ஆதி மனிதன் தான் வாழ்ந்த குகைகளில் பச்சிலை சாறு செம்மண் கொழுப்பு ஆகியவைகளை கொண்டு மிருகங்களின் உருவங்களையும் வேட்டையாடும் விதத்தையும் மிக அழகாக தீட்டியுள்ளான். குகைகளில் மட்டுமல்ல மலைச்சரிவுகளிலும் அவன் தீட்டியுள்ள பல்வேறு ஒவியங்களை இன்றும் காணலாம். அத்தகைய ஓவியங்கள் மத்திய பிரதேசத்திலுள்ள சிங்கன்பூர் மலைச்சரிவு, மிர்சாபூர், பாந்தா ஆகிய இடங்களிலுள்ள மலைச்சரிவுகளிலும், விந்திய மலைத் தொடரிலுள்ள மகாதேவன் மலையிலும், ஆந்திராவின் பெல்லாரி, கேரள வய நாட்டில் ஏதக்கல், தமிழகத்தில் மல்லபாடி, கீழ்வாலை, செத்தாவரை ஆகிய பகுதிகளில் ஆதிகால மனிதனின் ஓவியங்களை தாங்கி நிற்கிறது.
இந்திய ஓவியங்கள் புறகாட்சியை பிரதானப்படுத்தி காட்டினாலும் கூட அந்த புற பொருட்களின் உள்ளிடாக இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சிந்தனையும் விருப்பமும் வெளியே நோக்கி பயனப்பட்டால் எதிர்வரும் துன்பம் உள்முக பயனத்தில் இன்பமாக பரிணமிக்கிறது.
ஆரம்ப காலங்களில் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்திய ஓவியங்கள் கி.பி. 335-க்கு பிறகு அதாவது குசானர் காலத்து கிரேக்க, ரோம, ஈரானிய நுட்பம் கலந்து புறப்பொருட்களையும், அதில் கிடைக்கும் மனமகிழ்வையும், புதிய கற்பனைகளையும் வெளிப்படுத்த துவங்கின எனலாம்.
பொதுவாக அந்த ஓவிங்கள் புத்தரின் வாழக்கையை தெய்வீக தன்மையை விவரிப்பதாகவே அமைந்துள்ளதை காணமுடிகிறது. சிற்ப சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்படும் மிக நுணுக்கமான வரைமுறைகள் அஜந்தா ஓவியங்களில் பின்பற்றப்பட்டுள்ளது. அந்த ஓவியங்கள் முதலில் குகை சுவர்களில் அரிசி உமியும், தாவர பிசினும் களி மண்ணுடன் கலந்து சுவற்றைப் பளபளப்பாக்கி பல வண்ண கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டு எளிய முறையில் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. ஓவிய கோடுகள் கருப்பு மற்றும் செம்மை வண்ணங்களிலேயே அதிகமாக வரையப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்தில் ஏற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சியால் ஓவியக்கலை புத்துயிர் பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமலைபுரம் என்ற ஊரிலுள்ள குகை ஓவியங்களும் இதற்கு சரியான எடுத்து காட்டு, இந்த ஓவியங்களில் இறைவனின் திருவுறுவத்திற்கு இணையாக அரசன் அரசி படைவீரர்கள், நடனமாதர்களின் ஓவியங்களும் கலை நுணுக்கத்துடன் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை தக்காணத்தில் உள்ள எல்லோர ஓவியங்களிலும் கைலாச நாதர் கோவில் ஓவியங்களுக்கும் எந்த வகையிலும் சளைத்தது அல்ல. சோழர்கள் விஜய நகர மன்னர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஆகியோர் கால ஓவியங்கள் மிக சிறந்தது ஆகும்.
மரபுவழி ஓவியங்களை எழுதும் லதா, மாருதி, ஜெயராஜ், ராமு, உபால்டு, ஜமால் போன்ற தற்கால ஓவியர்கள் குப்தர்கால ஓவியர்களுக்கு நாங்கள் கொஞ்சம் கூட சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்றும் நிருபித்து வருகிறார்கள். மனித அங்கங்களை வரையும் லதா, ஜெயராஜியின் லாவகமும், அழகான விழிகளை கவிதை போல வடிக்கும் மாருதியின் கைவண்ணமும் எந்த காலத்திலும் இந்திய ஓவியபாணியை உலகுக்கு பறைசாற்றி கொண்டே இருக்கும்.









