Shadow

பிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார்? ஏன் சாரி?’ – சாக்‌ஷியின் அப்பா

bigg-boss-3-day-49

நம் கணக்குப்படி 49வது நாள்தான். ஆனால், ஹவுஸ்மேட்ஸின் அறிமுக படலத்தோடு சேர்ந்து 50வது அத்தியாயம் நிறைவடைந்தது. அதனால் கமல் 50 வது நாள் கொண்டாட்டம் என அறிவித்தார். நேற்று கமல் போட்டிருந்த உடை கண்ணைப் பறிக்கும் அளவுக்கு பளீரென இருந்தது.

நேராக வீட்டுக்குள் நுழைந்த உடனே வெற்றியடைய வாய்ப்புள்ளவர்கள் யாரென ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் தர்ஷன், சாண்டி பெயர்களைச் சொன்னது ஆச்சரியமில்லை. ஆனால் மூன்றாவதாக மது இடம் பிடித்தது தான் அதிசயமாக இருந்தது. கலாச்சாரக் காவலர் பட்டம், சில கான்டர்வர்சியான சண்டைகள் இதையெல்லாம் தாண்டித் தன்னை ஒரு வலிமையான போட்டியாளராக முன்னிறுத்தியிருக்கிறார் மது.

மதுவுக்கும் மற்ற பொண்ணுங்களுக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் இருக்கு. மது முடிந்து போன விஷயத்தைக் கிளறுவதே இல்லை. அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பகைமை பாராட்டுவதில்லை. அது சாண்டியோ, ஷெரினோ, மறந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார். இப்பொழுது சமையல் செய்வதும் அவருக்கு பெரிய ப்ளஸ் பாயின்ட். உடம்பு சரியில்லாத ஷெரினை அவங்க கேர் எடுத்து பார்த்துக் கொண்டது அங்க பெரிய விஷயமாக இருக்கு. ஆக, மது இறுதி வரைக்கும் தாக்குபிடிக்க ஒரு வாய்ப்புண்டு.

காலர் ஆப் தி வீக்கும் மதுவுக்கு தான். ‘இப்ப நடிக்கறிங்களா?’ என ஒரு கேள்வி. ஒரு கேரக்டர் கொடுத்தால் மது பட்டையைக் கிளப்பிவிடுகிறார். ஆனால் ரியல் லைஃப் சிச்சுவேஷனில் அவரால் நடிக்க முடியுமெனத் தோன்றவில்லை.

தர்ஷன், சாண்டி, மது மூணு பேருக்குமே முறையே தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கங்கள் கொடுக்கப்பட்டது. லாஸ் மற்றும் ஷெரினும் கடுமையான போட்டியாளராக இருப்பாங்க என்று தான் தோன்றுகிறது.

கடைசியாக கஸ்தூரி உளற ஆரம்பித்தார். மூன்று நாளிலேயே இவங்க சாயம் வெளுத்துப் போகும் என எதிர்பார்க்கவில்லை. சாக்‌ஷி, அபி, லியா மூன்று பேருக்கும் பாட்டு பாடச் சொன்னார் கமல். இந்த வீட்டிலிருந்து வெளியே போகும் போது சாண்டியும் கவினும், இம்மாதிரி பாடுவதில் டாக்டரேட் வாங்குமளவுக்குத் தேறி விடுவார்கள் போல. அவ்வளவு நன்றாக இருந்தது.

லோஸ்லியா, ‘முதலில் எனக்குப் பாடுங்க’ எனக் கேட்க, ‘நாங்க ஒரு ஆர்டர்ல வச்சுருக்கோம், அதுல தான் பாட முடியும்’ என முதலில் சாக்‌ஷி, பிறகு அபி, அதற்கப்புறம் லாஸ்க்குப் பாடினார்கள்.

இந்த ஆர்டர் உங்களுக்கு எப்படித் தெரியுமென கமல் கலாய்த்துக் கொண்டிருந்தார். ‘இந்த ஆர்டர்ல போகனும்னு ஆசைப்படறிங்களா?’ எனப் போட்டு வாங்கினார்.

பிறகு லோஸ்லியா காப்பாற்றப்பட்டார். ‘யார் வீட்டுக்குப் போக ரெடியா இருக்கீங்க?’ எனக் கேட்க அபி, சாக்‌ஷி இரண்டு பேரும் கை தூக்கினார்கள். ‘முதல்ல கை தூக்கின சாக்‌ஷி தான் எவிக்டட்’ எனச் சொல்லி சீக்கிரம் முடித்துவிட்டார்.

நான் முன்பே சொன்னா மாதிரி ஷெரின் தான் உண்மையாகக் கலங்கி அழுதார். ஆனா சாக்‌ஷியிடமிருந்து ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. ரொம்ப சீன்லாம் போடாமல் சீக்கிரம் வெளியே கிளம்பிவிட்டார். கவினிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இவ்வளவு சீக்கிரம் ஒரு எமோஷ்னல் வலையில் இருந்து பெண்களால் வெளியே வர முடியுமா?

