Search

பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

bigg-boss-3-day-35

சாண்டி மீராவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மீரா, மீரா மாதிரியே பேசிக் கொண்டிருந்தார். அப்படியே கட் பண்ணினால் கமல் சார் என்ட்ரி. இந்த சீசனில் கமலின் காஸ்ட்யூம் டிசைன் பட்டாசாக இருக்கு. உண்மை வெளிவருமென மீரா சொன்னதை சமகால நிகழ்வுகளோடு கனெக்ட் பண்ணிப் பேசி, அதற்கு கைதட்டல் கிடைத்த உடனே, ‘அய்யய்யோ நான் இங்க வீட்டுக்குள்ள நடக்கறதை சொன்னேங்க’ என ஆக்டிங் கொடுத்தார். ரகசிய அறையைப் பற்றிச் சொல்லி, ‘வேணுமா?’ எனக் கேட்டு, ‘உங்களை எல்லாம் திருத்தவே முடியாது’ என நேராக அகத்திற்குள் போனார். போன வேகத்தில் எலிமினேஷன் பற்றித்தான் பேசத் தொடங்கினார்.

கமலைப் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்குப் படு உற்சாகமாக இருக்கார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரையும் பாகுபாடு இல்லாமல் கலாய்க்கிறார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததடுத்த டாபிக் போகும் போதும், முன்ன பேசினதுக்கும், அடுத்து பேசப்போறதுக்கும் ஒரு கனெக்ஷன் கொடுத்துக் கொண்டு போவது அருமையாக உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும், வாழைப்பழத்தில் ஊசி ஏத்துகின்ற மாதிரி, சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, யார் மனதும் புண்படாமல் சொல்வதில் எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இந்த ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டாலே போதும். படங்கள் சிக்கலில் இருக்கு, கட்சி தொடங்கி அதன் வேலை ஒரு பக்கம், இவ்வளவு பிரஷரிலேயும், இந்த வயதிலேயும், எவ்வளவு தெளிவாக வேலை பார்க்கிறார்? அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள எத்தனை விஷயங்கள் உள்ளன? ஹேட்ஸ் ஆஃப் கமல்.

கவினையும் சரவணனையும் சேஃப் எனச் சொன்னதும் பயங்கர வேகம். அதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார் சரவணன். அதையும் கிண்டல் பண்ணிவிட்டு, முப்பெரும் தேவியரிடம் வந்தார். அபிராமி, ‘நான் போமாட்டேன்’ என அடம் பிடிக்க, ‘வாங்க மீரா பேசலாம்’ என டக்கென்று கார்டு எடுத்துக் காண்பித்து முடித்து விட்டார். பிக் பாஸ் வரலாற்றிலேயே ரொம்ப சீக்கிரம் நடந்த எலிமினேஷன் இதுவாகத்தான் இருக்கும்.

அதற்குக் காரணமும் இருக்கு. ஞாயிறு யார் வெளியே போகப் போறாங்கஎன சோஷியல் மீடியா முழுவதும் தெரிந்து விடுகிறது. போன வருடம் அரசல் புரசலாகத்தான் நியூஸ் வரும். ஆனால் இந்தத் தடவை விஜய் டிவி போடுகின்ற ப்ரோமோ வீடியோ கமென்ட் செக்ஷனில், போட்டோவோடு போடுறாங்க நம்மாளுங்க. அதனாலேயே சண்டே எபிசோடில் எலிமினேஷனைக் கமல் நீட்டி முழக்கும் போது நமக்குக் கொட்டாவி தான் வருகிறது. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹவுஸ்மேட்ஸ்க்கும் பயங்கர ஆச்சரியம் தான். இவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டாங்களே என்று. ரகசிய அறை பற்றியெல்லாம் கூடப் பேச்சு வந்தது. மீராவை வழியனுப்ப சாண்டி, கவின், சரவணன் மட்டும் தான் கூட இருந்தாங்க. ‘எப்படியோ உங்க சவாலில் ஜெயிச்சுட்டீங்க!’ என சேரனிடம் சொல்லி சிரித்தார் மீரா. ‘முதலில் அந்தப் பொண்ணைத்தான் அனுப்புவேன்’ என சேரன் சவால் விட்டாராம். எனக்குத் தெரிந்து, ‘ஒன்னு நான் இருக்கணும், இல்ல அந்தப் பொண்ணு இருக்கணும்’ எனச் சொன்னதாக தான் ஞாபகம். மீரா, வேற ஏதோ கற்பனை உலகத்துல இருப்பார் போல. ‘சாகும் போது கூட அடுத்தவருக்கு இம்சை கொடுக்காம போக மாட்டீங்களாடா?’ என்ற கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வந்தது.

