‘நாடோடி, போக வேண்டும் ஓடோடி’ என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் ஆரம்பித்தது நாள். சாண்டி மட்டும் விழுந்து விழுந்து ஆடிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் மாதிரி ஆக்ஷன் கொடுத்து ஆடியதைப் பார்த்து பிக் பாஸ் டீமுக்கு பல்பு எறிந்திருக்கும். பாத்ரூமில் இருக்கும் போதே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த வீடே இரண்டாகப் போகுதென சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடந்தது. முதல் ஆளாக சாக்ஷி தான் கவின் பேரைச் சொல்லி ஆரம்பித்து வைத்தார். கவின், சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, மதுமிதா தான் இந்த வார எலிமினேஷனில் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம். சிலர் சொன்னதைக் கேட்டால், ‘இதெல்லாம் ஒரு காரணமய்யா?’ எனத் தோன்றியது. தன்னை நாமினேட் பண்ணினார் என்பதற்காகத் திருப்பி சாக்ஷியை நாமினேட் செய்தார் சரவணன். முடிந்த உடனே எல்லோரும் ஹக் பண்ணி, ‘எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க!’ எனச் சொல்லிவிட்டுப் போனாலும், அப்படியெல்லாம் நடக்கற வீடா இது? ஒரு பக்கம் அபிராமி முறுக்கிக் கொண்டு போக, இன்னொரு பக்கம் ரேஷ்மா பேயறைந்த மாதிரி ஆகிவிட்டார். மது மட்டும் தான் கொஞ்சம் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டார்.
பெட்ரூமில் பேசிக் கொண்டிருக்கும் போது, மது ஒரு முக்கியமான கேள்வி கேட்டார். இரண்டு வாரமாக கவின் மூலமா சில பிரச்சினைகள் வந்த போது கூட ஆண்கள் யாருமே கவினைக் கேள்வி கேட்கவே இல்லை. அவனை யாருமே நாமினேட் பண்ணவே இல்லை. ஆனா பெண்களை தான் தொடர்ந்து நாமினேட் செய்கின்றனர். முக்கியமான கேள்வி தான். இந்த வாரத்தை எடுத்துக் கொண்டாலும் கூட, கவினைத் தவிர நான்கு பெண்கள் நாமினேஷனில் உள்ளனர்.
இதைக் கேட்ட ரேஷ்மா, ‘நான் உடனே ஆண்கள் கிட்ட இதை கேட்டே ஆகணும்’ என அங்கே நின்று கொண்டிருந்த சரவணனிடம் கேட்டார். “இன உணர்வு” என சரவணன் சிம்பிளாக ஒரு பதில் சொன்னார். ஒரு ஆண் சக ஆணுக்கு சப்போர்ட் செய்வதென நேரடி அர்த்தம் வந்தாலும், ஒரு ஆணாக சக ஆண்களை புரிந்து கொள்கிறார்களென எடுத்துக் கொள்ளலாம். மது கேட்டதற்கான பதிலும் சரவணனிடம் இருந்தே கிடைத்தது.
“கவின் பாத்ரூம்ல எதுக்குக் கத்தினான்னு எனக்குத் தெரியாது. அதுக்கப்புறம் என்ன நடந்ததுனு தெரியாது. அவங்க ரெண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு எனக்குத் தெரியாது. இப்படி எதுவுமே தெரியாத போது நான் அதைப் பத்திப் பேசவே கூடாது” எனத் தெளிவாகப் பதில் சொன்னார்.
ஆண்கள் ஒன்றாகவே இருந்தாலும் இன்னொருவரின் பிரச்சினையில் அனாவசியமாக மூக்கை நுழைப்பதில்லை. அடுத்தவங்க பிரச்சினையை தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு சுற்றுவதில்லை. தன் கண் முன்னால் நடந்த விஷயங்களுக்கு மட்டுமே தான் ரியாக்ட் செய்கின்றனர். முக்கியமாக, ‘அவன் சாரி கேட்டுட்டான்ல? விட்ரு’ என அடுத்ததைக் கவனிக்கப் போய் விடுகின்றனர். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. தோழி, ப்ரெண்டு என உரிமை எடுத்துக் கொண்டு, தேவையில்லாத நேரத்திலும் அட்வைஸ் பண்ணி குட்டையைக் குழப்பிக் கொண்டுள்ளனர்.
