Shadow

தி புத்தி – மூளையின் மூப்பு

Aging-Brain

பால்டிமோர் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏஜிங்-இல் ஆராய்ச்சி நிபுணராக உள்ள மருத்துவர் மாதவ் தம்பிசெட்டியும், சென்னையின் தி புத்தி க்ளினிக்கின் நிறுவனருமான மருத்துவர் எண்ணப்பாடம் S. கிருஷ்ணமூர்த்தி, மூளை மற்றும் மனதின் மூப்பு பற்றிய சுவாரசியமான மிக நீண்ட உரையாடலை முன்னெடுத்தனர். அவற்றிலிருந்து சில.

65 வயதிற்கு மேல், புறணி (Cortex), மூளையின் க்ரே மேட்டர், கார்டிசால் (Cortisol) ஆகியவை 5 எம்.எல். அளவுக்குத் தேய்கிறது. அதனால் அறிவாற்றல் (Cognitive ability), புலன் உணர்ச்சி (Sensory perception), சமநிலை உணர்ச்சி (Emotinal balance) ஆகியவைப் பாதிப்படைகின்றன. 2010 ஆம் ஆண்டு, இந்தியாவில், மூளைத்தேய்வால் (Dementia) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.7 மில்லியனாக இருந்தது.  2030 இல் அது இரட்டிப்பாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தி புத்தி க்ளினிக், தன் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ முறையால், முதியோர்களுக்குத் தேவையான மருத்துவ அனுசரணையை நல்கி வருகிறது. 

“என் மூளைக்கும், என் மனைவி மூளைக்கும் என்ன வித்தியாசம்? ஆண், பெண் மூளைகளில் ஏதேனும் மாறுதலோ வித்தியாசமோ உண்டா?” என மருத்துவர் S. கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவையாகக் கேட்க, “முதல் கேள்விக்குப் போய் நான் எந்தவிதச் சிக்கலிலும் மாட்ட விரும்பவில்லை. இரண்டாம் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்” என்றார் மாதவும் சாமர்த்தியமாக.

அவர் மேலும் கூறியதாவது, “1958 இல் இருந்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஆண் மூளைக்கு, பெண் மூளைக்கும் வித்தியாசம் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், விஷுவோஸ்பேஷியல் (Visuospatial) ஆற்றலில் மட்டுமே பெண்களை மிஞ்சுவதாகவும்; பெண்களோ ஞாபகத்திறன், மொழி வல்லமை, செய்துமுடிக்கும் திறன் (execution), செயற்படும் வேகம் (processing speed) ஆகியவற்றில் திறன் வாய்ந்தவர்களாக உள்ளனர். ஆணின் மூளை, பெண்களை விடத் துரிதமாக மூப்படைக்கிறது” என்றார்.

“எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு 80 வயதிலேயும் கூட நினைவுத்திறன் நன்றாக இருந்தது. மூளையின் மூப்பைத் தடுக்க ஜீன்ஸ் (Genes) எவ்விதத்திலாவது தாக்கம் செலுத்துமா?” என S.கிருஷ்ணமூர்த்தி கேட்டதற்கு, “ஆம். தாக்கம் செலுத்தும்” என மருத்துவர் மாதவ் ஆமோதித்து விட்டு, “நம் முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, பெற்றோர்களைத் தேர்ந்தெடுப்பது; மற்றொன்று, வயதாகாமல் பார்த்துக் கொள்வது” என்று பதிலளித்தார். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பயில்வதாலும், மூளை மூப்படைவதைத் தடுக்க உதவும் என்றார்.

நீரிழிவு நோய், ஹைப்பர் டென்ஷன் உள்ளவர்களுக்கு மூளை மூப்பு துரிதமாக நிகழும் என்றும், உடலின் வயோதிகமும், மூளையின் மூப்பம் ஒரு சேரத் தொடங்கும் என்றும் கூறினார். அனைத்தையும் விட முக்கியமான விஷயம் – தூக்கம். சரியாகத் தூங்காவிட்டால், மூளை சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்லும். சுமார் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்பதோடு, ஒரே நேரத்தில் படுத்து ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது மூளை நலனுக்கு மிக அவசியமான ஒரு செயலாகும் என்றார் மாதவ்.

‘ரிட்டயர் ஆனவர்களின் மூளை மூப்படையுமா? அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?’ எனப் பார்வையாளர் ஒருவர் கேட்டதற்கு, “ஓய்வு பெற்றதும், அவர்கள் வேலை செய்யக்கூடாது என அர்த்தமில்லை. ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பது நல்லது. அல்லது, தங்களுக்கு விருப்பமான ஹாபி ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தலாம். இதுநாள் வரை தள்ளி வைத்த ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் செலுத்தி முடிக்கலாம்” என்றார் மாதவ்.

 

ஓய்வு பெற்ற பின், வாட்ஸ்-அப் குழுக்களிலும், ஃபேஸ்புக்கிலும் நேரம் செலவிடுவது சரியா தவறா என்ற பார்வையாளரின் கேள்விக்கு, “மொபைலில் வாட்ஸ்-அப்பை எப்படிப் பயன்படுத்துவது, ஃப்ஸ்புக் மூலம் புதிய நண்பர்களுடன் உரையாடுவது எப்படி என அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். தங்களை என்கேஜிங்காக வைத்துக் கொள்ள அது உதவுகிறது. இதை ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன்” என்றார் மருத்துவர் S.கிருஷ்ணமூர்த்தி.

தள்ளிப் போடாமல், எவ்வளவுக்கு எவ்வளவு இளம் வயதிலிருந்தே, இளமையாக இருப்பதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறோமோ, அது அவ்வளவு நல்லது; கூடவே, அத்தகைய பழக்கங்கள் மிக அவசியம் என வலியுறுத்திச் சொன்னார் மருத்துவர் மாதவ் தம்பிசெட்டி. யோகா, பிராணயாமம், உடற்பயிற்சி, மந்திரம் செபித்தல் முதலிய பழக்கங்கள் மூளை மூப்பைத் தள்ளிப் போட உதவுகிறது என அறிவுறுத்தினார்.