மீராவிடம் பேச ஆரம்பித்தார் கமல். இந்தப் பெண்ணைப் பேசவிட்டால் நிறுத்தவே முடியாது எனத் தெரிந்து கொண்டாரோ என்னவோ, தானே பேசிக் கொண்டிருருந்தார். எப்படியும் அட்வைஸ் பண்ணினால் இந்தப் பெண் கேட்கப் போறதில்லை என யோசித்து, மக்களிடம் அவங்க திருந்த ஒரு வாய்ப்பு கொடுங்க என அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தார். முதல் சீசனில் ஜூலி வெளியே போகும் போது இப்படி ஒரு அட்வைஸ் கொடுத்தார். மீரா அந்தப் பக்கம், ‘நான் கேட்டேனா முருகேஷா?’ என்ற மோடில் இருந்தார். குறும்படம் போட்டுக் காண்பித்து மீராவை ஒரு வழியாக வெளியே அனுப்பிவிட்டு, மறுபடியும் அகத்திற்குள் வந்தார்.

ஹவுஸ்மேட்ஸ்க்கு ஒரு கேம் காத்துக் கொண்டிருந்தது. போர்டில் இருக்கின்ற ஹவுஸ்மேட்ஸ் முகத்துக்கு நேராக அவங்க ஹீரோவா, வில்லனா, சீரோவா எனச் சொல்லவேண்டும். ஓரளவுக்கு சுவாரசியமாத்தான் இருந்தது. இறுதியில சேரன் அதிக ஹீரோ அவார்டும், தர்ஷன் அதிக வில்லன் அவார்டும் வாங்கினர். அதோடு ‘உங்கள் நான்’ ஆன கமல் விடைபெற்றுப் போனார்.

அதற்கப்புறம் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் ஆரம்பித்தது. சேரன், மது, ரேஷ்மா மூன்று பேரும், சேரன் – மீரா மேட்டரைக் கமல் ஹேண்டில் பண்ணின விதத்தைப் பற்றிச் சிலாகித்தனர். அந்தப் பக்கம் சாக்ஷி, அபியை அழைத்து அட்வைஸ் கொடுத்தார். ‘முகினோட டேலன்ட் வெளியே வராத அளவுக்கு உன்னோட குறுக்கீடு இருக்கு. இது உனக்கும் நல்லதில்லை, அவனுக்கும் நல்லதில்லை’ என சாக்ஷி சொன்னபோது வியப்பாக இருந்தது. ‘ஏம்மா இதே அட்வைஸ் உனக்குப் பொருந்தாதா? நீயும் வந்த வேலையை விட்டுட்டு கவின் பின்னால தான் சுத்திட்டு இருக்கே!’ என மைண்ட் வாய்ஸ் கேட்டதில், ‘ச்சேச்சே இவனையா கும்பிட்டோம், வீட்டுக்குப் போனதும் கையை அடுப்புல வச்சு கரிக்கிடனும்’ என்ற மொமென்ட்டுக்குப் போய்விட்டேன்.

வெளியே வந்த அபிராமி நல்ல பிள்ளையாக முகினை கூப்பிட்டு வைத்து, சாக்ஷி சொன்னதைச் சொன்னார். என்னவோ தானே சிந்திந்துக் கண்டுபிடித்த மாதிரி ஒரு தொனி அவங்க பேசினதில் தெரிந்தது. ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீங்கிற மாதிரி அங்க வந்த லோஸ்லியாவுக்கும், ஒரு ஃப்ரீ அட்வைஸைப் போட்டு விட்டார் அபி. கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு அட்வைஸை தான் இரண்டு வாரத்துக்கு முன்னாடியே மது அபிராமியிடம் சொன்னார். ஆனால் வார்த்தைகள் மாறிப்போனதில் அது திசை மாறி போய்விட்டது.

“ ‘இந்த வாரம் வெளிய போகமாட்டே!’ என நான் யாரைப் பார்த்து சொல்றேனோ அவங்க வெளிய போய்டறாங்க” எனத் தனக்குள் ஒரு லெக்தாதா இருக்கிறதைப் பற்றி சாண்டி புலம்பியதோடு நாள் முடிந்தது.

மகாதேவன் CM