32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

Dinesh R சேலம் Published: 09/07/2025 3 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என சொல்லி அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை. குடும்பத்தினரும் அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு கொடுத்தும், போராட்டம் செய்தும் எதுவும் எடுபடவில்லை. அப்படியே 4 ஆண்டுகள் கழிய, வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டம் அவர்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததா இல்லையா என்பதே படத்தின் முடிவு.

கழுகு படத்தின் மூலம் அறிமுகம் ஆகிய இயக்குநர் சத்யசிவா கனமான படங்களைத் தருவதிலேயே அதிக ஆர்வம் கொண்டவர். உண்மையில் இந்தப் படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட, வேலூர் கோட்டையில் இருந்து விசாரணைக் கைதிகள் தப்பித்த சம்பவம் கூட ஒரு வரலாற்று நிகழ்வு தான். மிகச் சுவாரசியமான களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர், அதற்கான திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் தான் அந்தச் சம்பவமே அரங்கேறுகிறது. முதல் பாதியில் வழக்கமான, அகதிகள் முகாமில் இருக்கும் தமிழர்கள் பற்றிய காட்சிகளும், காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறலும் தான் வந்து இடம்பெற்றிருக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே நாடு இன்றி அலைந்து திரியும் ஈழத்தமிழர்களின் கஷ்டங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வலிகளையும் வசனங்கள் மூலம் ஆழமாகப் பதிய வைக்கிறார். போர் காலங்களில் அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஒரு காட்சியிலேயே மிகச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.

நாடு இன்றி அகதியாக ஒரு நாட்டில் தஞ்சம் புகுவது வேதனையளிக்கும் சங்கதியென்றால், வந்த இடத்தில் செய்யாத குற்றத்திற்காகத் தண்டனையை அனுபவிப்பதென்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயமாகும். இந்தக் கதைக்களத்துக்கான ஒளிப்பதிவைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் உதயகுமார். பல காட்சிகளில் வைட் ஷாட் வைக்காமல் சாமர்த்தியமாகத் தவிர்த்து அந்தக் காலத்தைக் காட்டியிருக்கிறார். பாடல்கள் பெரிதாக மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் கதை ஓட்டத்திற்கு நியாயம் செய்துள்ளார் ஜிப்ரான்.

டூரீஸ்ட் ஃபேமிலியைத் தொடர்ந்து, மீண்டும் இப்படத்திலும் இலங்கைத் தமிழராக வருகிறார் சசிகுமார். கலகலப்பான அப்படத்திற்கு நேரெதிராகத் தீவிரத்தன்மையுடைய கதையாக ஃப்ரீடம் படம் உள்ளது. அதற்கேற்ற நடிப்பை தந்திருந்தாலும், சசிகுமார்தான் பல நேரங்களில் நம் கண் முன் வந்து போகிறார். அவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ் நடிப்புக்குப் பெரியளவில் தீனி போட முடியாத ஒரு கதை. ஆனாலும் அவர் அவரும் காட்சிகளில் தனித்துத் தெரிகிறார். காவல்துறை அதிகாரியாக சுதேவ் நாயர், ஈவு இரக்கமற்ற ஒரு மாற்றுமொழிக்காரராக அதற்கேற்ற உடற்மொழியில் மிரட்டுகிறார். கேஜிஎஃப் மாளவிகா அவினாஷூக்கு, அவர் ஆளுமையான நடிப்புக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரம் வாய்த்துள்ளது. வாய் பேச முடியாதவராக பாய்ஸ் மணிகண்டன் நிறைவாக நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, மணிகண்ட ராஜன், போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோரும் குறையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

தி கிரேட் எஸ்கேப், சஷாங்க் ரிடெம்ப்ஷன் போன்ற ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும். ஆனால் இப்படத்தை ஒரு வரலாற்றுச் சம்பவமாக மட்டுமே மனதில் இருத்திப் பார்த்தால் நிச்சயம் பார்க்கக் கூடிய ஒரு படமாக ஃப்ரீடம் இருக்கும். 

– மாறன் செ

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.