

‘தேன் நிலவு (1961)’ எனும் படத்தில், மிக பெப்பியான வார்த்தைகள 64 வருடங்களிற்கு முன்பே பயன்படுத்தி அசத்தியுள்ளார் கவிப்பேரரசு கண்ணதாசன். தற்போதும் வைப் செய்யும்படியான அவரது வார்த்தைகளைத் தலைப்பாகப் படத்திற்குச் சூட்டியுள்ளனர்.
இயக்குநராகும் முயற்சியில் உள்ள அஷ்வின், நடிகரான விஷ்ணு விஷாலைச் சந்தித்து கதை சொல்கிறார். காதல் கதையை எதிர்பார்க்கும் விஷ்ணு விஷாலுக்குத் தனது காதல் கதையையே சொல்கிறார் அஷ்வின். ஆனால், ஈகோவால் மீராவுடன் பிரேக்-அப் ஆகி நிற்கும் காதல் கதையை முழுமைப்படுத்த, மீராவைச் சந்தித்து உண்மைத்தன்மையுடன் கதையை முடிக்கச் சொல்கிறார் விஷ்ணு விஷால். மீராவைச் சந்திக்கச் செல்லும் அஷ்வினின் காதல் கைக்கூடியதா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
அஷ்வினின் முதல் காதல் பள்ளியில் நிகழ்கிறது. அஷ்வினால் காதலிக்கப்படும் சீனியர் பாத்திரத்தில் வைபவி நடித்துள்ளார். அஷ்வின்க்குக் கிடைக்கும் மொட்டை மாடியில் கிடைக்கும் முதல் முத்தத்தால் படத்தில் இளமை பொங்குகிறது. பள்ளி படிக்கும்போது அஷ்வினை ஏத்திவிடும் நண்பனாகவும், படம் முழுவதுமே நாயகனுக்கு உற்ற தோழனாகவும் நடித்துள்ள நிர்மல் பிள்ளை தனது பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். நிர்மல் பிள்ளையின் காதலை ஏற்றுக் கொள்ளும் நிவாஷினியும் மிக நல்ல தேர்வு.
யூகிக்க முடிந்த கதையாக இருந்தாலும், படத்தைக் கலகலப்பாக உணர வைப்பது இயக்குநராகவே வரும் மிஷ்கினும், நாயகனின் சித்தப்பாவாக வரும் கருணாகரணுமே! அவர்கள் இருவரும் ஒரே ஃப்ரேமில் தோன்றும்போது கலகலப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. விஷ்ணு விஷாலின் மேனஜராக வரும் ரெடின் கிங்ஸ்லியும் தன் பங்கிற்கு ஆங்காங்கே கலகலப்பூட்டியுள்ளார். “நீ தான் அந்த டாக்ஸிக்கா?” என நாயகனை முகத்திற்கு நேராகக் கேட்கிறார் ரெடின் கிங்ஸ்லி.
ஒரு டாக்ஸிக் ஆன நாயகன் தன் தவறை உணர்ந்து, உள்ளார்ந்த காதலுடன் காதலியைத் தேடி செல்வது மிக அரிதாகவே நிகழக்கூடியது என இப்படத்தின் கருவைப் பற்றிச் சுட்டிக் காட்டிப் புகழ்ந்திருந்தார் அமீர்கான். விளம்பரத்துக்காக என மிகைப்படுத்தி அவர் பேசியுள்ளார் எனக் கொண்டாலும், படம் அந்தப் புள்ளியைப் பட்டும்படாமலும், அதே சமயம் நேர்த்தியாகக் கையாண்டுள்ளது. கோபமும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உறவுகளால் காயமுறுகிறார் மீரா. திடீரென அத்தகைய குணம் அஷ்வினிடமிருந்தும் எட்டிப் பார்க்கிறது. அதற்கும் ஒரு கிளைக் கதை சொல்லியுள்ளார் அறிமுக இயக்குநரான 5 ஸ்டார் கிருஷ்ணகுமார். ஜோதிடத்தில் கண்மூடித்தமான பிடிப்புடையவராக அஷ்வினின் தந்தையாக நடித்திருக்கும் விஜயசாரதியும், குடும்ப சுமையைத் தனியொருவராகச் சுமக்கும் கஸ்தூரியும், எலியும் பூனையும் போல் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே உள்ளனர். அதைத் தடுக்க, அஷ்வினும் மூர்க்கத்தைக் கைகொள்ளுகிறான். படம் பார்க்கும் பொழுது, பிரேக்-அப்பிற்கான காரணம் சாதாரணமாகத் தெரிந்தாலும், மீராவின் மனநிலையினின்று அணுகினால் அதன் தாக்கம் புரியும்.
முதற்படம் இது எனச் சொல்ல முடியாத அளவுக்கு, அறிமுக நாயகனான ருத்ரா மிக இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார். முதல் காதல் கதை அத்தியாயத்தில் பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில், பக்கத்து வீட்டுப் பையன் போல் செம க்யூட்டாக இருக்கிறார். இலகுவாக மனதில் பதிந்து விடுகிறார். தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மிதிலா பால்கர், மீரா எனும் கதாபாத்திரத்தில் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றாகியுள்ளார். காதலையும் கலகலப்பையும் இணைத்து, முதற்படத்திலே யூத்-ஃபுல்லான ஒரு முத்திரையைப் பதிந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார்.

