Shadow

பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

Bigg-boss-3---day-41

மீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக வந்து நின்றார். இரண்டு பட வேலைகள், அரசியல் கட்சி என எவ்வளவு பிரஷர் இருக்கும். ஆனால் ஏற்றுக் கொண்ட வேலையை ரசித்துச் செய்தோம் என்றால் எப்படி ரிசல்ட் இருக்கும் என்பதற்கு கமல் ஒரு உதாரணம். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் ஒரு காமெடி சீன் இருக்கும். ‘அறிந்தது, அறியாதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் எமனுக்குத் தெரியும்’ என கமல் டயலாக் பேசவேண்டும். சரியாகச் சொல்லாமல் இயக்குநரிடம் திட்டு வாங்குவார். அப்பொழுது காரணம் சொல்லுவார் – ‘கழுத்துல பாம்பு ஊறுது, கைல இருக்க பம்புல இருந்து தண்ணி வரணும், மாடு வேற மிரளாம பார்த்துக்கணும், டயலாக்கும் சொல்லணும்னா எப்படி சார்?’ ஒரே நேரத்துல பல வேலைகள் செய்யும் போது அந்த வேலையின் தரத்தில் நாம் சமரசம் பண்ணிக் கொள்வோம். கேட்டாலும், “ஒரே நேரத்தில் இத்தனை வேலை செய்து பார்த்தால் தெரியும் உனக்கு” என வியாக்கானம் பேசுவோம்.

ஆனால் இத்தனை வேலைகள் இருந்தும், அவ்வளவு பிரஷர் இருந்தும் கமல் செய்கின்ற வேலையில், அவர் கொடுக்கின்ற ப்ரொடக்ட் தரத்தில் எந்த சமரசமும் செய்வதில்லை. கமலிடம் கற்றுக் கொள்ள மேலும் ஒரு விஷயம். இந்த சீசன் முழுவதுமே செம உற்சாக மனநிலையில் இருக்கிறார். அதன் வெளிப்பாடு தான் ஒவ்வொரு எபிசொடும் சும்மா தெறிக்குது.

ஹவுஸ்மேட்ஸைக் கலாய்த்த விதம், ஆடியன்ஸ் உட்பட, பிரச்சினைகளை அவர் அணுகின விதம், தேர்ந்தெடுத்த வார்த்தைகள், அதை ப்ரசென்ட் செய்த விதம், யாரையும் காயப்படுத்தாமல் அவர் சொன்ன தீர்வுகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

முந்தின நாள் நிகழ்வுகள்:

ஆண்கள் ஒரு அணியாவும், பெண்கள் ஒரு அணியாவும் பிரிந்து ஒரு கேம் விளையாடினார்கள். இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. ஆனாலும் அதில் தர்ஷன் சொன்ன கதை நல்லா இருந்தது. என்ன ஒன்று, ஜோக் சொல்லிவிட்டு அவரே சிரித்துக் கொள்வதைக் கொஞ்சம் நிறுத்திக் கொள்ளலாம். புதிய தலைவர் முகின், அணி பிரித்து விட்டார். சேரனும் சரவணனும் ஒரே அணியில் சேர்த்தார்.

அடுத்து அகம் டிவி வழியே அகத்திற்குள்.

ஓப்பன் நாமினெஷனைப் பற்றிப் பேசி எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். இந்தத் தடவையும் நாமினேஷனில், பம்மிப் பதுங்கிய சாண்டிக்கு ஒரு குட்டு. கவினிடம் பேச ஆரம்பித்து, ‘சரி இருங்க நாம அப்புறம் பேசிக்கலாம்’ எனக் கவினின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துவிட்டுப் போனார்.

இந்த வாரம் டாஸ்க்கைச் சிறப்பாகச் செய்த மது, சாண்டி, இவங்களுக்கெல்லாம் பாராட்டு கிடைத்தது.

சேரன் சரவணன் பஞ்சாயத்துக்கு வந்து நின்றது. “உங்களுக்குள்ள என்ன முன்விரோதம்?” என நேரடியாகச் சரவணனிடம் கேட்கவும், “அவர் ஒரு டைரக்டர், நான் ஒரு நடிகர். அவ்வளவு தான் சார், வேற ஒன்னும் இல்லை” என சரவணன் மழுப்பினார். ரொம்ப டீப்பாக அனலைஸ் செய்யாமல் சரவணன் சொன்ன விஷயத்தை எடுத்து, அதில் இருந்தே தீர்ப்பு கொடுத்தார் கமல். நான் பீக்ல இருந்த போது சேரன் உதவி இயக்குனர், அதனால எனக்கு உரிமை இருக்கு என சரவணன் சொன்னதை நினைவுபடுத்தி, அது தவறெனச் சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்தார். சரவணனும் சேரனிடம் மன்னிப்பு கேட்டார்.

அடுத்து கவின்-சாக்ஷி-லோஸ்லியா பிரச்சினை. “இப்படி ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகாதீங்க. உள்ள இருக்கற மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும்” என எடுத்துச் சொன்னார். மூன்று பேருமே மையமாக மண்டையை ஆட்டினார்கள். டேய்களா ஒன்னு இப்படி ஆட்டு, இல்ல அப்படி ஆட்டுங்கடா மொமென்ட். ரேஷ்மாவை உதாரணப்படுத்தி சாக்ஷிக்கு புத்திமதி சொன்னது நன்றாக இருந்தது. ஆனால் அது எந்தளவுக்குப் பொருந்தி போகுமென ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

மதுமிதா சேஃப் எனச் சொன்னதோட சனிக்கிழமை நிகழ்ச்சி முடிகிறது.

மகாதேவன் CM