வெப்பமும் குளிரும் இணைந்தால் மழை பொழிவது போல், ஆணின் வெப்பமான விந்தணுவும், பெண்ணின் குளிர்வான கருமுட்டையும் இணைவதால் குழந்தை பிறக்கிறது என்பதை உணர்த்தும் குறியீட்டுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர்.
கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏச்சுபேச்சுக்கும் ஆளாகின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனுக்குத் கோயில் திருவிழாவில் கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஊர் பஞ்சாயத்தில், குழந்தையில்லாததால் அவமானப்படுத்துகிறார். நாயகனின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், நாயகி கணவனை விட்டு விலகி, நாயகனை இரண்டாம் கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறாள். அதில் நாயகன் ஆர்வம் நாயகன் காட்டாததால், நாயகி வேறொரு முடிவு எடுக்கிறாள். அம்முடிவு, அத்தம்பதியின் வாழ்வை எப்படிப் பாதித்தது என்பதே படத்தின் கதை.
கிராமத்து வாழ்வியலை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. நாயகனின் அம்மாவாக நடித்துள்ள ரமா, ஒருவர் வீட்டுப் படியேறி கூச்சலிடுவார். கோபமாக இருக்கும் அம்மாவைச் சமாதானம் செய்து நாயகன் அழைத்து வரும் வழியில், ‘இருடா, 2 கருவேப்பிலை உடைச்சுட்டு வர்றேன்’ என்று செல்வார். ‘ரெண்டுன்னு சொல்லிட்டு அதிகமாகப் பறிக்கிறா பாரு’ என இடித்துக் காட்டும் ஒரு குரல், அந்த வீட்டுக்குள் இருந்து கேட்கும். ‘எங்கிருந்து தான் பார்க்கிறாளோ?’ என அங்கலாய்த்துக் கொள்வார் ரமா. இப்படி பல சம்பவங்களைச் சுவைப்படத் திரைக்கதையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.
கிராமத்தில் பசுமாட்டுக்கு சினை ஊசி போடுபவர் நாயகன். அவரது வாழ்விலும் அபப்டியொரு சம்பவம் நடக்க, தான் மாட்டுக்குச் செய்த பாவத்தால்தான் இது நிகழ்கிறது என நினைத்துக் கொள்கிறார். ஆனாலும், நாயகனின் பிற்போக்குத்தனத்தை மீறி, மனைவி மீதான காதலின் மிகுதியாலும், ஊரில் நேர்ந்திருக்க வேண்டிய அவமானம் தவிர்க்கப்படுவதாலும், படம் சுபமாக முடிகிறது. சுபமாக முடிந்தால் போதாதென்று, நாயகனின் மீசையையும் சிறுமைப்படுத்திய மாதிரி இருக்கக்கூடாது என்பதற்காக, மகிழ்ச்சியாகச் சூழலை அமைத்துக் கொண்டால் போதும் என்ற தீர்வையும் வழங்கி சுபமோ சுபமாகப் படத்தை முடித்துள்ளார்.
‘யார் மலடி?’ என நாயகி வெடிக்கும்பொழுது, அதைப் புரிந்து கொண்டு அமைதியாகி விடுகிறார் நாயகனின் அம்மாவாக நடித்துள்ள ரமா. மகனுக்கு உண்மை தெரிய வந்து கோபப்படும்போது, மருமகளுக்கு ஆதரவாகப் பேசி தைரியம் தரும் இடத்தில், ரமா ரசிக்க வைக்கிறார். படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் திரவ். அவரது மனைவியாக இஸ்மாத் பானு நடித்துள்ளார். இருவருக்குமான அந்நியோன்யம் மிக அழகாக வந்துள்ளது. நடித்தவர்கள் அத்தனை பேருமே மிக எதார்த்தமாக நடித்துள்ளனர். குறிப்பாக, திரவும் இஸ்மாத் பானும் தோன்றுகின்ற காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பலம். இதற்கே, படத்தின் ஓட்டத்தைத் தடை செய்யும் சிங்கிள் ஷாட்ஸ்கள் நிறைய உள்ளது, அதுவும் நீளமாகப் படமாக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, தங்கள் நடிப்பால் நடிகர்கள் சுவாரசியப்படுத்தியுள்ளனர்.