

முதல் காதல் கைக்கூடாத விரக்தியிலும் கோபத்திலும் உள்ள ஒருவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவனுக்கு இரண்டாவது காதல் மலரும்போது, முதல் காதல், ‘மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும்’ எனக் கோரி நிற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.
மிகவும் இறுக்கமாகவும், பிரபஞ்சத்தின் மீது கடுங்கோபத்துடனும் இருக்கும் ரகுவரனை, மிக அதிகமாகக் காதலிக்கிறார் அவரது கல்லூரி ஜூனியரான அஞ்சலி. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ரகுவரன், அஞ்சலியை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த மனத்தடையுடன் தவிக்கிறார். ஆனால் அஞ்சலியின் உறுதி ரகுவரனின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. ரகுவரனுக்கும் அஞ்சலிக்கும் நிச்சயம் ஆனதும், ரகுவரனை இறுக்கமாக்கிய இந்திரா எனும் அவனது கடவுளிண்ட தேசத்துக் கடந்தகாலம் மீண்டும் கரை தட்டுகிறது. இசையும் நடனமும் கனவுகளும் இளமையாயும் வேகமாக வளர்ந்த அந்த இந்திரக் காதல், அப்போது ஏனென்ற காரணமே தெரியாமல் ரகுவரனுக்கு இல்லாமல் போகிறது. தற்போது மறுபடியும் ஒருமுறை வாய்ப்பிற்காக இந்திரா யாசிக்க, ரகுவரன் எடுக்கும் முடிவுதான் படத்தின் கதை.
படம் மெல்ல நகர்ந்து மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முனைகிறது. ஹேஷாம் அப்துல் வஹாபின் இசையும், அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் அதற்குத் துணை செய்கிறது. குறிப்பாகப் பின்னணி இசையும் பாடல்களும், காட்சிகளின் நகர்வுக்கு உதவுவதோடு, பிரதான கதாபாத்திரங்களின் மனநிலையையும் பிரதிபலிக்கவும் உதவியுள்ளது.
படத்தின் முதற்பாதி கோர்வையாகவும், நிதானமாகவும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலும் செல்கிறது. காதலில் ஒரு நிராகரிப்பைச் சந்தித்தவனின் மனநிலையைக் கச்சிதமாகக் கடத்தியுள்ளார் ரகுவரனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸ். முதற்பாதியில் இறுக்கமாகவும், இரண்டாம் பாதியில் மகிழ்ச்சியான முகத்துடன் நிறைவாக நடித்துள்ளர். தான் இழந்தது என்ன, தனக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது என்ற தெளிவை அவரடையும் தருணத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். காதலில் உறுதியாக இருப்பதாகட்டும், பிறந்தநாள் விழாவில் வெடிக்கும் நாயகனின் கோபத்தை ஏற்றுக் கொள்வதாகட்டும், முயற்சியைக் கைவிடாமல் தொடர்வதாகட்டும், அஞ்சலியாக நடித்துள்ள அதிதி ஷங்கர் அதீதமாய் நடிப்பதாகத் தோன்றினாலும், முடிவில் அந்தக் கதாபாத்திரத்தில் அவர் பொருந்தி விடுகிறார். இந்திராவாக அறிமுக நாயகி சோனா ஒலிக்கல் நடித்துள்ளார். ஒரு கல்லூரியின் கலை விழாவில் நாயகனுக்கு அறிமுகமாகிறார். கண்டதும் காதலிக்கும் நாயகனை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார். இளமை துள்ளலுடன் காதலித்துவிட்டு, எட்டு நாள் முடிவில், அக்காதலை வேண்டாமென மறுதலிக்கிறார். மறுதலிப்பதற்கான காரணத்தை மூடுபனி போல் காட்டி படம் முடியும் சமயத்தில் ப்ரீ-க்ளைமேக்ஸில் ஓப்பன் செய்கின்றனர். இந்த மறுதலிப்பும், அதற்கான சமாதானமும் வலுவற்றுப் பார்வையாளர்களைக் கவரத் தவறிவிடுவதால், படத்தின் இரண்டாம் பாதி அதன் இலக்கை அடைய மிகவும் மெனக்கெடுகிறது.


