Shadow

ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

idhu vedhalam sollum kadhai

இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு.

முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, ‘ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்‌ஷன் படம் ஒன்றினை இருவரும் இணைந்து எடுக்கப் பேசி வந்த நிலையில், ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்திற்காகத் தன் அனைத்து வேலையையும் ஓரங்கட்டி விட்டு இந்தியா வந்துள்ளார் க்ரெக்.

அறுபதுகளுக்குப் பின்னான சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் கம்மியாகக் காணப்படுவதாக ஓரெண்ணம் ரதீந்தரனுக்கு. ரோப் கட்டி ஸ்டன்ட் செய்வதை ரசிகர்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆக, யதார்த்தமான புதுமையான ‘லைவ்’ சண்டைக் காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்கிறார் ரதீந்தரன்.

இரண்டாவதாக, படத்தில் மிக வலுவான கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். நடிப்பதற்குக் கொஞ்சம் சிக்கலான அக்கதாபாத்திரத்தில், அவர் நடிக்கச் சம்மதம் தெரிவித்ததில் இயக்குநர் ரதீந்தரன் R.பிரசாத் செம ஹேப்பியாகியுள்ளார்.

கொடைக்கானல் ஓன்ட் (Kodaikanal Won’t) எனும் சமூக அக்கறையுள்ள பாடலை இயக்கிய அவரின் சமீபத்திய இயக்கம், T.M.கிருஷ்ணா பாடிய ‘பொறம்போக்கு உனக்கு இல்ல; பொறம்போக்கு எனக்கு இல்ல’ என்ற வைரலான பாடலாகும். ‘ஸ்வேயர் கார்பரேஷன்ஸ் (Swayer Corporations)’ என்ற இவரது குறும்படம், சர்வதேச அரங்குகளில் பரவலான வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ரதீந்தரனைக் குறித்து, “சமூக அக்கறை கொண்ட மாடர்ன் மேன்” என்கிறார் ஜோக்கர் படத்தில் கலக்கிய குரு சோமசுந்தரம். படத்தின் தலைப்பில் வரும் வேதாளத்தைக் கொண்டே கதையின் அமானுஷ்யத்தன்மையை ஒரு மாதிரி யூகிக்க முடிந்தாலும், “மித் (myth) என்றால் என்ன, நம் முன்னோர்கள் அதை எப்படிப் பார்த்தார்கள் என மித்க்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கும்” என படம் பற்றி மேலும் ஆவலைத் தூண்டிவிட்டார் குரு சோமசுந்தரம்.

மூன்றாவதாக, படத்தின் தயாரிப்பாளர் பஷாக் கஸிலர். இவர் இயக்குநர் ரதீந்தரனின் காதல் மனைவி. துருக்கியில் பல படங்களுக்குத் தயாரிப்பு வேலைகள் மேற்கொண்டிருந்தாலும், பஷாக் கஸிலர்க்கு இந்தியாவில் தமிழ்ப் படத்திற்கான நிர்வாக வேலைகளைக் கவனிப்பது சிக்கலாகவும் குழப்பமாகவும் இருந்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், றெக்க படத்தைத் தயாரித்த காமன் மேன் கணேஷும், அவரது மனைவி சுபா கணேஷும் படத்தின் தயாரிப்பிற்குத் தோள் கொடுத்துள்ளனர்.

நான்காவதாக, படத்தின் ஒளிப்பதிவாளரான இத்தாலியைச் சேர்ந்த ரோபர்டோ ஜஸாரா. இவர் இயற்கை நிலப்பதிவுகளை (landscape) படம் பிடிப்பதில் கைத்தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஷெட்யூலை ராஜஸ்தானில் முடித்த குழு, அடுத்த கட்டமாக தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் படமாக்கவுள்ளனர். வேதாளத்தை அடக்கிய விக்கிரமாதித்யனின் தலைநகரான உஜ்ஜயினியிலும் படம்பிடிக்க உள்ளது சிறப்பு.

idhu vedhalam sollum kadhai posterஇறுதியாக, படத்தின் அனிமேஷன். விஷுவல் எஃபெக்ட்ஸாக இல்லாமல், அனிம் (anime) வகை அனிமேஷனில் கலக்கவுள்ளனர். பாங்காக்கின் Kantana Studios-இன் மிகப் பிரபலமான அனிம் ஸ்பெஷலிஸ்ட் பாப்சென்ட் ராக்சரங்க் அனிமேஷன் பொறுப்பினை ஏற்றுள்ளார். முற்றிலும் புதுமையான அனுபவம், தமிழ் ரசிகர்களுக்குக் கிடைக்கவுள்ளது என்பது திண்ணம். படத்தின் டிசைன்ஸை ட்ரொட்ஸ்கி மருது கவனிக்கிறார்.

விக்கிரமாதித்யனின் தோளில் தொங்கியவாறு கதை சொல்லும் வேதாளம், இப்படத்தில் தான் சொல்லும் கதையால் ரசிகர்களைச் சுமக்கவுள்ளது என ஆவலைத் தூண்டுகிறார் இயக்குநர் ரதீந்தரன்.