Shadow

“வரலாறு அரசியல் சினமா | அதன் தாக்கங்கள்” – இயக்குநர் பா. ரஞ்சித்

இயக்குநர் பா. ரஞ்சித், ”சினிமா நம் வாழ்க்கை மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த சினிமாவை எப்படி பயன்படுத்த வேண்டும்? அந்த சினிமா தற்போது எப்படி இருக்கிறது?

நான் கலைக்கல்லூரியில் படிக்கும் போது சினிமாவை சரியாகப் புரிந்து கொண்டு தான் சினிமாவில் நுழைந்தேன். நான் கலைக்கல்லூரி சேர்ந்த பிறகு தான் முதன் முதலாக திரைப்பட விழாவினை நடத்தினார்கள். அதன் பிறகு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல உலக சினிமாக்களை பார்த்தேன். நான் பார்த்த பல உலக சினிமாக்கள் தான் என்னை உருவாக்கியது. அதனால்தான் இப்போது நான் இங்கு வந்து நின்றிருக்கிறேன். ‘சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்’, ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ , ‘சினிமா பாரடைஸ்’ இது போன்ற படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இது என்னைக் கவர்ந்தது. நான் ஓவியக் கலைஞராக இருந்தாலும் ஏன் திரைத்துறைக்கு செல்லக்கூடாது என நினைத்துதான் இதில் நுழைந்தேன்.

நாம் சினிமாவை இயக்கினால் நம்முடைய பிரச்சினைகளைச் சொல்லலாம் என நினைத்தேன். சொல்லப்படாத கதைகளை சினிமாவில் சொல்லலாம் என நினைத்தேன். இன்றும் சினிமா ஒரு ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகமாக இருக்கிறது. இந்த ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகத்தின் மூலமாகச் சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட வரலாறை மக்களிடம் எளிதாக கடத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.‌ இதனால்தான் நான் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன்.

சினிமா என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. வரலாற்றில் குறிப்பிடப்படாத நிறைய பகுதிகள் இருக்கிறது. வரலாற்றைப் படிக்கும் போது, ‘நான் யார்?’ என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி என்னுள் எழுகிறது. ‘வரலாற்றில் நான் ஏன் இப்படி இருந்தேன்?’ என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. என்னுடைய மக்களுக்கும் இப்படி ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஏன்? இவ்வளவு பாகுபாடு இருக்கிறது. ஏன் பிரிவினை இன்றும் இருக்கிறது என பல கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால், வரலாறு ஒரு பக்க சார்புடையதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை. அவர்களுடைய மொழி இல்லை.‌ அவர்களைப் பற்றிய குறிப்புகள் கூட இல்லை. தேடித்தேடி பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

இதுபோல்தான் சினிமாவிலும். எது மாதிரியான படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து எந்தப் படங்களும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான தேடலுடன் தான் நான் சினிமாவில் வந்தேன்.‌ குறிப்பாக பாபா சாகிப் அம்பேத்கரின் ‘தீண்டப்படாதவர்கள் யார்?’ என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது தான் மறைக்கப்பட்ட வரலாறை உருவாக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது.

கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட எழுத்துகள் தான் வரலாறா? மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீட்பது? ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய உணர்வைக் கற்பனையான உத்தி மூலம் மீள் உருவாக்கம் செய்வது தான் இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எனவே அந்த வரலாற்றின் தேவையை உணர்ந்து அதனைத் திரைப்படங்களின் மூலமாக நான் தேடுகிறேன். ஒரு மாணவனாக, ஒரு வரலாற்று ஆய்வாளனாக நான் இருப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். இந்த சினிமா, வரலாற்றைத் தேடுவதுடன் மட்டுமே நிறைவடைந்து விடுகிறதா? அது இல்லை. சினிமா என்பது இங்கு ஒரு வலிமையான ஊடகமாக இருக்கிறது. மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. மக்கள் அதனுடன் மிகவும் உணர்வுபூர்வமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வரலாற்று ஆய்வுகளோ அல்லது நம்பிக்கைகளோ மட்டும் சினிமா அல்ல. அது வெற்றிகாரமானதாக மாற்றம் அடையுமா என எனக்கு கணிக்கத் தெரியவில்லை.‌

சினிமாவிற்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்து தான் சினிமாவிற்குள் வந்தேன்.‌ ஆனால் சினிமா வித்தியாசமாக இருந்தது. அதிலும் தமிழ் சினிமா மிக வேறுபாடாக இருந்தது. தமிழ் சினிமாவில் நான் நினைக்கும் கருத்துக்களைச் சொல்ல முடியுமா என்ற பயமும் எழுந்தது. இந்த பயத்தை நீக்கியது எங்கள் இயக்குநர் வெங்கட் பிரபு தான்.

அவருடன் உதவியாளராக நான் பணியாற்றிய போது, ‘சென்னை 28’ படத்தில் அவர் சென்னையின் அடையாளத்தை கிரிக்கெட் மூலமாகப் பதிவு செய்திருந்தார்.‌ அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தை இளைய சமுதாயத்தினர் கொண்டாடினார்கள். சென்னை 28 படத்தின் வாழ்வியலும், என்னுடைய வாழ்வியலும் வேறு வேறு அல்ல. இரண்டுக்கும் அதிக நெருக்கம் உண்டு.‌ அப்போது ஒரு கொண்டாட்டத்தை, ஒரு மகிழ்ச்சியைச் சொல்லப்படாத கதைகள் மூலம் நாம் செல்லும்போது எளிதாக ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற ஒரு விசயத்தை வெங்கட் பிரபுவிடம் கற்றுக் கொண்டேன்” என்றார்.