Shadow

சாஹோ விமர்சனம்

Saaho-movie-review

சாஹோ என்றால் ‘வெற்றி உனதே!’ எனப் பொருள்படும் என பிரபாஸ் பேட்டியில் கூறியுள்ளார். எந்த மொழியில் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சித்தாந்த் நந்தன் சாஹோ என்பதே படத்தின் தலைப்பிற்கான காரணம் என முடிவுக்கு வந்துவிடலாம்.

இந்திய அரசாங்கத்தின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டுக்கூடிய ராய் எனும் மிகப் பெரும் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவரை யார் கொன்றார்கள், ராய் வகித்த பதவிக்கு எவரெல்லாம் ஆசைப்படுகிறார்கள், ராயிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

கே.ஜி.எஃப், லூசிஃபர் போன்ற படங்கள் தமிழ் மார்க்கெட் மீது குறி வைத்து மேக்கிங்கில் மெனக்கெட, ‘பாகுபலி பிரபாஸ் நடித்த 350 கோடி ரூபாய் பட்ஜெட்டுடைய படம்’ என்றால் மட்டும் போதாதா என்ற மெத்தனத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சுஜீத்.

படத்தின் தொடக்கம் ஓர் எதிர்பார்ப்பைத் தூண்டுமளவு மிரட்டலாய் இருக்கே என ஓரெண்ணம் லேசாக எட்டிப் பார்க்க ஆயுத்தமாவதற்கு முன்பாகவே, படம் மிகவும் சோதிக்கத் தொடங்குகிறது. படம் விலகி மிகவும் அந்நியமாகிறது. மிக முக்கியமான காரணம், வசனத்தோடு பொருந்தாத உதட்டசைவும்; பிரபாஸுக்கும், ஷ்ரத்தா கபூருக்குமான அந்த லவ் போர்ஷனுமே. கொஞ்சம் கூட ஒட்டவில்லை.

ராஜமெளலி திரையில் கொண்டு வந்த பிரபாஸை, இயக்குநர் சுஜீத்தால் கொண்டு வர முடியவில்லை. ஓர் அலட்சியமான உடற்மொழியையும், பிரபாஸ் முகத்தில் தெரியும் சோர்வையும் ரசிக்க முடியவில்லை. பிரபாஸின் முதற்பாதி அலட்சிய உடற்மொழிக்கு, அவரது கதாபாத்திர வார்ப்பும் ஒரு காரணம். ஒரு சீரியஸ் படம் என்ற பிரக்ஞ்சை இல்லாமல் இயக்குநரும், பழிவாங்க தான் ரிஸ்க் எடுக்கிறோம் என்ற புரிதலில்லாத இயக்குநர் உருவாக்கிய கதாபாத்திரமும் ரொம்பப் படுத்துகிறது. பாலத்தைத் தாண்டிவிட்டால் கிரிமினலைப் பிடிக்கமுடியாது என ஒரு விதியை உருவாக்குகிறார் இயக்குநர். ‘அந்தக் கோட்டைத் தாண்டி நாங்க வரமாட்டோம்’ என சத்தியவான்களாய் உள்ளனர் மும்பைக் காவல்துறையினரும், வாஜி காவல்துறையினரும்.

நாயகன் தொடக்கம் முதல் மைண்ட்-கேம் விளையாடுகிறார். அதைத் தெரிந்து கொள்ள, கடைசி 15 நிமிடம் வரை காத்திருக்க வைக்கிறார் இயக்குநர். அதுவரை படம் கிளாடியேட்டர் ஃபீல் தரவேண்டுமென முடிவெடுத்துவிடுகிறார். ‘பெளன்சர்கள் சூழ் உலகு’ என்ற தலைப்பு கூட இப்படத்திற்குப் பொருந்தும். சுமார் ஆறு அடியில் இருந்து ஆறே முக்கால் அடி வரை, பல நாடுகளைச் சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்ட பெளன்சர்கள் நடித்துள்ளனர். சாஹோவின் ஆக்‌ஷன் ஷோ-டைமை விட மைண்ட்-கேம் ஷோ தேவலையாக இருந்தது.

அருண் விஜய்க்கு ஸ்டைலாக ஹெலிகாப்டரில் இருந்து இறந்கி, நடப்பதைத் தவிர பெரிதாக ஸ்கோப் ஒன்றுமில்லை. கோதண்டமாக வரும் வெண்ணெலா கிஷோரையும் நகைச்சுவைக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. படத்தின் பிரம்மாண்டத்தையும், ஆக்‌ஷனையும் நம்பி, கதாபாத்திரங்களைப் பார்வையாளர்களுக்கு அந்நியமாக்கிவிடுவதால் படம் ஒட்டாமல் போகிறது. ஒரே ஆறுதல், படத்தின் க்ளைமேக்ஸ்.