32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மாயக்கூத்து விமர்சனம் | Maayakoothu review

Dinesh R சேலம் Published: 09/07/2025 3 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளனான வாசன், அவனது காதாபாத்திரங்கள் உலவும் உலகில் சிக்கிக் கொள்கிறான். தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் எனக் கோபத்தில் இருக்கும் கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளன் எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் முடிவு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எழுத்தாளனுக்குள் நடக்கும் விசாரமாக இந்தக் கதை நகர்கிறது. ‘சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்வதுதான் இந்தப் படத்தின் பின்னுள்ள ஐடியா’ என்றார் படத்தின் இயக்குநர் A.R.ராகவேந்திரா. படத்தின் ஒரு வரிக்கதை மாற்று சினிமாவிற்கான களம் போல் தொனித்தாலும், கலகலப்பிற்கு உதவியுள்ளது திரைக்கதை. தான் படைத்த உலகில் தானே சிக்கிக் கொண்டு படாதபாடுபடுகிறார் வாசன்.

மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார் வாசன். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தனது 50 ஆவது கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலில் இருந்து விடுபட நினைக்கிறார். ஆனால், கையில் கத்தியை எடுத்தால் அவருக்கு ஒரு விநோதமான பிரச்சனை எழுகிறது. இரண்டாவது தொடரில், மருத்துவராக நினைக்கும் பள்ளி மாணவியான ராஜிக்கு எதிரிலுள்ள ‘நீட்’ சிக்கல் அவளை பூச்சிமருந்து பாட்டிலை நோக்கித் திருப்புகிறது. மூன்றாவது தொடரில், செல்வியெனும் வேலைக்காரப் பெண்ணின் மீது இரண்டாயிரம் ரூபாய் திருடியதாகப் பழியைப் போடுகிறார் ராதிகா.

செல்வி, எழுத்தாளரின் வீட்டிற்கு வந்து, “நேர்மையான என் மீது ஏன் இந்தப் பழியைப் போட்டீங்க?” எனக் கேட்கிறார். பின்னாலேயே வரும் ராதிகா, “ஏன் புருஷன் மாதிரி செல்விக்கு சப்போர்ட் பண்ற வேலை வச்சுக்காதீங்க” என செல்வி பற்றி புரளி பேசுகிறார். தச்சராகப் பணிபுரியும் செல்வியின் கணவர், தனது மனைவிக்காக வாசனைக் கடத்திக் கொலை செய்ய முனைகிறார். அடிப்பட்டு மருத்துவமனைக்குப் போகும் வாசனிடம், “எனக்கு ஏன் சின்ன வயசுல இருந்தே டாக்டர் கனவை ஊட்டி வளர்த்தீங்க?” என்று ராஜி ஓர் ஊசியைப் போடுகிறார். ராஜியிடம் இருந்து தப்பி ஓடும் வாசன், தனபாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

“அது யாரு செல்வி? ஆங், அப்புறம் இன்னொருத்தி ராதிகா?” என வாசனின் மனைவி இந்து பஞ்சாயத்தைக் கூட்டுகிறார். நிழலிலும் நிஜத்திலும் சிக்கிக் கொண்டு தவிக்கும் எப்படி இதிலிருந்து தப்பிக்கிறார் என முடிந்த அளவு சுவாரசியம் குன்றாமல் எழுதியுள்ளனர் இயக்குநர் A.R.ராகவேந்திராவும், அவரது நண்பர் M.ஸ்ரீநிவாசனும்.

எடிட்டராக நடித்துள்ள டெல்லி கணேஷ், தனபாலாக நடித்துள்ள சாய் தீனா, சிற்பியாக நடித்துள்ள மு.ராமசாமி தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள். மையக் கதாபாத்திரமாக நடித்துள்ள நாகராஜன் கண்ணன் தான் படத்தின் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார். அவர் கொஞ்சம் ஜெயராமின் முக சாயலில் உள்ளதாலும், பார்வையாளர்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதாலும், அவர் புதுமுகம் என்பது மறந்து போய் அவரது அவஸ்தையை ரசிக்கத் தொடங்கிவிடுகின்றனர் பார்வையாளர்கள். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில், ஒரு கதையில் மட்டும் எழுத்தாளர் வாசன் சமூகப் பொறுப்பற்றவராக நடந்து கொள்கிறார். வாசனின் மனைவி இந்துவாக நடித்துள்ள S.K.காயத்ரி படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்றுள்ளார். கனவுகளைச் சுமக்கும் ராஜியாக நடித்துள்ள மிருதுளா, அப்பாத்திரத்தின் ஏக்கத்தையும் இயலாமையையும் கச்சிதமாகத் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார். குழந்தையை இழந்தவராக DNA படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ரகுபதி, இப்படத்தில் செல்வியாகச் சிறப்பாக நடித்துள்ளார். செல்வியின் கணவராக உடன்பால் படத்தின் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் நடித்துள்ளார்.

மிக மிகக் குறைவான பட்ஜெட் என்றாலும், தொழில்நுட்பத் தரத்தில் எந்த சமரசமும் இன்றி மிக நேர்த்தியானதொரு படத்தைக் கொடுத்துள்ளனர் படக்குழு. ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், அனிமேஷன் செய்துள்ள அதிதி ஹரிகுமார், போஸ்டர் வரைந்திருக்கும் ஓவியர் ஜீவா ஆகியோர்களது பங்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. சமூக ஊடகத்தில் வதந்திகளைப் பரப்புபவர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டால், இந்த உலகம் எவ்வளவு சுபிட்சமாக மாறும் என்ற எண்ணம் படம் பார்த்து முடிந்ததும் எழுந்தது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.