இன்னொருத்தருக்கு நடந்த பிரச்சினையைத் தனக்கானதாக நினைத்துக் கொண்டு, அதற்கு ரியாக்ட் பண்ணி, அந்தப் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கி விடுகின்றனர். அபிக்காக, சாக்ஷிக்காக, ஷெரினும் வனிதாவும், ரேஷ்மாவும் அவங்க எதிரியை தன் எதிரியாகப் பார்க்கிறார்கள்.
தனக்குத் தெரியாத ஒரு விஷயத்துக்கு கண், காது, மூக்கு வைத்து, ‘இது இப்படி நடந்திருக்கும், அவங்க என்னைப் பத்தி இப்படி பேசிருப்பாங்களோ!’ என யோசித்து யோசித்து, அவங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, இன்செக்யூர்டாக ஆகறதில் பெண்களுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும்.
மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறமும் எந்த விஷயத்தையும் கடந்து போவதே இல்லை. அதுவும் இந்த வீட்டுல இருக்கற எந்ப்த பெண்ணும் மன்னிக்கிறதே இல்லை. ஆண்களில் சரவணன் மட்டும் தான் இந்த க்வாலிட்டியில் இருக்கிறார். அவரும் கூட, ‘என்னை ஜெயிலுக்கு அனுப்பினாங்க’ என அபியை நாமினேட் பண்ணின சரவணன், அந்த நேரத்தில் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லையென ஒரு ஆண் பேரைக் கூட நாமினேட் பண்ணவில்லை. ஆனால் அதே விஷயத்துக்கு அவர்களிடம் நேரடியாகப் பேசி சண்டை போட்டுத் திட்டினார்.
அதில்லாமல் உனக்காகத்தான் இந்த ஸ்டாண்ட் எடுத்திருக்கேன் எனச் சொல்லி எமோஷ்னல் ப்ளாக்மெயில் செய்வதும் பெண்கள் தான். பிறகு இது ஒரு சைக்கிள் மாதிரி, இவங்க சப்போர்ட் செய்ததற்காக அவங்க திருப்பிச் செய்வதும் நடக்கிறது.
நேற்று ரேஷ்மா பேசினதையே உதாரணமாகச் சொல்லலாம். ‘சாக்ஷிக்கு ஒரு பிரச்சினை வந்தது. அவ என் ப்ரெண்ட். அதனால அவளுக்காக நான் நின்னேன். அவளுக்குச் சப்போர்ட் பண்றேன்’ என முகினிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதுவே இந்தப் பக்கம் சேரனிடம் சாக்ஷி, ஷெரின் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு லோஸ்லியா பக்கம் திரும்பியது. சேரன், லியாவை தன் மகளாகப் பார்க்கிறார். லியாவும் அப்படியே. இருந்தும் அவளோட பர்சனல் அது, நான் தலையிட முடியாது என விலகி நிற்கிறார் சேரன். அதையே தான் சாக்ஷியிடமும் சொன்னார். ‘கவினும், லியாவும் என்ன பேசினாங்கன்னு தெரியாது, அப்படி இருக்கும் போது அதைப் பத்திப் பேச என்ன இருக்கு?’ எனக் கேட்டார். ‘லியா ஒன்றும் குழந்தை இல்லை. இது அவ பிரச்சினை. அவளே பார்த்துக்குவா’ எனச் சொன்னது தான் பெரும்பாலான ஆண்களோட மனநிலையாக இருக்கும்.
கிட்டத்தட்ட சரவணன், தர்ஷன், முகின், சாண்டி எல்லாருமே நண்பர்களாக இருந்தாலும், பர்சனல் என வரும்போது ஸ்பேஸ் கொடுத்து விலகி நிற்கிறார்கள். தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதே இல்லை. தேவையில்லாமல் அட்வைஸ் கொடுத்து மற்றவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்வதில்லை.
