Shadow

“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

அவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “சசியை பல இடங்களில் நண்பன் பிரஷாந்த் நினைவுப்படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், ‘வா’ என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், ‘நீ என் வாட்ச்சைப் பார்த்தாய் அல்லவா..! அதனால் உனக்குப் பிடித்த வாட்சை வாங்கிக்கொள்’ என்றார். அவரிடம் உரிமையாக, ‘எனக்கு அந்த வாட்ச் தான் பிடித்திருக்கிறது. அதனால் தான் அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன்’ என்றேன். உடனே அவர், ‘சரி அதை நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது ஒன்றைப் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொடு” என்றார். அதேபோல் நண்பர் பிரஷாந்த் ஒரு கண்ணாடியை அணிந்திருந்தார். அந்தக் கண்ணாடியை எடுத்து, ‘நன்றாக இருக்கிறதே!’ எனச் சொன்னேன். அன்று மாலையில் என்னைத் தேடி மூன்று கண்ணாடிகள் வந்தன. ‘உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அப்போது பிரஷாந்திடம், ‘இது போன்ற விசயங்களை நண்பர் சசிதான் எனக்குச் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு இப்படி ஒரு நண்பராக நீ எனக்குக் கிடைத்திருக்கிறாய்’ என்றேன். உன் பேரன்பிற்கு நான் என்ன செய்யப் போகிறேன்?

எப்போதும் பிரஷாந்த்தை நினைத்துக் கொண்டே இருப்பேன். அப்போது திடீரென்று காரணமே இல்லாமல் அவர் எனக்கு ஃபோன் செய்து பேசுவார். அப்போது நாங்கள் இருவரும், ‘ஐயா, ஐயா’ என்று தான் பேசிக் கொள்வோம். இதில் ஆழ்ந்த அன்பு உள்ளது. அந்தப் பேச்சில் காரணமே இருக்காது. அன்பு மட்டுமே இருக்கும். இப்போதெல்லாம் யாராவது ஃபோன் செய்தால், எதோ ஒரு விஷயத்திற்காகவே ஃபோன் செய்து பேசுவது எனப் பழகி விட்டோம். ஆனால் காரணமே இல்லாமல் ஃபோன் செய்து, ‘நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று அன்புடன் பேசுவது குறைந்துவிட்டது. ஆனால் இது போன்ற ஃபோன் பிரஷாந்திடமிருந்து எனக்கு வரும். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் எங்கேயோ ஏதோ ஒரு விஷயத்தைச் செய்திருப்பேன். அதைப் பார்த்துவிட்டு எனக்கு ஃபோன் செய்து பாராட்டுவார். அதுதான் எனக்கு அவர் மீது ஒரு பற்றை உருவாக்கியது.

எனக்கு இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பானது. இதன் தொடக்கப்புள்ளி எப்படி என்றால் இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இதே கேரக்டருக்காக என்னிடம் நடிக்கக் கேட்டனர், மறுத்துவிட்டேன். இதைத் தமிழில் ரீமேக் செய்யும் போது தம்பி கிஷோர் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டனர்.

எனக்கு தியாகராஜனைப் பார்த்தாலே பயம். எப்படி என்றால் நான் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராகப் பணியாற்றிய போது ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை ஓட்டி இருக்கிறேன். ‘கொம்பேறி மூக்கன்’ படத்தைத் திரையில் பார்க்கும்போதே எனக்குள் பதட்டம் வந்துவிடும்.

அவர் ஃபோனில் வணக்கம் என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று பதில் அளித்து விட்டேன். ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் நேரில் அவருடன் பழகும் போது தான் அவரின் பேரன்பினை உணர்ந்தேன்.

அவருடைய தோற்றம், ஆளுமை, அதைப் பார்த்துவிட்டு நாமும் இந்த வயதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது. அவருடைய அன்பிற்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

படப்பிடிப்புத் தளத்தில் வனிதா விஜயகுமார் வந்தார். படப்பிடிப்பின் போது இதுவரை யாரும் என்னைத் திட்டிராத வகையில் கெட்ட வார்த்தையால் திட்டினார். அந்தக் காட்சியில் அவர் என்னை த்திட்டிக் கொண்டே இருந்தார். நான் இயக்குநரைப் பார்க்கிறேன். அவர் என்னிடம் வந்து நான் சொல்லியதைக் கடந்தும் அவர் திட்டிக் கொண்டிருக்கிறார் என விளக்கம் அளித்தார். அதன் பிறகு வனிதா விஜயகுமாரைப் பார்த்தபோது, ‘இயக்குநர் தான் உங்களை இப்படி எல்லாம் திட்டச் சொன்னார்’ என தியாகராஜனை கை காட்டினார்.

உதவி இயக்குநராகப் பணியாற்றிய போது சிம்ரனைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த போது உண்மையில் மறக்க இயலாது அனுபவமாக இருந்தது. பிரசாந்த் இந்த படத்திற்குப் பிறகு இன்னும் மும்மடங்கு வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.