Shadow

ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

Spider Man: Homecoming

ஸ்பைடர்- மேன் படங்களின் ரசிகர் நீங்களென்றால், கண்டிப்பாக இது உங்களுக்கான படமில்லை. மார்வல் ஸ்டுடியோஸ், கதை சொல்லும் பாணியில் மிகுந்த வேறுபாடினைக் காட்டியுள்ளனர். ஸ்பைடர்-மேனுக்குப் புது அடையாளம் கொடுத்துள்ளார் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், இயக்குநருமான ஜோன் வாட்ஸ்.

‘ஹோம்கமிங்’ என்றால் பள்ளியை விட்டுச் சென்ற சீனியர்களை அமெரிக்க மாணவர்கள் வரவேற்கும் வருடாந்திர நிகழ்வு. ஸ்பைடர்-மேன் படித்து வரும் பள்ளி அதற்காகத் தயாராகி வருகிறது.

நம்மூரில், 14 வயது நிரம்பிய பதின்ம சிறுவனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. ஸ்பைடர்-மேனுக்கோ, சூப்பர் ஹீரோ ஆகவேண்டும்; அவெஞ்சர்ஸ் குழுவில் இடம் பிடிக்கவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. ஏதாவது நல்லது செய்து சூப்பர் ஹீரோ ஆகி விட வேண்டுமென வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அதற்காக, முகவரியைத் தேடித் தவிப்பவர்களுக்குக் கூட உதவுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு கட்டத்தில், ஏ.டி.எம். கொள்ளையைப் பார்த்ததும், ‘அப்பாடி உருப்படியா ஒன்னு சிக்கியிருக்கு’ என்று மிகவும் மகிழ்கிறார். பதின்ம வயதிற்கே உரிய அவசரம், குதூகலம், ஆர்வம் என புத்தும் புது ஸ்பைடர்-மேனைத் திரையில் கொண்டு வந்துள்ளனர்.

‘சக்தி கூடும் பொழுது பொறுப்புகளும் கூடுகிறது’ என ஸ்பைடர்-மேனுக்கு அட்வைஸ் செய்ய அவரது அங்கிள் இப்படத்தில் இல்லை. அயர்ன் மேன் தரும் அதி நவீன உடையை உபயோகித்து வல்ச்சர் மேனை எதிர்கொள்ளும் இடம் ரசிக்கும்படியாக உள்ளது. எனினும், கடைசி வரையிலுமே, திரையில் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனைக் காணவே முடிவதில்லை. 14 வயது சிறுவனைத்தான் காண நேர்கிறது. படத்தின் பலமும் பலஹீனமும் இதுதான். ஸ்பைடர்-மேனுக்குத் தன் சீனியரான லாரா ஹாரியர் மீது ஓர் ஈர்ப்பு. ஆனால், அவர் படத்தின் நாயகி அல்லள். சூப்பர் ஹீரோ படத்தில் நாயகிக்கு என்ன வேலை? ஆனால், ஸ்பைடரின் வகுப்புத் தோழியான ஸெண்டாயாவிற்கு அதிக ஸ்கோப் தந்துள்ளனர். இனி வரும் பாகங்களில் நாயகியாக உருமாறுவார் போல் இருக்கிறது. ஸ்பைடரின் நண்பன் நெட், படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆனால் பேசிக் கொண்டே உள்ளனர் ஸ்பைடரும், அவரது ஆசிய  நண்பரும்.

ராபர்ட் டெளனி ஜூனியர் சில காட்சிகளில் வந்தாலும், அழுத்தமாகத் தன் இருப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு காட்சியில், அவர் இந்தியாவில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதாகக் காட்சி வருகிறது. ஸ்பைடர்-மேனுக்கான இந்திய மார்க்கெட்டின் குறியீடாக அதைக் காணலாம்!

சூப்பர் ஹீரோவை மட்டுமல்ல வில்லன் பாத்திரத்தையும் மிக நேர்த்தியுடன் வடிவமைத்துள்ளனர். அதுவும் படம் முடிந்த பிறகு வரும், மிட் கிரெடிட் (mid credit) காட்சியைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு, சிறுவன் ஸ்பைடர் மேனை விட வில்லனான வல்ச்சர் மேனை மிகவும் பிடித்துப் போய்விடும். வில்லனும் மனிதர் தான், அவருக்கும், குடும்பமும் பாசமும் உண்டென்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள படம். வில்லனாக நடித்துள்ள மைக்கேல் கீட்டன் மிகக் கச்சிதமான தேர்வு.

ஸ்பைடர்-மேன் போன்ற சூப்பர் ஹீரோ கார்டூன்கள் மீதிருக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு, அவை குழந்தைகள் மனதில் விதைக்கும் வன்முறை. ஆனால், இந்த ஸ்பைடர்-மேன் குழந்தைகளுக்கான மென்மையான ஸ்பைடர்-மேன். கட்டடம் கட்டமாகத் தனது விரலிலிருந்து நீளும் நூல்வலையைக் கொண்டு தாவித் தாவிச் செல்பவர், மரங்கள் நிறைந்த வனாந்திரத்தில் தன் சக்தி பயன்படாதென ஓடத் தொடங்குகிறார். சூப்பர் ஹீரோவிற்கான சாத்தியங்களைக் குறைத்து, அவனுக்குள் இருக்கும் மனிதத்தை முன்னிலைப்படுத்தியது தான் படத்தின் ஆகச் சிறந்த சிறப்பம்சம்.