Shadow

பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

bigg-boss-3-day-69

எப்பவும் போல் பாட்டும் நடனமும் முடிந்த உடனே கவின் – லாஸ் அத்தியாயம் தான்.

தன்னோட ரிலேஷன்ஷிப் பற்றிச் சொன்னதுக்கு அப்புறம், ‘லாஸ் என்ன நினைக்கறாங்க?’ என கவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கும் தெரில. அதனால் லாஸோட சின்ன சின்னச் சின்ன செய்கைகளுக்கும் அவராக ஓர் அர்த்தம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். கவினின் பழைய ரிலேஷன்ஷிப்பைப் பற்றி லாஸ் எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. லாஸ் அடிக்கடி சொல்கின்ற மாதிரி, கொஞ்சம் நேரமெடுத்து மண்டைக்குள் போட்டு ப்ராசஸ் பண்ணி ஏதாவது சொல்லுவாங்க என நினைக்கின்றேன். லாஸ் கொஞ்சம் டேஞ்சரான பெண் தான். நார்மலாகவே பெண்கள் உடனக்குடனே ரியாக்ஷன் காட்டிவிடுவார்கள். ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி, எதுவுமே தன்னைப் பாதிக்காத மாதிரி நடந்துக் கொள்கிற லாஸ் உண்மையிலேயே கல்லுளிமங்கி தான்.

கவின் – லாஸ் பேசிக் கொண்டிருக்கிறதை சாண்டி, சேரன், தர்ஷன் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

‘என்னய்யா நடக்குது அவங்களுக்குள்ள?’ என தர்ஷனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் சேரன். ‘அவங்க என்ன செஞ்சாலும் எங்கிட்டையே கேக்கறிங்களே! நானும் உங்களை மாதிரி தான்ணே!’ எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் தர்ஷன். சேரனும் அசடு வழிந்தார்.

ஷெரின் சாண்டிக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார். அங்கேயும் போய் ரவுசு கொடுத்துக் கொண்டிருந்தார் தர்ஷன். இதில் சாண்டி தான் பரிதாபம். ‘டேய் நீங்க விளையாடறதுக்கு என் தலை தான் கிடைச்சுதாடா?’ னு டரியலாக இருந்தார்.

டைனிங் டேபிளில் உட்கார்ந்து பாட்டு பாடிக் கொண்டு இருந்தார் தர்ஷன். ஓவர் “ஃபீலிங்” போலருக்கு. சில நாளாகக் கண்டுக்காமல் சுற்றிக் கொண்டிருந்ததால் ஷெரிஞ்ன் ஸ்கெட்சே தர்ஷனுக்குத்தான் போல!

லக்சரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய அறிவிப்பு சொல்ல, எல்லோரும் காத்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல வனிதா தாமதமாக வந்தவர். சமைத்து விட்டு வருவதால் தாமதமாகிறது என நினைக்கிறேன். அதனால் தான் ஹவுஸ்மேட்ஸும் கம்மென்று இருந்தார்கள்.

அனெளன்ஸ்மென்ட் படிக்கக் காத்துக் கொண்டிருந்த லாஸ், மைக்கைப் பற்றிப் பேசி கவின், தர்ஷன், சாண்டியிடம் பல்ப் வாங்கிக் கொண்டிருந்தார். ‘இதுவரைக்கும் என்னைக் கூப்பிட்டு பிக் பாஸ் வார்னிங் கொடுத்ததே இல்லை’ எனச் சொலிட்டுக் கொண்டிருக்கும் போதே, பிக் பாஸ் கூப்பிட்டு வார்னிங் கொடுத்தார். அப்பவே தெரிந்து விட்டது, இன்று பிக் பாஸ் டீம் ஜாலியான மூடில் இருக்காங்க என. அதற்கப்புறம் லாஸ்க்குத் தொடர்ந்து வார்னிங் வந்து கொண்டே இருந்தது. நேற்று பிக் பாஸ் வைத்துச் செய்துவிட்டார்.

அடுத்த தலைவர் போட்டி நடந்தது. போட்டியில் இருக்கிறவர்கள், மற்ற ஹவுஸ்மேட்சுக்கு ரேட்டிங் கொடுக்கவேண்டும். அதில்லாமல் மற்ற போட்டியாளர்கள் கொடுக்கிற ரேட்டிங்கை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். கேட்கும் பொழுது யார் சரியாகச் சொல்கிறார்களோ அவங்க தான் வின்னர்.

முகின் ஒரு பக்கம் பாட்டாகப் பாடி மனப்பாடம் பண்ண, சேரன் இன்னொரு பக்கம் சீரியசாகப் பரீட்சைக்குக் படிக்கின்ற மாதிரி உரு போட்டுக் கொண்டிருக்க, வனிதா ஜாலியாக இருந்தார்.

கன்ஃபெஷன் அறைக்கு அழைத்துக் கேட்கும் போது, முகின், சேரன் இரண்டு பேருமே தப்பாகச் சொல்ல, வனிதா அநாயாசமாகச் சொல்லி ஜெயித்தார். ஆக, இந்த வார கேப்டன் வனிதா. யாரும் நாமினேட் செய்ய முடியாது. இன்னும் இரண்டு வாரம் வனிதா இருப்பது உறுதி.

அடுத்து மாசா வழங்கிய விளம்பர டாஸ்க். மாஸா பாட்டிலக் கயிறில் கட்டி கையை உபயோகிக்காமல் குடிக்கனும். இரண்டு அணியாகப் பிரிந்து விளையாடினதில் சாண்டி அணி வென்றனர். கடைசி வரைக்கும் தலைகீழாக நின்றும் வனிதாவால் பாட்டிலைப் பிடிக்க முடிய்ச்வில்லை.

அதற்கப்புறம் சிக்கன் வேண்டுமென ஸ்டோர் ரூம் முன்னாடி சாண்டி குரல் கொடுக்க ஆரம்பிக்க, ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்து அதகளம் பண்ணிக் கொண்டிருந்தனர். சாண்டியோட ஆக்டிங் செமயாக இருந்தது. ஸ்டோர் ரூமையும், இவங்களையும் மாறி மாறிக் காட்டிக் கொண்டு இருந்தனர். ஸ்டோர் ரூம் கதவில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டு இருந்தவர்கள், சிக்கன் வந்துவிட்டதெனத் தெரிந்த உடனே பாய்வதற்குத் தயாரானார்கள். ‘நீங்க மட்டும் தான் விளையாடுவீங்களா? நாங்களும் விளையாடுவோம்’ என பிக் பாஸ் அணியும் முடிவு பண்ணிவிட்டது போல. கதவைத் திறக்காமல், ‘சரக்கு வச்சுருக்கேன்; இறக்கி வச்சுருக்கேன்’ என பாட்டைப் போட்டு ரணகளம் பண்ணினார்கள். அந்த ஐடியா கொடுத்தவருக்கு ஒரு ஷொட்டு.

அந்த 10 நிமிஷமும் நன்றாக இருந்தது.

மகாதேவன் CM