
சிவாவின் பிறந்தநாள் விழாவிற்கு, அவனது நண்பர்களான தியாகு, கதிர், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தியாகுவும், கதிரும் அவர்களது மனைவியுடன் கலந்து கொள்ள, அர்ஜுன் மட்டும் தனியாகக் கலந்து கொள்கிறான். அனைவரையும் வரவேற்கிறாள் சிவாவின் மனைவி பூஜா வரவேற்கிறாள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தும்போது, கைபேசியில் யார் ரகசியத்தைப் பாதுகாக்கின்றனர் என்ற விவாதம் விளையாட்டாய் நடக்கிறது. அதன் முடிவாக, யாருக்கு எந்தச் செய்தி வந்தாலும் அதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டும், அழைப்பு வந்தால் அதை லவுட்-ஸ்பீக்கரில் போட்டுப் பேசவேண்டுமென முடிவெடுக்கின்றனர். விளையாட்டு மெல்ல சூடுபிடித்து விபரீதமாவதுதான் படத்தின் கதை.
ரஞ்சனியுடன் லிவிங்-டுகெதரில் வாழும் கதிர் எனும் பாத்திரத்தில் டேனியல் ஆன்னி போப் நடித்துள்ளார். ரஞ்சனியாக ஜமுனா நடித்துள்ளார். தன்னைத் தானே நகைச்சுவையாளனாக நினைத்து ஏமாற்றிக் கொள்ளும் அர்ஜுனாக அர்ஜுனன் நடித்துள்ளார். அவரைத் திட்டித் தீர்க்கும் மனைவியாகப் பாதிப்படத்திற்கு மேல் தோன்றி, படத்தின் ஓட்டத்தையே மாற்ற உதவச் செய்துள்ளார் சஹானா. அனைவரின் ரகசியத்தையும் அறிந்த ஓட்டலதிபராக சிவா நடித்துள்ளார். அவரது பணக்கார மனைவி பூஜாவாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். பொய் சொல்லுவதில் வல்லவரான தியாகு, தன் தொழிலையே வக்கீலாக்கிக் கொண்டவர். தியாகுவாக விவேக் பிரசன்னாவும், அவருக்கு மனைவியாக ஸ்வயம் சித்தாவும் நடித்துள்ளனர்.
ஸ்வயம் சித்தாவின் தோழி, இரண்டு கால் (Call) தான் செய்கிறார். அதிலேயே ஸ்வயம் சித்தாவை முழுவதும் முடித்து விட்டுவிடுகிறார். மற்றவர்கள் எல்லாம் தங்கள் ரகசியங்களை மறைக்கப் படாதபாடுபடும் வேளையில், தனது ஆற்றாமையைத் தோழியிடம் பகிர்ந்து கொண்ட பாவத்திற்காகப் பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறார். தங்கையிடம் இருந்து வரும் அழைப்பை அழகாகச் சமாளித்துவிடும் சாக்ஷி அகர்வால், கடைசியில் தனது பிடிவாதத்தால், அசந்தர்ப்பமான நேரத்தில் அனைவரது முன்பும் அவமானப்பட நேருகிறது.
சாதாரண பிரச்சனைகளுக்கு எல்லாம் பெரிய முடிவெடுக்கும் இந்தத் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தைப் படம் சொல்லாமல் சொல்கிறது. தவறுவது மனித இயல்புதான், அதை ஊதிப் பெரிதுபடுத்தாமல் எப்படி விட்டுக் கொடுத்துக் கடப்பது என சாக்ஷி அகர்வாலின் கணவராக நடித்திருக்கும் பிரவீன் ராஜாவின் சிவா பாத்திரம் உணர்த்துகிறது. இதில் அதிகம் ரசிக்க வைப்பது விவேக் பிரசன்னாவின் கதாபாத்திரம் தான். தன்னைத் தற்காத்துக் கொள்ள அர்ஜுனனை மாட்டிவிட்டாலும், அர்ஜுனின் முறை வந்து அவர் சிக்கும்போது, அப்பழியை மறுக்காமல் அமைதி காக்கிறார். செய்த தவறை ஒப்புக் கொண்டு சஹானாவிடம் மன்னிப்பு கேட்கிறார். மனைவியின் மீதான கோபத்தைக் கொஞ்சம் ஆற்றாமையாக வெளிப்படுத்தினாலும், எங்கே அக்கோபத்தைக் கடந்து மூவ் ஆன் ஆகவேண்டும் எனத் தெரிந்து வைத்துள்ளார். குறிப்பாக, விளையும் குழப்பத்தினின்று எத்தகைய பாடம் கற்கவேண்டும் என்பதையும் உணர்த்தும் பாத்திரத்தில் அசத்தியுள்ளார் விவேக் பிரசன்னா.
மனதுக்கு நெருக்கமானவர்களின் மகிழ்ச்சிக்காகச் சிறுசிறு ரகசியங்களை மறைப்பதில் தவறில்லை எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் சக்திவேல். ஆரம்பத்தில் சில காட்சிகள் வெளியே நிகழ்ந்தாலும், ஒரு மேசையிலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் பயணிக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய ஓர் அட்டகாசமான ஐடியாவைப் பிடித்து, அதை முடிந்தவரை தக்கவைக்கும் திரைக்கதையையும் எழுதியுள்ளார் சக்திவேல்.