

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
பகவதி பெருமாளின் மனைவியாக நடித்த நடிகை சௌந்தர்யா, “என் சந்தோசத்தை சொல்ல அளவே கிடையாது. எனது 8 வருட திரைப்பயணத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இப்படிப்பட்ட வெற்றி மேடையில் முதல் முறையாகப் பேசுகிறேன். முதல் நன்றி அபிக்கு. வேறு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் தான் நான் வேண்டும் என என்னை காஸ்ட் செய்தார். சசிகுமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. சிம்ரன் மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை. அவர் அவ்வளவு ஃப்ரெண்ட்லி. அவருடன் மீண்டும் நடிக்க ஆசை” என்றார்.
பாடலாசிரியர் மோகன்ராஜன், “சசிக்குமார் சார் இது உங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸ். அயோத்தி படத்திலிருந்து உங்கள் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய பிரம்மாண்ட வெற்றிப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. என் ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் தந்த, ‘ஜில்லா விட்டு ஜில்லா’ பாடல் தான் என் திரை வாழ்க்கையை நிலை நிறுத்தியது. அதற்காக நன்றி. குட் நைட் படத்திற்குப் பிறகு தான், என் வெற்றிப்பயணம் துவங்கியது. கடந்த வருடம் லப்பர் பந்து எனக்கும் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படி ஒரு படம் மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு அமைய வேண்டும் என ஆசைப்பட்டோம் அது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடந்துள்ளது” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “எல்லாப் படங்களுக்கும் ஒரே மாதிரி தான் உழைப்போம். ஆனால் சில படம் நமக்கு ரொம்பப் பிடித்து விடும். யுவராஜ் பிரதர் நீங்கள் ஜெயிக்க வேண்டும், நீங்கள் நினைத்ததை விட அதிகம் நான் ஆசைப்பட்டேன், தமிழ் சினிமா மரத்தில் ஒரு புதுக் கிளை ஆலமரமாக முளைத்துக் கொண்டிருக்கிறது. அபியை இனி பிடிக்கவே முடியாது, முதல் படத்தை வெற்றிப்படமாகத் தந்து விடலாம் ஆனால் இப்படி ஒரு படத்தைப் பெரிய நடிகர்களை வைத்துச் செய்வது கடினம். அதைச் சாதித்த அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மாதிரியான பெர்ஃபாமருக்கு இசையமைத்தது பெருமை. சசி என் அண்ணன் அவரது சினிமா பயணத்திற்கான சரியான அங்கீகாரமாக இப்படம் அமைந்துள்ளது. சினிமாவுக்கு நிலைத்து நிற்க நல்ல குணம் தான் முக்கியம் அதை அவரிடம் உணர்ந்துள்ளேன்” என்றார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந், “என் ஃபேமிலியோடு படத்திற்குப் போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. சசி அண்ணா இந்தப்படத்தில் வருவது போல தான், உங்களுக்கே தெரியாது, நீங்கள் எனக்கு எவ்வளவு செய்துள்ளீர்கள் என்று, எல்லாவற்றிக்கும் நன்றி. சிம்ரன் மேம் உங்களுடன் வேலை பார்த்தது கனவு மாதிரி உள்ளது” என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான், “பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் அபிக்கு வாழ்த்துக்கள். என் தம்பி ஜெயித்தது போல் உள்ளது. சசி சாரின் தம்பி எனக்குப் பழக்கம். அவர் வீட்டுக்குப் போய் ஃபோட்டோ எடுத்து வந்துள்ளேன். ஆனால் அவரை வைத்துப் படமெடுப்பேன் என நினைக்கவில்லை. எங்கள் பேனரில் நடித்ததற்கு நன்றி. சிம்ரன் மேமுக்கு நான் மிகப்பெரிய ஃபேன். நான் படிக்கும் காலத்தில் ஷூட்டிங்கில் அவரைப் பார்க்க அலைந்துள்ளேன். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அற்புதமான இசையைத் தந்த ஷான் ரோல்டன் ஐயாவிற்கு நன்றி. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் மூலம் நல்ல படங்கள் தான் வருமென குட்நைட் பட விழாவில் சொல்லியிருந்தேன். அதே தான் இப்போதும் சொல்கிறேன். தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம்” என்றார்.
நடிகர் சசிகுமார், “நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா எனக் கேட்டீர்கள். கண்டிப்பாக ஏத்த மாட்டேன். இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டில் தான் எடுக்க வேண்டும், அப்போது தான் அது வெற்றி பெறும். இந்தப் படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேணாம் டிஃபரண்ட் டிஃபரண்டா படம் பண்ணலாம், வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் அப்படின்ற ஒரு நம்பிக்கையை, இந்தப் படம் கொடுத்திருப்பதாதான் நான் நினைக்கிறேன். ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்துகிட்டே இருக்காங்க. எனக்கு பல ஆண்டுகளுக்கு அப்புறம் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இது என்னோட வெற்றியா நான் நினைக்கவில்லை. இந்தப் படத்தின் வெற்றியை, ஒரு சசிகுமார் ஜெயிச்சுட்டான், ஒரு மில்லியன் டாலர் ஜெயிச்சிருச்சு அப்படின்னு நினைக்காதீங்க. புது தலைமுறை ஜெயித்துள்ளது. தோல்வி அடைஞ்ச இயக்குநர்களுக்கு இப்படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
என்னுடைய ஹையஸ்ட் வசூல் சுந்தரபாண்டியனும் குட்டி புலியும்தான். அதை இந்த டூரிஸ்ட்ஃபேமிலி தாண்டியுள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிவரும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வர வேண்டும் என்பதால் தான் இதைச் சொல்கிறேன். இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே யுவராஜ் ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருந்தார். என்னை விட இப்படத்தின் மீது நம்பிக்கை வச்சது இந்த ப்ரொடியூசர்ஸ் ரெண்டு பேரும்தான். அவங்கதான் இது மேல ரொம்ப நம்பிக்கை வச்சாங்க. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர் வந்து ரசிக்கிறார்கள். நல்ல படம் தந்தால் மக்கள் தியேட்டர் வரத் தயாராக உள்ளார்கள். இப்படத்தினை வெற்றிப்படமாகத் தந்த இயக்குநர் அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மேடமுக்கு நன்றி” என்றார்.
கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