நேற்று, சரவணன் கவினிடம், ‘இது உனக்குத் தேவையில்லை, பார்த்துக்க, பேரை கெடுத்துக்காத, அவ்வளவு தான் நான் சொல்லுவேன்’ என அட்வைஸ் செய்தாரே தவிர இன்ஃப்ளூயன்ஸ் செய்யவில்லை. அதுவும் சரவணன் வயதில் பெரியவர் என்ற முறையில் தான் சொல்லிருப்பார். ஆனால் சாண்டியோ, தர்ஷனோ இதைக் கூடச் சொல்ல மாட்டார்கள்.
அதே சமயம், கவின் மேட்டரில், சாக்ஷி, ஷெரின், ரேஷ்மா மூன்று பேரும் எத்தனை தடவை கூடிக் கூடிப் பேசியிருப்பார்கள்? எத்தனை விதமான ஸ்பெகுலேஷன்ஸ், எத்தனை அட்வைஸ்!!
சாக்ஷியிடம் கத்திப் பேசித் திட்டினதாகக் காரணம் சொல்லிதான் கவினை எல்லோரும் நாமினேட் செய்தார்கள். ஆனால் கவின் கேட்ட மாதிரி, “அதுக்கப்புறம் என்ன நடந்தது? நாங்க என்ன பேசினோம்னு யாருக்குமே தெரியாது. அப்புறம் எதுக்கு இதுல ஒரு முடிவு எடுக்கணும்?” எனக் கேட்டது நியாயமான கேள்வி.
இதே காரணத்துக்காக தான் சாக்ஷி மேல் செம்ம கடுப்பில் இருந்தார் கவின். ஏனெனில் சாக்ஷி முதல் பேராகக் கவினைச் சொன்னதால தான், மற்றவர்களும் அப்படியே சொன்னதாகக் கவின் உறுதியாக நம்புகிறார்.
‘ஒரு வாரம் நான் நிம்மதியா இருந்தது பொறுக்கலையா யாருக்கும்?’ என அந்தப் பக்கம் அபிராமி அழுது கொண்டிருந்தார். இந்தப் பக்கம் ரேஷ்மா, கவினைக் கட்டிப் பிடித்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பக்கம் சாக்ஷி வர கவின் திருட்டு முழி முழித்தது ஒரு குட்டி ஹைக்கூ.
“என்னை ஏன் நாமினேட் பண்ணின? நா என்ன குத்தம் செஞ்சேன்? நான் யாருக்கு என்ன துரோகம் செஞ்சேன்?” என அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டு முகினைக் குற்ற உணர்ச்சியில் தள்ளிவிட்டார் ரேஷ்மா. இந்த வாரம் பொறுத்தவரைக்கும் வீக்கான கன்டஸ்டென்ட் ரேஷ்மா தான். அது அவர்களுக்கும் தெரியும். முதல் முறையாக எலிமினேஷனுக்கு வந்திருக்கிறார். ஆக, இது எல்லாம் சேர்ந்து ரொம்பவே பயந்துவிட்டார்.
இடையில் சரவணனை கன்ஃபெஷன் ரூம்க்கு கூப்பிட பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க சொன்னார். காலையில சாண்டி எம்.ஜி.ஆர் மாதிரி ஆடினார் இல்லையா? அதையே கன்டென்ட் ஆக்கிவிட்டார். அவரும் செம்ம பெர்ஃபாமன்ஸ் கொடுத்து சிரிக்க வைத்தார். ரொம்ப இறுக்கமாக இருந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு நல்ல ரிலீஃப் கிடைத்திருக்கும். நமக்கும் தான்.
மதுமிதா பிறந்த நாள் கொண்டாடுவதோடு இன்றைய நாள் முடிவுக்கு வந்தது. சேரன், கரவணன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் மது.
– மகாதேவன் CM