‘சாக்‌ஷி, ஷெரினை யூஸ் பண்றாங்க’ என தர்சன் சொன்னதைக் கடைசி நேரத்தில் மறுத்துப் பேசிவிட்டுப் போனார். இந்தக் கருட புராணத் தண்டனைகளின் பட்டியலில், அபிராமி அழுவதைப் பார்க்கிறதையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு கொடூரமாக இருக்கு. மேக்கப் போடும் பெண்கள் என்ன தான் சோகத்தில் இருந்து அழுதாலும், ஓவர் சீன் போட்டால் மேக்கப் கலைந்துவிடுமென ஒரு கான்ஷியஸ் இருக்கும். ஆனால் முகம் முழுவதும் மேக்கப் போட்டு, அது கலைவதைப் பற்றிக் கவலையே படாமல் அழுகிறார் அபி. நேற்று ஷெரின் அழுததே ஓர் உதாரணம் தான். கையில் ஒரு டிஷ்யூ வைத்துக் கொண்டு தான் அழுதார். ஆனால் அதில் போலித்தனம் இல்ல. ஆனால் அபிராமி அழுதது உண்மையெனத் தோன்றவில்லை.

வெளியே வந்த சாக்‌ஷிக்குக் குறும்படம் காட்டப்பட்டது. கொஞ்சம் பெரிய குறும்படம் தான். 50 நாள் இருந்ததால் இருக்கலாம். அப்புறம் வீட்டுக்குள் இருக்கிறவங்களுக்கு அட்வைஸ் பண்ணினார். அதெப்படி வீட்டுக்குள் இருக்கற வரைக்கும் முட்டாளாக இருப்பவர்களுக்கு, வெளியே வந்த உடனே மற்றவர்களுக்குப் புத்திமதி சொல்கின்ற அளவுக்கு அறிவு வந்துவிடுகிறது??

கவின் சாரி சொன்னார். அவரது அப்பா இருந்தால் அவரிடமும் சாரி சொல்லச் சொன்னார். ‘கேம் விளையாடத்தானே செஞ்சீங்க இதுக்கு எதுக்கு சாரி?’ என சாக்‌ஷியின் அப்பா கேட்டார். அதற்கு சாக்‌ஷி துள்ளிக் குதித்தார். ரகசிய அறைக்கு அனுப்புவாங்க எனப் பார்த்தால், பிரதான வாசலை நோக்கி கை காட்டி விட்டுவிட்டனர். அதோடு கமலும் கிளம்பிவிட்டார்.

அதற்கப்புறம் வீட்டுக்குள் ஞானோதயம் வந்த மாதிரி பேசிக் கொண்டிருந்தார் அபி. கூட இருந்த ஷெரின் தான், ‘இன்னும் ஒரு வாரம் தான் இருப்பேன்’ எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனாலும் ஷெரின் சொன்னதில் லாஜிக் இருக்கு. அடுத்த வாரம் நாமினேஷனில் கண்டிப்பாக அபி இருப்பார். அடுத்த ஆள் யாரும் இல்லை. சேரன், ஷெரின், மது தான் அடுத்த டார்கெட்டாக இருப்பார். சானல் சப்போர்ட் இல்லையென்றால் கஸ்தூரியை முதலில் தூக்கிடுவாங்க என எதிர்பார்க்கலாம்.

‘நான் யாரையும் நாமினேட் செய்ய மாட்டேன், எந்த காரணமும் இல்லாம யாரை நாமினேட் செய்யறது?’ என ஷெரின் கேட்டுக் கொண்டிருந்தார். இது ஒரு கேம் எனப் புரிந்து கொண்டு விளையாடுவாரென எதிர்பார்க்கிறேன்.

சாண்டியைத்ந் தனியாகக் கூப்பிட்ட சேரன், லோஸ்லியா பற்றிய பாட்டில் சேரனைப் பற்றிப் பாடின வரிக்கு வருத்தப்பட்டார். சாண்டியும் தான் வேண்டுமென்றே செய்யவில்லை, காமெடிக்காக தான் செய்தோமெனச் சொல்லி மன்னிப்பும் கேட்க பிரச்சினை சுமூகமாக முடிந்தது. கவினிடம் இதைச் சொன்ன சாண்டி, சேரன் கிட்ட சாரி கேட்கவும் சொன்னார்.

‘சேரன் செய்தது சரியா?’ எனக் கேட்டால், அவர் தவற்ர்ன நினைக்கும் கருத்தைச் செயலைக் கண்டிக்கும் உரிமை அவருக்குண்டு. அதையும் ரொம்ப அழகாக டீல் செய்தார் என்று தான் சொல்லவேண்டும். சாண்டி / கவின் பாடியது சேரனே சொன்ன மாதிரி கோடிக்கணக்கான மக்களால பார்க்கப்படும். ஆக, ‘அது தவறு, இனிமே செய்யாதீங்க’ எனச் சொன்னதும், சரியான விதத்தில் கையாளப்பட்டு விட்டதாக நினைக்கிறேன்.

மற்ற்ந் ஹவுஸ்மேட்ஸ் மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணி, சம்பந்தப்பட்ட நபரைக் குற்றயுணர்ச்சியில் தள்ளி, அனைவர் முன்னாடியும் மன்னிப்பு கேட்க வைக்காமல், யாருக்கும் தெரியாமல் சம்பந்தப்பட்ட நபரை மட்டும் கூப்பிட்டுச் சொல்லி பிரச்சினை வளராமல் முடித்தது தான் அனுபவம். மேற்கொண்டு இதைப் பற்றிப் பேசாமல் இருந்தால், ஆல் இஸ் வெல்.

23 வயதில் முகினின் முதிர்ச்சியான பேச்சும் அணுகுமுறையும் வேற லெவலில் இருக்கு. கவின் சொல்கின்ற மாதிரி முகினுக்கு இது பெரிய வாய்ப்பு. அதை அவரும் உணர்ந்திருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.

மகாதேவன் CM