32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

Dinesh R சேலம் Published: 06/03/2026 2 நிமிட வாசிப்பு Updated: 11/03/2026 சினிமா
எழுத்து அளவு:

அறுபத்தாறாம் எண் வீட்டில் வசிக்கும் சங்கீதாவும், தொண்ணூற்று ஒன்பதாம் எண் வீட்டில் வசிக்கும் ரஞ்சிதாவும் தோழிகள். சங்கீதாவிற்கு அமானுஷ்யமான கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு நல்ல பெண் ஆத்மா இருப்பதே அதற்கெல்லாம் காரணம் என்று துர்கா தேவி அன்னையார் சொல்கிறார். அந்த ஆத்மா யார், ஏன் அங்கு இருக்கிறது என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

9966 எனும் எண் கொண்ட லாரி ஒரு காரை இடிப்பதாகப் படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. புத்தரின் பெயரைத் தாங்கிய அந்த லாரியில் தயாரிப்பாளரும் இயக்குநருமான மூர்த்தி கோபமாக வீற்றுள்ளார். அது நினைவா, கனவா, தீர்க்கதரிசனமா என்ற கேள்விக்கு எல்லாம் படத்தின் பின்பாதியிலேயே பதில் கிடைக்கிறது.

படகில் வெள்ளைப் புடவை அணிந்த பெண், ஓர் ஆந்தை, கருப்பு நாய் ஒன்று, பச்சைக்கிளி, கறுப்புப் பூனை, துறவி போல் ஆண் ஒருவர், அச்சுறுத்தும் ஒரு சாமியாரினி ஆகியோரைப் படத்தில் அடிக்கடி காட்டிக் கொண்டே உள்ளனர். படத்தொகுப்பாளர் மீனாட்சி சுந்தரம் இதைக் கவனமாகக் கத்தரித்திருந்தால், 90’களில் வெளிவந்த திகில் தொலைக்காட்சித் தொடரினைப் பார்க்கின்றோமோ எனப் பார்வையாளர்களுக்கு எழும் பிரமையைத் தவிர்த்திருக்கலாம்.

காட்சிக்குக் காட்சி புத்தரின் சிலையோ, புகைப்படமோ இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார் இயக்குநர். ஆனால், புத்தரைப் புறவயமாக மட்டுமே பயன்படுத்தி ஏமாற்றத்தைத் தருகிறார் மூர்த்தி. பெளத்தத்தின் எட்டு நெறிமுறைகளில் நான்காவதான நற்செய்கையின்படி கொல்லாமையைக் கடைபிடிக்க வேண்டும். பெளத்த நம்பிக்கையிலுள்ள அமானுஷ்ய ஆத்மா காப்பாற்றும் உயிர்களைக் கருப்பண்ணச்சாமி கோயிலில் வைத்து பலியிடப்படுவதாகப் படத்தை முடித்துள்ளார் மூர்த்தி. ஆத்மாவாகி விடும் மகள் மரணப்படுக்கையில் கேட்கும் சத்தியத்தையும் மதிக்காமல், பெளத்தத்தின் உன்னத நெறிமுறைகளையும் மதிக்காமல், பாவத்தின் மரணம் சம்பளம் எனும் நீதியை நிலைநாட்டி விடுகிறார். இத்தனை நாள் பூமியில் இருந்தது வீணாகப் போனதே என மனம் நொந்து அந்த நல்ல ஆத்மா விண்ணுலகம் செல்கிறது. வசதியாகப் போய்விட்டதென மூர்த்தியும், ‘பெண்களுக்கு அநீதி நடந்தால் தன் மகள் மீண்டும் வருவாள்’ என சாமர்த்தியமாகக் கொலைப் பழியையும் தூக்கி ஆத்மா மேல் போட்டு விடுகிறார். ‘சாமியே வந்து கொன்னுச்சு தீர்ப்பு வரும்’ எனக் கொலைகாரருக்கோ சாமியாரிடம் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

படத்தில் நகைச்சுவை வேண்டுமென ஜாவா சுந்தரேசன், முல்லை, கோதண்டம் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளனர். கதைக்குள் அவர்களைப் பயன்படுத்த இயக்குநர் முயற்சி மேற்கொண்டிருந்தாலும், சுமாரான எழுத்தால் அது எடுபடாமல் போய்விடுகிறது. ரஞ்சிதாவின் கணவன் கரணாக ரோகிந்தும், சங்கீதாவை விட வயது குறைவான கணவன் குணவாக சபரியும் நடித்துள்ளனர். இருவரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை எந்தக் குறையும் இல்லாமல் செய்துள்ளனர். ரஞ்சிதாவாக ஸ்வேதாவும், சங்கீதாவாக ரச்சிதா மகாலட்சுமியும் நடித்துள்ளனர். துர்கா தேவி அன்னையாராக ஒரேயொரு காட்சியில் கே.ஆர்.விஜயா தோன்றியுள்ளார்.

ஒரு தூய ஆத்மா எடுக்கும் முயற்சியை, நினைத்ததைச் சாதிக்கும் மனிதனால் முறியடிக்க முடியும் என்பதாகப் படத்தை முடித்தாலும், நுணுகிப் பார்த்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எக்காரணத்தைக் கொண்டும் மன்னித்து விடக்கூடாதென்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தியின் உயர்ந்த உளக்கிடக்கை புலப்படும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.