்னானது, அருண் விஜய் வாழ்க்கை என்னானது என்பதை சொல்கிறது மீதிக்கதை.
வழக்கம் போல கதாபாத்திரத்துக்காக சின்சியராக உழைத்திருக்கிறார் அருண் விஜய். தோற்றத்தை மாற்றுவதில் இருந்து சண்டைக் காட்சிகளில் அர்ப்பணிப்புடன் நடித்தது வரை அவர் அவரது உழைப்பு மிகக் கச்சிதம். தடம் படத்தில் இருந்த அதே மீட்டரில் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே தோற்றத்தில் இருந்தாலும் மேனரிஸத்தில் வித்தியாசம் காட்டுகிறார். சித்தி இத்னானி வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத, பணக்கார வாழ்க்கைக்கு ஏங்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் முடிந்தவரை நன்றாக நடித்திருக்கிறார். இவருக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு கூட தன்யாவுக்குக் கிடைக்கவில்லை. ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலையைக் காட்டி விட்டுப் போகிறார். பாலாஜி முருகதாஸ் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து போகிறார். ஜான் விஜய் வழக்கமான ஒரு போலீஸாக வந்து போகிறார். பழி வாங்கக் காத்திருக்கும் ஒரு தந்தையாக ஹரிஷ் பெரடி, நாயகியின் பாட்டியாக ஒரு காட்சியில் கலைராணி என மற்ற நடிகர்களும் வந்து போகிறார்கள்.
ஹாலிவுட் படங்கள் போல விஷூவலைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் கண்ணம்மா பாடல், பின்னணியில் வரும் ஆங்கில சாயல் பாடல்கள் என நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையும் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது. படத்தொகுப்பாளர் ஆண்டனி, படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் கட் செய்தது பெரிய பிளஸ்.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஒரு பரபர ஆக்ஷன் த்ரில்லரைக் கொடுக்க எடுத்திருக்கும் முயற்சியும், பணத்தின் மீதான ஆசை, பழி வாங்கும் நோக்கம் போன்றவற்றைத் திரைக்கதையில் சொன்ன விதமும் ஓகே. சித்தியின் கதாபாத்திரத்தை முழுக்க நெகட்டிவாகக் காட்டியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டலாம். முதல் காட்சியில் இருந்தே விறுவிறுப்பாகச் செல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் ரசிக்கத்தக்க வகையில், சேஸிங்கும், ஆக்ஷன் காட்சிகள் அமைந்திருப்பது படத்தின் பெரிய பலம்.


