
முதல் சீசனின் தொடர்ச்சியாக, கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இத்தொடரில் இடம்பெறுகின்றனர். சக்கரவர்த்தியாக வரும் கதிரும், கொலை குற்றவாளி நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷும், நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவ்விருவர் சார்பாகவும், மக்கள் நல வழக்குகளை எடுத்து சமூக நீதிக்காகப் போராடும் வக்கீல் செல்லப்பா வாதாடுகிறார். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவரது பண்ணை வீட்டில் கொல்லப்படுகிறார் செல்லப்பா. அவரது வளர்ப்பு மகனான சக்கரை எனும் சக்கரவர்த்தி, அக்கொலையைப் புலனாய்வு செய்ய நியமிக்கப்படுகிறார். சிறைக்குள் இருந்தவாறே, சக்கரைக்கு உதவுகிறாள் நந்தினி.
முதல் சுழலில் எப்படி மயான கொள்ளை பின்னணியில் கதை நகர்ந்ததோ, இத்தொடரில், அஷ்ட காளி திருவிழா பின்னணியில் கதையின் ஓட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கொடியேற்றம் முதல் சூரசம்ஹாரம் வரை, திருவிழாவை (குலசை தசரா) ஒட்டித் தொடரின் முக்கியமான நிகழ்வுகளை சித்தரித்துள்ளனர். கதாபாத்திரங்களின் பெயரையும் அஷ்டகாளிகளின் பெயரை ஒட்டியே வைத்துள்ளனர். முத்துமாரி, மாகாளி, முப்பிடாதி, உலகம்மன், அரியநாச்சி, செண்பகவல்லி, சந்தனமாரி, காந்தாரி ஆகியோர் அஷ்டகாளிகள் ஆவார்கள். முத்துவாகக் கெளரி கிஷனும், வீராவாக ஷிரிஷாவும், முப்பியாக மோனிஷா பிளெஸி, உலகு ஆக கலைவாணி பாஸ்கர், நாச்சியாக சம்யுக்தா விஸ்வநாதனும், செண்பகமாக அபிராமி போஸ், சந்தனமாக நிகிலா சங்கர், காந்தாரியாக ரினி நடித்துள்ளனர். எட்டுப் பேரும் பிரமாதமாக நடித்துள்ளனர். அவர்களது சிறுவயதினராக நடித்த சிறுமிகளும் கலக்கியுள்ளனர். சிறுமிகளின் பயமும், மகிழ்ச்சியும், பதற்றமும் பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்கிறது.
காவல்துறை அதிகாரி மூர்த்தியாக சரவணன் நடித்துள்ளார். அவரது தோராணையும், வட்டார வழக்கில் அவரது வக்கணையான பேச்சும், அலட்சியமான திமிரைப் பிரதிபலிக்கும் உடற்மொழியும் தொடரை ரசிக்க வைக்க உதவுகின்றன. ஒரு கெட்டவர் தன்னை உபயோகிக்கப்பத்துகிறார் எனத் தெரிந்தும், ‘அதனாலென்ன?’ என சரவணன் அதற்குத் தரும் விளக்கம் அட்டகாசம். கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் முதல் சீசன் போலவே மிக இயல்பாக நடித்துள்ளனர்.
நாகம்மாவாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் தான் இந்தத் தொடரின் ஹைலைட்டே! மிகக் கச்சிதமான பாத்திரத்தை மிக அற்புதமாகச் செய்துள்ளார். நாகம்மாவையும், அஷ்டகாளி கதையையும் இணைத்த விதம் அற்புதம். சிவன், நாகம்மைக்கு எட்டு முட்டைகள் அளித்து அஷ்டகாளிகளின் பிறப்பிற்கு வழிவகுப்பார் என்பது புராணக்கதை. திரைக்கதை எழுதியுள்ள புஷ்கர் – காயத்ரிக்கு வாழ்த்துகள். அத்தியாயம் 3, 4, 5 ஆகியவற்றை சர்ஜுனும், மீதமுள்ள அத்தியாயங்களை பிரம்மாவும் இயக்கியுள்ளனர்.
அரக்கன் என்றாலும், சித்தப்பாவைக் கொன்று ஓர் உயிரைப் பறித்த குற்றவுணர்வில் உழல்கிறார் நந்தினி. நந்தினி என்றால் மகிழ்ச்சியைத் தருபவர் எனப் பொருள். தான் அனுபவிக்கும் வேதனையை, அந்த எட்டுப் பெண்களும் அனுபவிக்கக் கூடாதென அவர்களைத் தடுத்து, நாகம்மா போன்றே அவர்களை அணைத்துக் கொள்கிறார். அரைவட்ட வடிவில் அவர்களை அரவணைக்கும் நந்தினியை டாப் ஆங்கிளில் இருந்து காட்டி, அப்படியே அடுத்த காட்சியில் அரைவட்டம் ஒரு வட்ட வடிவமாக மாறி, கடல் நடுவில் ஒரு சிறு கப்பலைச் சுழல் போல் சுற்றி வளைக்கின்றன படகுகள். ஆபிரகாம் ஜோசப்பின் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் போட்டி போட்டுக் கொண்டு பல காட்சிகளில் மாயம் புரிந்துள்ளன.
நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியும் என்ற மாயையில் உழுலும் போக்கினை, முதல் சுழல் துகிலுரித்துக் காட்டியது. இத்தொடரின் முடிவும் அப்படியான ஒரு திருப்பத்தைக் கொண்டுள்ளது எனினும், முந்தைய சீசனைப் போல் அழுத்தமாக இல்லை.
முதல் சுழல் போல், திருப்பங்களால் பார்வையாளர்களை உள்ளிழுத்துக் கொள்ளவில்லை. ஆழ்வான (intense), நிதானமான, மெல்ல நகரும் சுழலாக உள்ளது. அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஆச்சரியப்படுத்தாவிட்டாலும், முடியும் பொழுது நிறைவை அளிக்கும் தொடராக அமைகிறது.