
நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, நாக சைதன்யா, சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல்’ திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, ”தண்டேல் என்றால் என்ன என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கும். இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் மொழி என்ற எல்லையைக் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகும் படத்தின் டைட்டில்கள் அனைவரையும் கவர்வது போல் இருக்கும். ‘பாகுபலி’க்கு பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம். பாகுபலி என்றால் என்ன என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அதேபோல் தண்டேல் என்பதற்கும் யாரிடமும் கேள்வி எழாமல் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் தண்டேல் என்றால் லீடர் என இப்படத்தில் ட்ரெய்லர் மூலம் தெரிந்து கொண்டிருப்போம். இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பான் இந்திய அளவிலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல் ஒரு கதையை உருவாக்கி, அது பான் இந்திய ரசிகர்களுக்குச் சென்றடையும் எனும் நம்பிக்கையில் இந்தத் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பை எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்காகத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளைக் கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தைத் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை சாய் பல்லவி தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன்” என்றார்.