
அய்யாவு, ஜான் ஆகிய இருவரும் தங்களுக்குள்ளான புரிதலில், ஒரே ஏரியாவில் பிரச்சனையின்றி தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றனர். ஜானின் மச்சான் தண்ணீர் கேனில் சுண்டக்கஞ்சி விற்க, போலீஸ் ஜானின் வியாபாரத்தை முடக்குகிறது. பின், அந்தப் போலீஸே தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஜானின் பங்குதாரராக, பிரச்சனையின்றி நடந்த வந்த தண்ணீர் கேன் வியாபாரத்தில் போட்டியும் சண்டையும் நுழைகிறது.
அய்யாவுவிடம் வேலை செய்யும் தில்லையும் மருதுவும், ஜானின் மச்சான் டப்பாவின் கோபத்திற்கு ஆளாகின்றனர். தில்லையை சிட்டு எனும் பெண் காதலிக்க, மருதுவை அக்னி எனும் பெண் காதலித்துத் திருமணம் புரிகிறார். தில்லையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷும், மருதுவாக பிரியதர்ஷனும், சிட்டுவாக கேப்ரியலாவும், அக்னியாக ஹரிப்ரியாவும் நடித்துள்ளனர். அனைவரும் மிக இளமையாக உள்ளனர். ஒரு தசாப்தத்திற்கு முன் உருவாகியுள்ள படம்.
அய்யாவுவாக ராதாரவியும், ஜானாகச் சரண்ராஜும், காவல்துறை அதிகாரியாக ஜீவா ரவியும் நடித்துள்ளனர். மூவரும் குணசித்திர வேடங்களில் வருகின்றனரே தவிர்த்துக் கதையின் போக்கிற்குப் பெரிதும் உதவவில்லை. ஜானின் மனைவி ராணியாக நடித்துள்ள மகேஷ்வரியும், ராணியின் தம்பி டப்பாவாக வரும் ஷங்கர்நாக் விஜயனும், டப்பாவின் கையாள் ஹைட்டாக ஹைடு கார்த்தியும் படத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றனர். ஒரு கோர்வையாகப் பயணித்து கதைக்குள் பார்வையாளர்களை உள்ளிழுக்கத் திரைக்கதை தடுமாறுகிறது.
மனிதர்களுக்குள் நடக்கும் போருக்குத் தண்ணீரின் சாபம்தான் காரணம் என பஞ்சபூதங்கள் கதையை வாய்ஸ்-ஓவராகச் சொல்கிறார் சத்யராஜ். ஆனால் கதையோ வழக்கம் போல் வியாபாரத்தின் மூலமாகக் கிடைக்கும் பணத்திற்கான மோதல் என்பதாகவே பயணிக்கிறது. அதற்கு இதிகாச உருவகத்தைச் சம்பந்தமின்றித் தந்துள்ளனர். தண்ணீரை விற்கத் தொடங்கியதால்தான் வருணனின் சாபத்திற்கு உள்ளாகிவிட்டனர் மக்கள் எனச் சொல்ல முனைந்துள்ளனர். மக்களுக்கான அத்தியாவசிய பொருளை விற்கும் எந்தத் தொழிலிலும் ஏற்படும் போட்டிக்கும் பொறாமைக்கும், வருண அலங்காரம் கொடுத்து அழகு பார்த்துள்ளார் இயக்குநர் ஜெயவேல்முருகன்.