
நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, நாக சைதன்யா, சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல்’ திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ”ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் நடிகர் கருணாகரன் இப்படத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போதிருந்து இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்னிடமிருக்கிறது. இயக்குநர் சந்துவின் முந்தைய திரைப்படங்கள் நன்றாக இருக்கும். நாக சைதன்யா – சாய் பல்லவி போன்ற திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் கதை. இதற்குத் தனித்துவமான பின்னணி என்பதால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாகக் குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றிச் சொல்லும் போதும், அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல அவர் எந்தக் கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கும் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு, ”மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவை இப்போதுதான் சந்திக்கிறேன். அவருடைய ஸ்கிரிப்ட் செலக்சன் என்பது தனித்துவமானதாக இருக்கும். நாக சைதன்யாவை கண்வின்ஸ் செய்வது கடினம்.
இந்த ஜானர் புதிது. படத்தைப் பற்றி கருணாகரன் என்னிடம் சொல்லும் போது உண்மைச் சம்பவத்தை தழுவித் தயாரான படம் இது என்றார். படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போதே படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது கடினமானது. சவாலானது. ஆனால் அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறார்கள். இயக்குநருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் சாய் பல்லவியின் பெரிய ரசிகன். நான் மட்டுமல்ல ஏராளமான இயக்குநர்கள் உங்களுடைய ரசிகர்கள். நீங்கள் மீண்டும் திரையில் ஜோடியாக இணைந்திருப்பதை வரவேற்கிறேன். உங்கள் இருவரையும் திரையில் பார்க்கும்போது பாசிட்டிவ்வான எனர்ஜி இருக்கிறது.
நானும் டிஎஸ்பியும் சிறிய வயதில் இருந்து ஒன்றாக வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். தற்போது தான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பிரபலமாகி இருக்கிறது. ஆனால் 90 களிலேயே தேவி ஸ்ரீ பிரசாத் – எஸ்பிபி சரண் ஆகியோர் இணைந்து இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருந்தாலும் என்னைஒ பாட அனுமதிக்க மாட்டார்கள். அவரும் இந்தப் படத்திற்காக தன்னுடைய கடும் உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குநர் சந்து – இதற்கு முன் இயக்கிய ‘கார்த்திகேயா’ உள்ளிட்ட படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரும் நாக சைதன்யாவும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இயக்குநர் சந்து வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி வருகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
எங்களின் கருணாகரனை தெலுங்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாக சைதன்யா திறமையானவர். அர்ப்பணிப்புடன் உழைப்பவர். நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர். தமிழ் இயக்குநர்கள் அவரிடம் சென்று கதையையும் காட்சியையும் தமிழிலேயே விளக்கிச் சொல்லலாம். அவரும் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக நிறைய மெனக்கெடுவார். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை. ஆனால் அது தெலுங்குப் படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் தெலுங்கு – தமிழ் எனக் கலவையாக இருக்கக் கூடாது. மிகப்பெரிய திரையுலக ஆளுமை மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும் எளிமையாகப் பழகக் கூடியவர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுப் புதிய உயரத்தைத் தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.