Shadow

ஸ்வீட் ஹார்ட் விமர்சனம் | Sweet Heart review

யாருடனாவது நெருங்கிப் பழகினால், அவர் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் இருப்பவர் வாசு. தன் பயத்தை அவர் உணரும் கணம் அவர் ஸ்வீட் ஹார்ட் ஆகிறார்.

மனுவும் வாசுவும் காதலர்கள். கல்யாணக்தைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் பேச்சை மாற்றும் வாசுவிடம் கோபத்தைக் காட்டும் விதமாகப் பிரிந்து விடலாம் எனச் சொல்கிறார் மனு. அதனால் கோபமுறும் வாசு மனுவை ஒதுக்குகிறார். ஆனால், மனு கர்ப்பம் எனத் தெரிய வர, வாசு அக்கருவைக் கலைக்க முயற்சி எடுக்கிறான். அக்கருக்கலைப்பு முயற்சியும், அம்முயற்சியின் முடிவும்தான் படத்தின் கதை.

படம், முன்னும் பின்னும் என நான்-லீனியராக அநியாயத்திற்குப் பயணிக்கிறது. அது, படத்தின் நீளத்தை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது. நாயகனின் நண்பன் செந்திலாக அருணாசலேஸ்வரன் நடித்துள்ளார். போன வாரம் கிங்ஸ்டன் படத்திலும் நாயகனின் மூன்று நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். இப்படத்தில் நாயகனின் ஒரே ஒரு நண்பனாக நடித்திருப்பதால் கூடுதல் திரைநேரமும் கவனமும் பெறுகிறார். படத்தின் கலகலப்பிற்கும் உதவியுள்ளார். கருவைக் கலைக்க, நாயகனின் மருத்துவர் அக்காவிடமே உதவி கேட்க அழைத்துச் செல்கிறார் அருணாசலேஸ்வரன். மருத்துவமனையில் நிகழும் அந்தக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

நாயகனும் நாயகியும் மாட்டிக் கொள்ளும் சூழல்தான் படத்தின் கலகலப்பிற்கு உண்மையான காரணமாகிறது. நாயகியின் அக்கா மகள் முதல் தாத்தா வரை, நாயகியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து அவருக்கு ப்ரைவசி இல்லாமல் செய்கின்றனர். நாயகி மனுவாகக் கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். தனது விருப்பம் என்னவென்று கேட்காத காதலனையும் தந்தையையும் கேள்வியெழுப்புகிறார்.

திருமணத்திற்கு முன்னதான உடலுறவைப் படம் எந்தவிதக் கேள்விகளுமின்றி ஏற்றுக் கொள்கின்றது. காலத்திற்குத் தக்கவாறு அவ்விஷயத்தை அணுகியுள்ளனர் என்றும் சொல்ல முடியாத அளவுக்கு, முந்தைய தலைமுறையிலும் அது சகஜமாகவே சமூகத்தில் நிலவி வந்தது என நிறுவியுள்ளனர். காதல் வேண்டும், காமம் வேண்டும், கல்யாணமும் குழந்தையும் மட்டும் வேண்டாம் எனும் பொறுப்பற்ற பாத்திரத்திற்கு ரியோ ராஜ் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

தயாரிப்பாளருமான யுவனின் இசை மனதை வருடினாலும், பாடல்கள் முன்னமே கேட்டது போல் ஓர் உணர்வைத் தருகின்றன. கடைசி 20 நிமிடங்கள், படத்தின் போக்கையே மாற்றுமளவு எமோஷ்னலாகக் கையாளப்பட்டுள்ளது. கருவைக் கலைக்கும் முயற்சியாகப் பயணித்து, இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் சுபமாகப் படத்தை முடித்துள்ளார்.